கிக் – ரொம்ப ‘லேட்’டான படம்!

நகைச்சுவை படங்களில் திறமையான நடிப்புக் கலைஞர்கள், சிரிப்பதற்கு ஏற்ற காட்சியமைப்புகள், அதற்குத் தக்கவாறு மெருகூட்டப்பட்ட வசனங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிரிப்பதா வேண்டாமா என்ற தடுமாற்றத்தைப் பார்வையாளர்களிடம் அறவே உருவாக்காத திரைக்கதை ஆகியன இருக்க வேண்டும்.

இது போக பவுடர் அடித்து, பட்டி டிங்கரிங் பார்க்கும் ‘அலங்கார’ வேலைகள் தனி.

சந்தானம், தான்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, பிரம்மானந்தம், மறைந்த மனோபாலா, செந்தில் உட்படப் பலர் நடித்துள்ள ‘கிக்’ படத்தில் அந்த ‘அலங்கார’ வேலைகளை மட்டும் கனகச்சிதமாகப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ். இதற்கு மேலும், ‘படம் எப்படியிருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெற்றிக்குப் பிறகு, அதே போன்றதொரு சந்தானம் படம் பார்க்கும் உற்சாகத்தோடு தியேட்டருக்குள் நுழைந்த நாம் என்ன கதியில் வெளியே வருகிறோம் என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும்.

‘கிக்’கான கதையா இது?

சந்தோஷ் (சந்தானம்) ஒரு விளம்பரப்பட இயக்குனர். பிற விளம்பர நிறுவனங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளையும் கூட அபகரித்துப் பணம் பண்ணும் மனோபாவம் கொண்டவர்.

அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான எம்ஜே (தம்பி ராமையா), மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்.

ரொம்பவே தாமதமாகத் திருமணம் செய்துகொண்டவர். முதலிரவு நிகழும் முன்னரே, அவரது மனைவி கோபப்பட்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்.

இந்தச் சூழலில், ஒரு கார் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவரை (செந்தில்) முறைகேடான செயல்களில் ஈடுபடுத்தி, புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் கார் விளம்பரத்திற்கான வாய்ப்பைப் பெறுகிறார் சந்தோஷ்.

இதனால், அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்த ஷிவானி (தான்யா ஹோப்) ஏமாற்றமடைகிறார்.

ஷிவானி சார்ந்த நிறுவனம், அந்த கார் விளம்பரத் தயாரிப்பின் பின்னணியைக் குறிப்பிட்டு இந்திய விளம்பரத் தர கவுன்சிலில் புகார் செய்கிறது. ஆனால், அந்த முறைகேட்டில் பங்கேற்ற பெண் மாடல் ஒருவர் கவுன்சில் விசாரணையின்போது சந்தோஷுக்கு ஆதரவாகத் தன் பதிலைத் தெரிவிக்கிறார்.

அவ்வாறு சொல்வதற்காக ‘பிளாக்பஸ்டர்ஸ்’ என்ற பெயரில் ஒரு போலி விளம்பரப் படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறார் சந்தோஷ். இதை அறிந்ததும், ஆத்திரத்தின் உச்சத்தை அடைகிறார் ஷிவானி.

சில தினங்கள் கழித்து, பிளாக்பஸ்டர்ஸ் விளம்பரம் தவறுதலாக ஊடகங்களில் வெளியாகிறது. அதையடுத்து, அதில் காட்டப்பட்ட பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் சந்தோஷ்.

பொய்யான விளம்பரம் என்பதால், அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கின்றன. அவற்றைச் சாத்தியப்படுத்த, பாங்காக்கில் இருக்கும் விஞ்ஞானி வாலி (பிரம்மானந்தம்) தான் சரியான சாய்ஸ் என்று நினைக்கிறார் சந்தோஷ்.

