ஒரு நல்ல நகைச்சுவை படம் எடுப்பதற்கு ‘டைமிங் சென்ஸ்’ தெரிந்த நடிப்புக்கலைஞர்கள் போதும். அவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தால், நகைச்சுவை கொண்டாட்டமும் அதிகப்படும். போலவே, ‘பேண்டஸி’ படம் எடுப்பதற்கு நல்லதொரு ஐடியா தேவை. அது போக காட்சியமைப்பில் புதுமை மிளிர்ந்தால் திரைக்கதையில் சுவாரஸ்யம் கிடைக்கும்.
மேற்சொன்ன எல்லாவற்றையும் பின்பற்றுவதாகச் சொல்லிவிட்டு பாதியிலேயே ‘ஜகா’ வாங்கினால் என்னவாகும்? ஆதி, ஹன்சிகா, யோகிபாபு நடித்த ‘பார்ட்னர்’ தரும் அனுபவமும் அப்படித்தான் இருக்கிறது.
லட்சங்களில் சம்பாத்தியம்!
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார் ஸ்ரீதர் (ஆதி). ஒரே மாதத்தில் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். ஏன் அவ்வளவு பெரிய தொகையை ஒரு மாதத்திற்குள் சம்பாதிக்க வேண்டும்? கடனாக வாங்கிய தொகையைக் கட்டாமல் விட்டதன் விளைவு அது. அதனைச் செய்யாவிட்டால் என்னவாகும்? கடன் கொடுத்தவர் அவரது தங்கையைக் கல்யாணம் செய்துகொள்வார். அந்த ஆபத்தில் இருந்து தங்கையை மீட்கத்தான், ஸ்ரீதர் சென்னையில் கால் பதிக்கிறார்.
ஸ்ரீதரின் நண்பர் கல்யாண ராமனுக்கு (யோகிபாபு) ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. ’ஐடி கம்பெனியில் வேலை’ என்று பொய் சொல்லித் திரியும் கல்யாண், திருடுவதையே பணியாகச் செய்யும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பு வகிக்கிறார். அங்கேயே, ஸ்ரீதருக்கும் வேலை வாங்கித் தருகிறார். ‘இது ஒரு பொழப்பா’ என்று பிகு செய்யும் ஸ்ரீதர், மெதுவாக அந்த வேலையைச் செவ்வனே செய்யத் தொடங்குகிறார்.
அந்த நேரத்தில், ஒரு நபர் (ஜான் விஜய்) வந்து தனக்குத் தெரிந்த விஞ்ஞானியிடம் (பாண்டியராஜன்) இருந்து ஒரு சாதனத்தைத் திருட வேண்டும் என்கிறார். அதனைச் செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டு, கல்யாண் தனியாக அந்த நபரைச் சந்திக்கிறார். அந்த திருட்டு வேலையைச் செய்ய 50 லட்சம் ரூபாய் பணம் வாங்குகிறார்; அதனைத் தனக்குத் தெரிந்த ஒரு அரசியல்வாதியிடம் (ரவி மரியா) கொடுக்கிறார். ’நானாக நேரில் வந்து கேட்கும் வரைக்கும் இந்த பணம் அப்படியே இருக்கட்டும்’ என்று வேறு சொல்கிறார்.
சாதனத்தைத் திருடச் சென்ற இடத்தில், விஞ்ஞானியிடம் ஸ்ரீதரும் கல்யாணும் சிக்கிக் கொள்கின்றனர். அவர் தவறுதலாக ஒரு பட்டனை அழுத்த, கல்யாண் கழுத்தில் ஒரு ஊசி குத்துகிறது. தப்பித்தால் போதும் என்று இரண்டு பேரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
அடுத்தநாள் காலையில் எழும்போது, தான் ஒரு பெண்ணாக (ஹன்சிகா) மாறியிருப்பதாக உணர்கிறார் கல்யாண். மெல்ல அந்த உண்மையை உணரும் ஸ்ரீதர், அந்த விஞ்ஞானியைத் தேடிச் செல்கிறார். அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது.
50 லட்சம் ரூபாய் தந்தவர் பணம் கேட்டு துரத்த, ஊரில் தங்கையின் திருமணத்திற்கான கெடு நெருங்க, அரசியல்வாதியிடம் பணத்தைப் பெற முடியாமல் ஸ்ரீதரும் கல்யாணும் தடுமாற, பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுகூடிக் ’குழப்பக்கூத்தாக’ மாறுகிறது. அதன்பிறகு என்னவானது என்பதோடு முடிவடைகிறது இந்த ‘பார்ட்னர்’.
