ஒரு துறையில் நிபுணராக இருப்பவர், இன்னொன்றில் காலடி எடுத்துவைக்கும்போது நிறைய விமர்சனங்கள் எழும். அதையும் தாண்டி திறமையை நிரூபிப்பதும் புகழ்க்கொடி நாட்டுவதும், அகழியைத் தாண்டி அரண்மனைக்குள் புகுவதற்கு ஒப்பானது.
அதனைச் சாதிக்க நான் தயார் என்று துணிச்சலோடு களம் காண்பவர்கள் வெகுசிலர் தான். அப்படி, திரைத்துறையில் இசையமைப்பாளராகத் திகழும் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமானார். இன்று, அவரது வளர்ச்சி வியக்க வைக்கிறது.
ஆனால், சமீபகாலமாக நடிப்பைவிட அவர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. ‘அதற்குக் காரணம் என்னவோ’ என்று ஆராய்வதற்குள், திரையரங்குகளைத் தொட்டிருக்கிறது ‘அடியே’.
ட்ரெய்லர் வழியே, ‘இது ஒரு பேண்டஸி கலந்த ரொமான்ஸ் படம்’ என்ற எண்ணத்தை உருவாக்கினார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். படம் பார்த்து முடிந்தபிறகு, அந்த எண்ணம் விஸ்வரூபமெடுத்திருக்கிறதா அல்லது சுக்கல் சுக்கலாச் சிதைந்து சிதறியிருக்கிறதா?
இன்னொரு பிரபஞ்சத்தில் காதல்!
பள்ளி நாட்களில் தனது ஜுனியரான செந்தாழினியைக் (கௌரி கிஷன்) காதலிக்கிறார் ஜீவா (ஜி.வி.பிரகாஷ்). பாட்டு போட்டியொன்றில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக அவர் வருத்தப்படுகையில், ஆறுதலாக ஒரு கடிதம் எழுதி அவரது பேக்கில் வைக்கிறார். அதன்பிறகு, பல முறை அவரிடம் தனது விருப்பத்தைச் செல்ல முயற்சிக்கிறார் ஜீவா. எதுவும் கைகூடவில்லை.
அதை மீறித் தனது காதலைத் தெரிவிக்கச் செல்கையில், ஜீவாவின் பெற்றோர் ஒரு விபத்தில் மரணமடைகின்றனர். சொத்துகள் கைவிட்டுப் போய், ஆறுதல் சொல்ல உறவுகள் இல்லாதபோது மைக்கேலும் அக்ரமும் மட்டுமே ஜீவாவுக்குத் துணை நிற்கின்றனர். ஆனாலும், அவரை விரக்தி வாட்டியெடுக்கிறது.
சில வருடங்கள் கழித்து, ஒருநாள் ஜீவா தற்கொலை செய்யும் முடிவெடுக்கிறார். அப்போது, ஒரு குரல் அவரைத் தடுத்து நிறுத்துகிறது.
தொலைக்காட்சியில் செந்தாழியின் பேட்டி ஒலிக்கிறது. அதனைக் கண்டதும், அவரது கால்கள் நிற்கின்றன.
அப்போது, தனது சிறுவயது காதல் நினைவுகளாகப் பெயர் தெரியாத மாணவர் தந்த கடிதத்தைப் பற்றிச் சொல்கிறார் செந்தாழினி. அது தன்னைப் பற்றியது என்றறிந்ததும், ஜீவாவின் மனதில் மீண்டும் காதல் துளிர்க்கிறது.
அதனை செந்தாழினியிடம் சொல்லிவிடச் செல்லும்போது மீண்டும் ஒரு குறுக்கீடு. அதனைச் சரிசெய்து முடிக்கும்போது, ஒரு விபத்தில் சிக்குகிறார் ஜீவா. அந்த இடைவெளியில், மீண்டும் செந்தாழினியைப் பிரிகிறார்.
அந்த வேதனை தாங்க முடியாமல் மது அருந்தி மயக்கமடைகிறார். அதன்பிறகு, வேறொரு உலகத்தில் கண் விழிக்கிறார்.
