முதன்முறையாகத் திரையில் ஒரு பிம்பம் அசைவதைக் கண்டவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? அவர்களது வியப்பில்தான், உலகத் திரைப்பட வரலாறு தொடங்குகிறது.
என்னதான் வளர்ச்சி பல கண்டாலும், திரைத்துறையின் அடிநாதமாகவும் அந்த உணர்வே விளங்குகிறது.
உலகின் எங்கோ ஒரு மூலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு திரைப்படத்தின் வழியாக, அந்த ஆச்சர்யம் துளி அளவாவது மறுபிறப்பு எடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.
அதனைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் எத்தனை போராட்டம்?! அதன் உச்சமாகத்தான், உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரை எனும் சாதனையை நோக்க வேண்டியுள்ளது.
மாறாமலிருப்பது எது?
ஒரு தியேட்டரை நிர்மாணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பல நூறு பேர் எளிதாக நுழையவும் வெளியேறவும் ஏதுவாக வாயில்கள் அமைப்பதில் தொடங்கி, அரங்கின் உள்ளே எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஏறக்குறைய ஒரேமாதிரியான திரைப்பட அனுபவம் கிடைப்பது வரை பல அம்சங்களைச் சரியாகக் கட்டமைக்க வேண்டும்.
டிக்கெட் வாங்குவதற்கு என்றே அமைக்கப்பட்ட தடங்கள் சுரங்கப் பாதைகளைப் பின்னுக்குத் தள்ளும்விதமாக இருக்கும்.
அவற்றில் தொடங்கி வாகன நிறுத்துமிடம், கேண்டீன், கழிவறை வசதி, முன்புற வளாகம் என்று ஒவ்வொன்றிலும் பார்வையாளர்களின் தேவைகள் என்னவென்று கவனித்துக் கட்டமைக்க வேண்டிய சூழல் நிலவியது.
காலம் மாற மாற, தியேட்டர் கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அம்சமும் பல மாற்றங்களைக் கண்டன.
பால்கனிக்கு செல்லும் படிக்கட்டுகள் தொடங்கி ஒரு தியேட்டர் உள்ளே அதிகப்படியாக இருந்த ஒவ்வொரு அங்குலமும் வேறு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டன.
ஒருகாலத்தில், போஸ்டரின் மினியேச்சராக விளங்கிய ‘போட்டோ கார்டு’களை வைப்பதற்கென்றே ஒவ்வொரு தியேட்டரிலும் தனியாக ஒரு கண்ணாடி அலமாரி இருக்கும். அப்படிப்பட்ட பரப்புகள் எல்லாம் இன்று ஆறாவது விரல்.
இன்றைய மல்டிப்ளெக்ஸ்களில் அவற்றுக்கு இடம் கிடையாது. அவற்றுக்குப் பதிலாக, எல்இடி திரைகளில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இப்படிப் பல மாறுதல்களுக்கு உட்பட்ட தியேட்டர் அரங்கினுள் மாறாமல் இருப்பது திரை இருக்கும் இடம் தான். அதிலும் கூட, திரைக்கு முன்னும் பின்னுமாக ஒலியமைப்பு சாதனங்கள் உட்படப் பல்வேறு விஷயங்கள் மாறியிருக்கின்றன.
திரையை உருவாக்கப் பயன்படுத்தப்படும் உள்ளடக்கம் முதல் அதன் அளவை அகன்றதாக்கும் முயற்சிகள் வரை பல மாற்றங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கின்றன.
அதன் ஒரு பகுதியாகவே, இன்று ஐமேக்ஸ் நுட்பம் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.
ஒரு பிரேமில் எந்த இடத்தை உற்றுநோக்குவது எனும் அளவுக்கு, திரைப்படத்தை மிக நுணுக்கமாகக் கவனிக்கவைத்து மீண்டும் மீண்டும் படம் பார்க்க வைக்கும் தந்திரத்தை அது லாவகமாகச் செயல்படுத்துகிறது.
அகன்ற திரை!
சினிமாவை ‘வெள்ளித்திரை’ என்று சொல்லும் வழக்கம் இன்றும் உண்டு. அதற்குக் காரணம், ஒருகாலத்தில் வெள்ளி பூசப்பட்ட திரைப் பரப்பிலேயே பிம்பங்கள் ஒளிர்ந்தன.
அப்போது காரண காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை பின்னாட்களில் ஒரு உவமையாக மாறியது ரசிக்கத்தக்க முரண் தான்.
தியேட்டர்களில் திரைக்குப் பின்னால் என்ன இருக்கும் என்ற கேள்வி சிறு வயதில் பலமுறை தோன்றியிருக்கிறது.
இடைவேளையின்போது கழிவறைக்குச் சென்றால், சில தியேட்டர்களில் திரைக்குப் பின்னிருக்கும் பகுதியில் ஒரு கதவு இருப்பதைப் பார்த்த அனுபவமும் சிலருக்கு இருக்கலாம்.
அந்தக் கதவுக்கு அப்பால் ஒலிபெருக்கிகள் தகுந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்திருக்கலாம்.
