அன்னையைப் போல சென்னை!

பிச்சிப்போட்ட புரோட்டா போல கிடக்கிறது சென்னை. ஒருபக்கம் மெட்ரோ ரயில் வேலை, இன்னொரு பக்கம் மேம்பால கட்டுமானப் பணிகள், கூடவே சந்து பொந்தெல்லாம் மழை நீர் வடிகால் வேலை, மின்சார வாரியத்தின் உயர் அழுத்த கேபிள் பதிக்கும் பணி,

துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், இதெல்லாம் பத்தாது என்று டோரண்ட் கேஸ் கம்பெனியின் கேபிள் பதிப்பு வேலை என்று சென்னை முழுவதும் திரும்பிய திசையெங்கும் குதறி போட்டு வைத்திருக்கிறார்கள்.

‘டேக் டைவர்ஷன்…. டேக் டைவர்ஷன்’ என்று நகரம் முழுவதும் போர்டு வைத்திருக்கிறார்கள்.

எந்த சந்தில் நுழைந்து எந்த சந்தில் வெளியே வருகிறோம் என்றே தெரியவில்லை?

ஊர்ந்து செல்லும் ஆமை போல மணி கணக்கில் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது.

இப்படி அலைக்கழிப்பு ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் தூசியும் புழுதியும் சாலை முழுவதும் பறக்கிறது.

இரவில் மழை பெய்து, பகலில் வெயில் கொளுத்துவதால் வியர்வையும் தூசியும் என ஒரு நரக வாழ்க்கையை சென்னை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

நகரம் முழுவதும் வேலை நடைபெறுவது, நகரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்பதால் அதை தாங்கிக் கொண்டுதான் சென்னை வாசிகள் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

‘இன்றைய சிரமம் நாளைய வசதிக்காக’ என்றாலும், நடைமுறையில் அதை அனுபவிக்கும் போதுதான், சிரமத்தின் உண்மை முகம் நமக்கு புரிகிறது.

இந்நிலையில 380-தாவது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடியது சென்னை.
நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்பதற்கிணங்க தினம் தோறும் முகம் மாறிக் கொண்டு இருக்கிறது சென்னை.

நேற்று ஆள் அரவமற்றுக் கிடந்த பழைய மகாபலிபுரம் சாலை, கிண்டி போரூர் சாலை, வேளச்சேரி மேடவாக்கம் சாலை இன்று நவீனத்தின் வளர்ச்சியை உடலெங்கும் போர்த்திக் கொண்டு, சென்னையின் பிரைம் சாலைகளாக மாறிக் கிடக்கிறது.

விண்ணைத் தொடும் கட்டிடங்கள், பரவசமூட்டும் மால்கள், என்று சென்னை தனக்கான நாளைய உலகை இன்றே படைத்துக் கொண்டிருக்கிறது.

அதே வேளையில்… சென்னையின் உள்பகுதிகளான ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஈவினிங் பஜார், செளகார்பேட்டை, பிராட்வே, புரசைவாக்கம், பாரிமுனை, ராயபுரம் போன்ற பகுதிகள் ‘வாழ்ந்து கெட்ட வீடு போல்’ பொலிவிழந்துக் கிடக்கிறது.

20 வருடங்களாக இந்தப் பகுதிகளில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

இந்தியா முழுவதுமிருந்து மக்கள் சாரி சாரியாக சென்னை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர்.

அவர்கள் வருவது நமக்கு வயிற்றில் புளியைக் கரைத்தாலும், சென்னையின் வளர்ச்சிக்கு, அப்படியான பரந்துபட்ட உழைப்பு தேவைப்படுகிறது.

எதிர்கால கனவுகளோடு வரும் எவரையும் சென்னை ஏமாற்றுவதில்லை, யாரிடத்திலும் ஏமாறுவதுமில்லை.

சென்னை பழமையும் புதுமையும் கொண்டு அதே மாறாத தனித்தன்மையுடன் இன்றும் திகழ்கிறது.

இந்நகரம் நம்மை சுமந்து, நாளுக்கொரு வளர்ச்சியை நம் கண் முன்னே காட்டுகிறது. தன்னை நேசிக்கும் ஒவ்வொருவரையும் மாறாத தாய்மையுடன் அன்னையைப்போல் காத்து நிற்கிறது சென்னை !!

நன்றி: மகேஷ்பாபு பத்மநாபன் முகநூல் பதிவு

You might also like