‘சரிகமபதநீ’யை பார்த்திபன் ‘ரீபூட்’ செய்வாரா?

பார்த்திபன், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ’புதிய பாதை’ முதல் ‘இரவின் நிழல்’ வரை 15 படங்களை இயக்கியவர்.

இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க திரைக்கதையாசிரியராகக் கருதப்படும் கே.பாக்யராஜின் சீடர் என்பது நாம் அறிந்ததுதான். ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ கூட, முதலில் பார்த்திபன் இயக்குவதாகத்தான் இருந்தது என்பதை அவரே பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

உண்மையைச் சொன்னால், ‘3 இடியட்ஸ்’ மாதிரியான சிறந்த ‘பீல்குட்’ படத்தை அசல் தன்மையுடன் தரக்கூடிய திறன் அவருக்கு உண்டு. அப்படியிருந்தும் அது ஏன் இதுவரை நிகழவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஆச்சர்யம்.

ஏன் அது நடக்கவில்லை என்று யோசித்தால், என் கண் முன்னே ஒரு படம்தான் வந்து நிற்கிறது. அந்த படம் ‘சரிகமபத நீ’.

இன்றோடு, அந்த படம் வெளியாகி 29 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதாவது, அப்படம் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

ஆனாலும், அந்த படத்தின் உள்ளடக்கமும் தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பும் இன்னும் பார்த்திபனை விட்டு நீங்கவில்லை என்றே தோன்றுகிறது.

நீயே இசை..!

பதின்ம பருவத்தின் இறுதியில் இருக்கும் ஒரு பெண், ஒரு ஆணைத் திருமண விழாவொன்றில் சந்திக்கிறார். அந்த ஆணின் கேலியும் கிண்டலும் துரத்தல் விளையாட்டுகளும் அவரைக் காதலில் தள்ளுகிறது.

அந்த நபர், தன்னை ஒரு இசைவாணர் ஆகக் காட்டிக் கொள்கிறார். ஆனாலும், அவர் மனதில் காமத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதனை அந்தப் பெண் உணர்வதற்குள், அவரது வாழ்வில் இருந்து அந்த ஆண் காணாமல் போகிறார்.

அதனால், ‘நீயே என் இசை’ என்று புலம்பும் அளவுக்குக் காதல் பித்து பிடித்தவராகிறார் அந்தப் பெண். இது ஒரு கதை.

சரி, அந்த ஆண் என்னவானார்? அதில் இருந்து தான் ‘சரிகமபத நீ’ திரைக்கதை தொடங்குகிறது. அவர் ஒரு சாராய வியாபாரியின் மகன். அதனால், எந்நேரமும் குடியும் கும்மாளமுமாக (!?) இருக்கிறார்.

பள்ளிக்கூடமே செல்லாத அவர், கல்லூரியில் படிப்பதாகச் சொல்லி ஏமாற்றுகிறார். பார்க்கும் பெண்களைத் தனது காம வலையில் வீழ்த்துவதே அவரது வேலை. அப்படிப்பட்டவர், புதிதாகக் கல்லூரிக்கு வந்த மாணவியிடம் காதலில் விழுகிறார். அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார்.

அந்த மாணவியோ, ‘காதலிக்கிறேன்’, ‘காதலிக்கவில்லை’ என்று மாற்றி மாற்றிச் சொல்லி அவரை அலைக்கழிக்கிறார்.

காமமே கதி என்று கிடந்தவரைத் தனது காலடியில் விழ வைக்கிறார். அது ஏன் என்பதற்கான காரணமாக, முதல் கதை படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

இது ஒரு காரசாரமான மசாலா படத்திற்கு ஏற்ற கதைதான். ஆனாலும், இந்த படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் புறக்கணிக்கப்பட்டது. காரணம், பார்த்திபன் அதனைத் திரையில் சொல்லியிருந்த விதம்.

இன்று எடுபட்டிருக்குமா?!

தொண்ணூறுகளில் மார்னிங் ஷோ, மேட்னி இரண்டுமே பெண்களை நம்பியே தியேட்டர்களில் ஓட்டப்பட்டன.

பெண்கள் குழுவாகச் சேர்ந்து வந்து படம் பார்த்த காலம் அது.

அப்படிப் பார்க்க வந்தவர்கள், பெண்களைத் தன்வசப்படுத்தும் ஒரு நாயகனை முன்னிலைப்படுத்தினால் எப்படி உணர்வார்கள்? அதனால், தாய்க்குலங்களின் ஆதரவு அப்படத்திற்குக் கிட்டவில்லை.

இப்போதிருப்பது போல, பதின்ம வயது ஆண், பெண்கள் தனியாக அல்லது சேர்ந்து சென்று படம் பார்க்கும் வழக்கம் அப்போது பெரிதாக இல்லை.

அதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய ‘உள்ளே வெளியே’ திரைப்படம் ’குடும்பத்தோடு பார்க்க இயலாதது’ என்ற முத்திரையைப் பெற்ற காரணத்தால், ‘சரிகமபத நீ’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாற வாய்ப்பில்லாமல் போனது.