அங்கு, எல்லாமே தலைகீழாக இருக்கிறது. ஜீவாவின் பெயர் அர்ஜுன் பிரபாகரன் என்றிருக்கிறது; அவர் ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார். அதையெல்லாம் விட உச்சமாக, அந்த உலகில் ஜீவாவின் மனைவியாக இருக்கிறார் செந்தாழினி.
‘தனது பெயர் அர்ஜுன் இல்லையே’ என்று குழம்பும் ஜீவா, அந்த இன்னொரு உலகத்தில் இருந்து வெளியேறினாரா? உண்மையில், அவருக்கு என்னவானது? எதனால் அவர் அந்த இணை பிரபஞ்சத்துக்குப் பயணப்பட்டார் என்பதைக் கொஞ்சம் அறிவியல் புனைவு, நிறைய காதல் கலந்து சொல்கிறது ‘அடியே’.
இந்த படத்தின் முடிவு எப்படியிருக்கும் என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடியும். ஆமாம், கற்பனை உலகத்தின் காரணமாக நாயகனின் காதல் கைகூடுவதே இக்கதையின் சாராம்சம்.
அசத்தும் நடிப்பு!
‘அடியே’வில் மொத்தமே அரை டஜன் பேர் மட்டுமே திரும்பத் திரும்பத் தங்கள் முகங்களைக் காண்பிக்கின்றனர்.
நாயகனான ஜி.வி.பிரகாஷ், நாயகியான கௌரி கிஷன், நாயகனின் நண்பர்களாக வரும் மிர்ச்சி விஜய், மதும்கேஷ், இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் விஞ்ஞானி ஜி.கே.வாக வரும் வெங்கட்பிரபு மற்றும் அவ்வப்போது வெவ்வேறு வேடங்களில் தலைகாட்டும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஆகியோரே அந்த ஆறு முகங்கள்.
இவர்கள் தவிர்த்து சில பேர், இக்கதாபாத்திரங்களுக்குத் துணையாகப் பின்னணியில் வந்து போயிருக்கின்றனர்.
காதலில் தவிப்பது, உருகுவது, படபடப்பது என்று வாலிபப் பருவத்தின் பிரதிநிதியாகத் திரையில் அசத்தியிருக்கிறார் ஜி.வி.பி. ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’க்கு பிறகு, இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அதனைச் சரியாகப் பயன்படுத்தி நடிப்பில் ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார்.
கௌரி கிஷனுக்கு இதில் கொஞ்சம் மெச்சூரிட்டியான பாத்திரம். ‘லவ் கெமிஸ்ட்ரி’ என்ற வார்த்தையைத் திரையில் அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறார்.
மதும்கேஷ் பாத்திரம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘மிர்ச்சி விஜய்யின் காமெடி ஒன்லைனர்களுக்கே இடமில்லை’ என்று சொல்லி இருவரது பங்கையும் திரைக்கதையில் குறைத்திருக்கிறார் இயக்குனர். இவர்களது நடிப்பில் தெரியும் யதார்த்தம், தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகிறது.
வெங்கட்பிரபுவுக்கு இதில் வில்லன் வேடம். ‘டிப்ளமேடிக்’ என்றொரு பதம் ஆங்கிலத்தில் உண்டே, அவர் அதனைச் சரியாகத் திரையில் கையாண்டிருக்கிறார்.
காமெடி கலாய்த்தல்களுக்கான இடங்களில் எல்லாம் இடம்பெற்றிருக்கும் விக்னேஷ் கார்த்திக், திரையில் தன் முகம் அதிக நொடிகள் இடம்பெறுவதைக் கவனத்துடன் தவிர்த்திருக்கிறார்.
அடுத்த படத்தில் தனக்குத் தானே நல்லதொரு பாத்திரத்தைத் தந்துகொள்வார் என்று நம்புவோமாக!
பேண்டஸி கலந்த காதல் கதை இது. அதனைக் குழப்பமில்லாமல் திரையில் சொல்ல வேண்டிய கட்டாயமும் உண்டு.
விக்னேஷ் கார்த்திக், கிஷோர் சங்கர் இணையின் எழுத்தாக்கம் அதனைச் சரியாகக் கையாண்டிருக்கிறது.