அதே ரகத்தில் அமைந்த அவரது கண்டுபிடிப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

அவரது திட்டத்தை முறியடிக்க, ஷிவானியும் பாங்காக் செல்கிறார். சந்தோஷும் அவரும் நேரில் சந்திக்கின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஷிவானி யார் என்று சந்தோஷுக்கு தெரியும். ஆனால், சந்தோஷ் இன்னார்தான் என்று ஷிவானிக்கு தெரியாது. மேலும், ஷிவானியைப் பார்த்ததும் சந்தோஷுக்கு பிடித்துப் போகிறது.

அப்புறமென்ன, தமிழ் சினிமா வழக்கப்படி உண்மையை மறைத்து ஷிவானியிடம் பழகுகிறார் சந்தோஷ். அது காதலாகவும் மாறுகிறது. அதன்பிறகு என்னவானது? சந்தோஷை பழிவாங்கும் ஷிவானியின் முயற்சி நிறைவேறியதா என்று சொல்கிறது ‘கிக்’.

சரி, இந்த படத்திற்கு ஏன் ‘கிக்’ என்று பெயர் வைக்க வேண்டும். கிளைமேக்ஸ் திருப்பத்தில் அதற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த காட்சியைக் கண்டு நீங்கள் சிரிப்பீர்கள் என்றால், முழுப்படத்தையும் தாராளமாகப் பார்க்கலாம். அப்படி கிளைமேக்ஸ் காட்சியைப் பார்ப்பதற்கு முன்னதாக முழுப்படத்தையும் பார்த்துச் சிரித்திருக்க வேண்டும். என்ன, தலை சுற்றுகிறதா?

ஏன் இந்த வேலை?

சந்தானத்தை வழக்கமான கமர்ஷியல் ஹீரோ போன்று காட்ட முயற்சித்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். அதற்கேற்றவாறு, அவரது பாத்திரத்திற்கான வசனங்களையும் ‘மிகத்திறமையாக’ (?!) தயார் செய்திருக்கிறார்.

ஆனால், பொருத்தமான கதையையோ, காட்சிகளையோ உருவாக்கவில்லை. அதனால், சந்தானம் என்னதான் ‘மாடுலேஷன்’ மாற்றி கலாய்த்தாலும் சிரிப்பு வருவேனா என்கிறது.

நல்ல உடல்வாகு இருந்தால் ‘மாடல்’ ஆகலாம்; ஆனால், அவர்கள் அனைவரும் நல்ல நடிகையாகவோ, நடிகராகவோ ஆக முடியாது என்று திரையுலகில் சொல்லப்படுவதுண்டு. தான்யா ஹோப் அதற்கொரு உதாரணம்.

ரேம்ப் வாக் நடக்க வேண்டியவரை நடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதற்கான தண்டனையைத் தொடர்ந்து தந்து வருகிறார் தான்யா. இதிலும் அப்படியே!

பெரும்பாலான காட்சிகளில் மைக்கேல் ஜாக்சன் அணிந்த சிவப்பு நிற ‘ராணுவ’ உடையுடன் வலம் வருகிறார் தம்பி ராமையா. சுருள் முடி விக் வைத்தால், அவரை எம்ஜே ஆக ஏற்றுக்கொள்வோம் என்று நம்பியிருக்கிறார் இயக்குனர். பாவம்!

தம்பி ராமையா பாத்திரத்தின் பிரதிபலிப்பாக, கோவை சரளாவை ‘சிவப்பு நிற’ விக் உடன் தோன்ற வைத்திருக்கிறார். இவர்கள் போக மனோபாலா, மதன் பாப், செந்தில், மன்சூர் அலிகான், சேது, கிங்காங் என்று ஒரு கும்பலே நடித்திருக்கிறது. அப்படியிருந்தும் சிரிப்பு வராததை என்னவென்று சொல்வது?

நாயகனையும் நாயகியையும் விளம்பரப் பட நிறுவனங்களில் வேலை செய்வதாகக் காட்டியிருப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு பிரேமையும் ஒரு புகைப்படம் போல வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதாகர் ராஜ்.

மோகன் கெரேவின் கலை வடிவமைப்பு படத்தை அழகூட்ட முயற்சித்திருக்கிறது.