இந்த படத்தின் டைட்டிலில் ‘ர்’ இல்லாமல், ‘பாட்னர்’ என்றே குறிப்பிடப்படுகிறது. அந்த மெய்யெழுத்தில் தொடங்கும் ’பஞ்சாயத்து’, படம் முடிந்தபிறகும் தொடர்வதுதான் சோதனையின் உச்சம்.
நல்லதொரு களம்!
ஒரு நகைச்சுவை படத்திற்குத் தேவையான கதை ‘பார்ட்னரில்’ உண்டு. அதற்கேற்றவாறு புதுமையாக, கொஞ்சம் புத்துணர்வூட்டுகிற வகையிலான காட்சிகள் இருந்தாலே போதும்; மீதியை வசனத்தில் சேர்த்து விருந்து படைத்துவிடுவார்கள் நடிப்புக் கலைஞர்கள் என்ற கனவோடு களமிறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன். ஆனால், சரிவரக் காட்சிகளை வடிவமைக்காமல் வெறுமனே நடிகர்களை மட்டுமே நம்பியிருக்கிறார்..
‘பார்ட்னர்’ படத்தின் மாபெரும் சறுக்கலாக அமைந்திருப்பது, அதில் இடம்பெற்ற பாத்திரங்களின் வடிவமைப்பு. கதாநாயகன், நாயகி தொடங்கி நாயகனின் நண்பன், வில்லன், கதைத் திருப்பத்திற்குக் காரணமான விஞ்ஞானி என்று பல பாத்திரங்கள் தெளிவாக வார்க்கப்படவில்லை. அதுவே, காட்சிகளைப் புதிதாக யோசிக்கவும் ‘தடை’ போட்டு விடுகிறது.
ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவின் படத்தொகுப்பு, சந்தோஷ் தயாநிதியின் இசை மூன்றுமே இயக்குனர் வடித்த திரைக்கதைக்கேற்ப உழைப்பை வெளிக்காட்டுகின்றன. அதேநேரத்தில், கலை இயக்குனர் சசிகுமாரின் பங்களிப்பு அந்த அளவுக்கு அமையவில்லை. முக்கியமாக, விஞ்ஞானியின் ஆய்வகத்தைக் காட்டும் இடங்கள் நம்மை ரொம்பவே சோதிக்கின்றன.
ஆதி, யோகிபாபு கூட்டணியைத் திரையில் பார்த்தவுடன், ‘கோமாளி’ தான் நினைவுக்கு வந்தது. ஆனால், அதே போன்றதொரு ‘கெமிஸ்ட்ரி’ இதில் காணக் கிடைக்கவில்லை.
அதேநேரத்தில், ஹன்சிகா வந்து போகும் இடங்கள் நம்மை லேசாகச் சிரிக்க வைக்கின்றன. இத்தனைக்கும் அவரது நடிப்பில் யோகிபாபுவின் சாயலைப் பார்க்க கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
நாயகி பாலக் லால்வானி ஒரு அழகுப் பொம்மையாக வந்து போயிருக்கிறார். தமிழ், தெலுங்கு படங்களில் காட்டப்படும் கலாசாரத்தைப் பின்பற்றுவதில் அவருக்குச் சிக்கல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் கூட்டணியோடு, விஞ்ஞானியாக பாண்டியராஜனும் அரசியல்வாதியாக ரவிமரியாவும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜான் விஜய், முனீஸ்காந்த், மைனா நந்தினி, மொட்டை ராஜேந்திரன் என்று பெரும் கும்பலே இதில் தோன்றியிருக்கிறது.
இத்தனை நடிகர் நடிகைகள் இருந்தும், ’பேண்டஸி காமெடி’க்கு ஏற்ற களம் கிடைத்தும், அதனை வீணாக்கியிருக்கிறார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.
சிறப்பு சேர்த்திருக்கலாம்!
கதையில் இருக்கும் சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பதில் காண, படக்குழுவினர் எவருமே முயற்சி செய்யவில்லை. அது நிகழ்ந்திருந்தால், மேற்சொன்ன குறைகள் ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். ஆனால், ’அந்த தெளிவு தேவையில்லை’ என்று முடிவு செய்தாற்போலவே தோன்றுகிறது.
அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, ’வெறுமனே ஒரு நாவல் ஐடியாவோடு வந்திருக்கிறோம்’ என்று சொல்வதை எப்படி ஏற்பது? ‘பார்ட்னர்’ பார்த்து முடிந்ததும், அந்த எண்ணம்தான் மனதுக்குள் சுழன்றாடுகிறது. சின்னச் சின்னதாய் சில விஷயங்களைச் சரி செய்திருந்தாலே பெரியதொரு கவனிப்பைப் பெற்றிருக்கலாமே என்ற வருத்தமும் அதனோடு சேர்கிறது.
– உதய் பாடகலிங்கம்