இரு வேறு உலகங்களைப் பிரித்துக் காட்ட நகைச்சுவையைத் துணையாகக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், காதல் தரும் வலியையும் வேதனையையும் மிகச்சரியாகத் திரையில் வெளிப்படுத்தியுள்ளது.
போலவே, அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் உருவாகாதவாறு திரைக்கதையை நகர்த்தியிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, விஎஃஎக்ஸ் துருத்தலாகத் தெரியாத வண்ணம் அற்புதமாக ஷாட்களை வார்த்திருக்கிறது. தியேட்டரில் பார்ப்பதற்கேற்ப பிரமாண்டத்தை நம் மனதில் நிரப்புகிறது.
இந்தப் படத்திற்கு படத்தொகுப்பாளர் பங்கு மிக முக்கியம். அதனை உணர்ந்து, முடிந்தவரை குழப்பமின்றிக் கதை சொல்வதற்குத் துணை நின்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் முத்தையன்.
சிவசங்கரின் கலை வடிவமைப்பு கதை நிகழும் களங்களை வேறுபடுத்த உதவியிருக்கிறது. பட்ஜெட் குறைவால் விஎஃப்எக்ஸில் ஆங்காங்கே குறைகள் உண்டென்றபோதும், அதையும் மீறி நிறைவு ஏற்படுகிறது.
மிக முக்கியமாக, இன்னொரு பிரபஞ்சத்துக்குள் பார்வையாளர்கள் நுழையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை. பாடல்கள் ‘வாவ்’ ரகம் என்றால், அதைவிட ஒரு படி மேலேறி நிற்கிறது பிஜிஎம்.
ஆடை வடிவமைப்பு, ஒலிக்கலவை தொடர்பான கலைஞர்களும் கூட, இதில் மெய்மறந்து தங்கள் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.
வாழ்த்துகள் இயக்குனரே!
காதல் நிறைந்த பேண்டஸி கதையில் நகைச்சுவைக்கு நிறையvஏ இடம் தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அதுவும் கூட, ‘கலாய்’ ரகமாகவே உள்ளது. ‘அடியே’வை ‘ஸ்பூஃப் படமாக’ கருதும் வாய்ப்பை அது அதிகப்படுத்துகிறது என்பதே உண்மை.
ஆனாலும், தனது கதையின் மையப்புள்ளி காதல் தான் என்பதில் தீர்மானமாக இருந்த இயக்குனர், அதனைத் திரையிலும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயம் இது சாதனைதான்.
இந்த படத்தில் ஒரு பாதகமான அம்சமும் உள்ளது. அது, ‘இன்னொரு பிரபஞ்சம், உலகம்’ என்று இயக்குனர் சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்வது; தொடர்ந்து கதையோடு இணைந்து பயணிப்பது. சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பாமரர்களுக்கு இப்படம் புரியாது என்ற வாதமும் முன்வைக்கப்படலாம்.
அதையும் மீறி இப்படம் வெற்றி பெற்றால், நல்ல முயற்சிகளைச் சாதாரண மக்கள் வரவேற்பார்கள் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகும்.
‘அடியே’வில் பரபர திரைக்கதை கிடையாது; ஆபாசம், வன்முறை, இரட்டை அர்த்த நகைச்சுவைக்கும் இடமில்லை; முக்கியமாக, காதல் என்ற பெயரில் மயிலிறகால் வருடும் அனுபவத்தைப் படம் முழுக்கத் தந்து அரிப்பை ஏற்படுத்தும் அபாயங்கள் கிடையவே கிடையாது.
அதேநேரத்தில், வழக்கத்தில் இருந்து சிறிதே மாறுபட்டு வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தைப் பெற வேண்டும் என்பவர்களுக்கு ‘அடியே’ நிச்சயம் பிடிக்கும்.
அதற்காகவே, விக்னேஷ் கார்த்திக்கை பாராட்டியாக வேண்டும். அடுத்த முயற்சி, இன்னும் பிரமாண்டமானதாக அமைய வாழ்த்துகள் இயக்குனரே..!
– உதய் பாடகலிங்கம்