பகல் காட்சியின்போது, அந்தக் கதவைத் திறந்தால் அவற்றின் நிழலைக் கண்டுவிட்டு ‘ஹோ’வென்று சத்தமிடுவது மறக்க முடியாத அனுபவம்..
ஹீரோவும் வில்லனும் சண்டையிடும்போது, ‘இந்தா தலைவா’ என்று தீவிர விசிறி ஒருவர் வீசிய கத்தியால் திரை கிழிந்ததாகவும், எல்லா வட்டாரத்திலும் ஒரே கதை உலவியதுண்டு. அது உண்மையா என்று தெரியாது.
ஆனால், அதன் பின்னே எந்த அளவுக்குத் திரை மீது மக்கள் அபிமானம் கொண்டிருந்தார்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
சிறுவயதில், கொஞ்சம் பெரிய அளவிலான வேட்டியைத்தான் தியேட்டர்களில் திரையாகப் பயன்படுத்துவதாகச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அது உண்மை என்றே நம்பியிருக்கிறேன். ஆனால், திரையைத் தொட்டுப் பார்த்தவர்களுக்கு ‘அது உண்மையல்ல’ என்று தெரியும்.
டூரிங் டாக்கீஸ் அல்லாமல், நிரந்தரமான கட்டடங்களைக் கொண்ட தியேட்டர்களில் அந்த திரைக்கு முன்னே மேலிருந்து கீழாகவோ அல்லது மையத்தில் இருந்து இரு முனை நோக்கியோ விலகிச் செல்லும் வகையில் ஒரு ‘காப்புத் திரை’யும் தொங்கவிடப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் புரொஜெக்டர் ஓடத் தொடங்குவதற்கு முன்னர் அல்லது ‘ஸ்லைடு ஷோ’ தொடங்கிய பின்னர் ‘ரோபோடிக்’ இசைத்துணுக்கு பின்னணியில் ஒலிக்க, அந்த காப்புத் திரை விலகுவது பேரானந்தத்தைத் தரும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் துணி உட்படப் பலவற்றைப் பயன்படுத்தி திரை செயல்பட்ட காலம் மாறி, இன்று வினைல் பயன்பாடு வந்துவிட்டது.
திரையில் தெரியும் பிம்பங்களின் தரமும் ஒலியின் நுட்பமும் வெகுவாக மாறிவிட்டது. அதனை மேலும் ஒருபடி உயர்த்தும்விதமாக, ஐமேக்ஸ் நுட்பம் இன்று பல பெருநகரங்களில் அறிமுகமாகியிருக்கிறது.
மிகப்பெரிய ஐமேக்ஸ் திரை!
அதிகப்படியான பிம்பம் என்ற அர்த்தம் தரும் இமேஜ் மேக்ஸிமம் வார்த்தைகளின் சுருக்கமே ‘ஐமேக்ஸ்’. 1.43:1 அல்லது 1.90:1 என்ற விகிதத்தில் இதற்கான திரை உயர்ந்து காணப்படும்.
24 மற்றும் 18 மீட்டர் அல்லது 79 மற்றும் 59 அடிகள் அளவு கொண்டதாக இத்திரை இருக்கும்; பிற்பாடு இந்த அளவு உலகம் முழுக்க மாறுபடத் தொடங்கியது.
தற்போது மிகப்பெரிய ஐமேக்ஸ் நுட்பம் கொண்ட தியேட்டர்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என்று பல பெருநகரங்களில் வந்துவிட்டன.
அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ஜெர்மனியின் லியோன் பெர்க்கில் உள்ள ட்ராமாப்ளாஸ் மல்டிப்ளெக்ஸில் மாபெரும் ஐமேக்ஸ் திரையொன்று ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது.
இது 68.8 அடி உயரமும் 127.2 அடி அகலமும் கொண்டது; 8,770.43 சதுர அடி பரப்பளவு உள்ளது. கிட்டத்தட்ட போயிங் 737 விமானத்தை விடவும் அகலமானது.
லேசர் தொழில்நுட்பம் கொண்டு இதன் பரப்பை அளந்த கின்னஸ் நிறுவனம், இதனை உலகிலேயே மிகப்பெரிய திரை கொண்டதாக அங்கீகரித்துள்ளது. இந்த தியேட்டரில் 574 இருக்கைகள் உள்ளன.
இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் திரையிடப்படும் முதல் இந்தியப் படம் எனும் பெருனையைப் பெறுகிறது அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’.
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரச் செயல்பாடு, கோணங்கள் மாற்றம், விதவிதமான ஷாட்கள், அவற்றை அடுக்கிக் காண்பிக்கும் படத்தொகுப்பு எல்லாவற்றையும் கண்டு ’எவ்ளோ பெரிய படம்’ என்று பிரமிக்க ‘ஐமேக்ஸ் திரை’யே சரியான வழி.
அந்த வகையில், லியோன் பெர்க்கில் உள்ள இந்த தியேட்டரில் ‘ஜவான்’ பார்த்த அனுபவத்தை இனிவரும் நாட்களில் அறியலாம்..
விரைவிலேயே, அதற்கு ஒப்பான அனுபவங்கள் நம்மூரில் நமக்கும் கிடைக்கட்டும்..!
– உதய் பாடகலிங்கம்