முடிந்தவரை, காட்சிகளையும் அதில் நிறைந்திருக்கும் வசனங்களையும் நெருக்கமாகக் கோர்த்து ‘வேகம் கூட்ட’ முனைந்திருக்கிறது நாகூர் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு.

இன்னும் காஸ்ட்யூம்ஸ், டான்ஸ், பைட், சவுண்ட் என்று ஒவ்வொரு பிரிவிலும் பல பணியாளர்கள் இணைந்து வேலை செய்துள்ளனர்.

அவற்றில் இருந்து தனித்து நின்று, படத்தை மேலும் செறிவானதாக மாற்ற உழைத்திருக்கிறது அர்ஜுன் ஜன்யாவின் இசையமைப்பு. பின்னணி இசையிலும் வேறொரு உணர்வை ஊட்டப் பாடுபட்டிருக்கிறது.

ஆனாலும், அதற்குப் பலன் கிட்டாமல் போகிறது. காரணம், இயக்குனர் பிரசாந்த் ராஜ் தேர்ந்தெடுத்திருக்கும் ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’. அது ‘ஏன் இந்த வேலை’ என்று நம்மைக் கேட்க வைக்கிறது.

குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம்!

நிச்சயமாக, இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க முடியாது. காரணம், தம்பி ராமையாவும் சந்தானமும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் அந்த அளவுக்கு வசனங்கள் ‘ஓவர்’ ரகம்!.

இரட்டை அர்த்தம் என்றில்லை, நேரடியாகவே குறிப்பிடும் அளவுக்கு இருக்கின்றன. அதற்கேற்றவாறு கதையமைப்போ, காட்சிகளில் அதற்கான தேவையோ இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை.

ஆனால், ஒரு விஷயத்தில் ‘கிக்’ நமக்கு ஒரு பாடத்தைப் போதித்திருக்கிறது. இதே பாணியில், கடந்த காலத்தில் நாம் பல படங்களைப் பார்த்திருக்கிறோம்.

அவற்றில், சோகக் காட்சிக்கு அடுத்தபடியாக ஒரு ‘நெருக்கமான’ காதல் காட்சி இருக்கும். அதற்கடுத்த காட்சியிலேயே, இரட்டை அர்த்த வசனம் பேசி நாயகன் நகைச்சுவையை ஊட்டுவார்; அதனைத் தொடர்ந்து ‘பெண்களைப் போற்றும்’ வசனமொன்றை உதிர்த்து அடியாட்களோடு சண்டையிடுவார். இப்படி நாம் பார்த்து ரசித்த ‘அவியலான’ திரைக்கதை அணுகுமுறையே கிக் படத்திலும் இருக்கிறது.

ஆனால், சந்தானத்தை நகைச்சுவை நாயகனாகப் பார்த்த காரணத்தால் அல்லது திரையோடு ஒன்றும்விதமான மாயாஜாலத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் ஊட்டாத காரணத்தால், இப்படத்தைக் குறை சொல்ல வேண்டியிருக்கிறது.

நிச்சயமாக, இது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவுவதற்கு ஒப்பானது.

அதனால், இனிமேலாவது ‘காயப்படுத்துவதையும் மருந்திடுவதையும்’ அடுத்தடுத்து செய்யும் நாயகர்களுக்கு நாம் துதி பாடாமல் இருப்பது நலம் பயக்கும்.

சரி, ‘கிக்’ விஷயத்திற்கு வருவோம். சந்தானம் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ‘சிலம்பாட்டம்’ வெளிவந்த காலத்தில் நம் மனதிலொன்று குடுகுடுவென்று ஓடுமே, அதனைத் தன் மனதில் ஓட்டிப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ். அதற்கேற்றவாறு ஒரு படத்தையும் தந்திருக்கிறார்.

பிரசாந்த் ராஜ் சாரே, இதற்கு நீங்கள் ‘டைம் மெஷினில்’ ஏறி பதினைந்து ஆண்டுகள் பின்னே சென்று இந்த படத்தைப் படைத்திருக்க வேண்டும்.. இது ரொம்ப லேட்டு சாரே..!

– உதய் பாடகலிங்கம்

You might also like