உலகமே அந்த விநாடிக்காக ஆவலுடன் காத்திருந்தது.
இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருப்பதற்குக் காரணம் இந்தியாவின் திட்டமிட்ட நவீனத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நம்முடைய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியும் தான்.
நிலவின் தென்துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. உலக அளவில் நிலவில் தடம் பதித்த நான்காவது நாடாகவும் சந்திரயான்-3 பெருமை சேர்த்திருக்கிறது.
தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டதாக சந்திரயானுடன் இணைந்திருந்த விக்ரம் லேண்டர் அனுப்பிய செய்தி பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
“பூமியில் சபதம் எடுத்தோம். சந்திரனில் நிறைவேற்றினோம்’’ என்று பெருமிதப் பட்டிருக்கிறார் இந்தியப் பிரதர் மோடி.
“இந்தியாவைப் பெருமைப்பட வைத்த தருணம்’’ என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் இந்தியக் குடியரசுத்தலைவரான திரௌபதி முர்மு.
“நிலவைத் தொடர்ந்து சூரியனிலும் ஆய்வுப் பணியை மேற்கொள்வோம்” என்றிருக்கிறார் இஸ்ரோ தலைவரான சோம்நாத்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வே சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியிருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது.
ஒட்டுமொத்தமான பாராட்டும், சந்திரயான்-3 க்குக் கிடைத்த வெற்றியும் நம்மை உற்சாகப்படுத்தியிருக்கிற அதே சமயம் அறிவியலை அதன் நவீன நுட்பம் சார்ந்து பயன்படுத்தினால் எந்த வெற்றியையும் அடைய முடியும் என்பது புலனாகியிருக்கிறது.
இதேவிமான அணுகுமுறை நாம் சார்ந்த இதர செயல்பாட்டிலும் பிரதிபலிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவை எந்த எல்லை வரை பயன்படுத்தப் போகிறோம் என்பதிலும் கவனமான, எதிர்காலம் சார்ந்த அணுகுமுறை தேவை.
சந்திரயான்- 3 போன்றவற்றில் மட்டும் அறிவியலை முறைப்படுத்திப் பயன்படுத்தி வெற்றியும் பெற்ற நிலையில், நம்முடைய கருத்தியலையும் அறிவியல் சார்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது, மனிதமே முதன்மையானது என்பதையும் உணர்வோம்.
*