சரி, ஆண்கள் கூட்டமாவது வந்து பார்க்கும் என்று பார்த்தால், அதிலும் மண் விழுந்தது. ’ஒரு பொண்ணுக்கு எப்படிப்பட்ட ஆம்பளைய பிடிக்கும் தெரியுமா’ என்று கிளைமேக்ஸில் ரோஜா பேசும் வசனம், மது போதையில் தள்ளாட விரும்புபவரை அருவியில் குளிக்க வைத்தாற் போலிருந்தது.

இன்றிருப்பது போல, பாதி அல்லது முக்கால்வாசி படத்தில் தியேட்டரை விட்டு வெளியேறுகிற பழக்கம் அப்போதில்லை. அதனால், ஆண்களின் எண்ணிக்கையும் சொற்பம் என்ற நிலையில் அப்படம் பெரிய வெற்றியைப் பெறாமல் போனது.

ஒருவேளை இன்று ‘சரிகமபத நீ’ வெளியானால், அப்படம் பெருவெற்றி பெறலாம். காரணம், தியேட்டருக்கு வருபவர்களின் உளவியல் முற்றிலுமாக மாறியிருக்கிறது.

அதேநேரத்தில், இன்றைக்கு பார்த்திபன் மீதிருக்கும் ’முற்போக்கு’ பிம்பத்திற்கும் அவரது இன்றைய வயதுக்கும் அத்தகைய காட்சியாக்கம் நிச்சயம் பொருத்தமாக இருக்காது. மேலோட்டமாகப் பார்த்தால் தெரியவரும் நிலவரம் இது.

உண்மையில், ‘சரிகபத நீ’க்கு பிறகுதான் பெண்களைக் குறித்த பிற்போக்கான கருத்துகள் பார்த்திபன் படங்களில் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது.

பார்த்திபனுக்கு என்னாச்சு?

’புதியபாதை’யில் சீதா, ‘பொண்டாட்டி தேவை’யில் அஸ்வினி, ‘சுகமான ராகங்கள்’ படத்தில் ஷாலி, ’உள்ளே வெளியே’வில் ஐஸ்வர்யா, ‘சரிகமபதநீ’யில் ரோஜா ஏற்ற பாத்திரங்கள் அனைத்துமே ரொம்பவே தைரியமான, தீர்க்கமான, தெளிவான சிந்தனையுடன் இருக்கிற பெண்களை வெளிப்படுத்தின.

பாலியல் சார்ந்த விருப்பங்களை வெளிப்படுத்திய வகையில், அப்பாத்திரங்கள் அக்காலகட்டத்தில் கொஞ்சம் இயல்பில் இருந்து விலகியனவாகத் தெரிந்திருக்கலாம். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால், அதுவும் கூட துருத்தலாகத் தெரியவில்லை.

ஆனால், ’புள்ளகுட்டிக்காரன்’ ஊர்வசி, ‘ஹவுஸ்ஃபுல்’ ஜெயந்தி, ‘இவன்’ சௌந்தர்யா ஆகியோர் ஏற்ற பாத்திரங்கள் அதற்கு எதிராக வடிக்கப்பட்டிருக்கும்.

ஏன், பார்த்திபன் பின்னாட்களில் படைத்த பெண் பாத்திரங்கள் எல்லாமே ரொம்பவே பலவீனமான மனிதர்களாகத் திரையில் வெளிப்பட்டனர்.

சமீபத்திய படங்களான ‘ஒத்தசெருப்பு’ மற்றும் ‘இரவின் நிழல்’ படங்களில் நிலைமை இன்னும் மோசம்.

கல்லூரி மாணவர்களின் வீடியோ புரொக்ட்களில் விலை மகளிரைப் பற்றிச் சொல்வது போல, அப்படங்களில் பெண் பாத்திரங்கள் மொண்ணையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் பார்க்கிறபோது, ‘பார்த்திபனுக்கு என்னாச்சு’ என்றே தோன்றுகிறது.

ஒரு படைப்பாக மட்டுமல்ல; அவர் நடிக்கிற படங்களிலும் கூட இன்றுவரை ’உள்ளே வெளியே’, ‘சரிகமபதநீ’ பாதிப்பு தொடர்கிறது.

ஏன், ‘புதிய பாதை’யிலும் கூட அப்படித்தானே நடித்தார் என்று கேட்கலாம். கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், பாண்டியராஜன் போல பார்த்திபன் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட தனித்துவமாகவும் கூட அதனைக் கருதலாம்.

அதனாலேயே ‘டாடா பிர்லா’, ‘ஜேம்ஸ் பாண்டு’, ‘வாய்மையே வெல்லும்’, ‘அந்தப்புரம்’, ‘காதல் கிறுக்கன்’ என்று பல படங்களில் அந்த பாத்திரச் சித்தரிப்பையே அவர் பிரதிபலித்திருந்தார்.

அந்த காரணத்தாலேயே, அதற்கு எதிரான பாத்திரங்களில் அவரது நடிப்பு சிலாகிக்கப்பட்டது.

’பாரதி கண்ணம்மா’, ‘அபிமன்யூ’, ‘நீ வருவாய் என’, ‘அழகி’, ‘வெற்றிக்கொடி கட்டு’ என்று அதற்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனாலும், விடாப்பிடியாக ‘சரிகமபதநீ’ ஹேங்ஓவரிலேயே நீடிக்கிறார் பார்த்திபன்.

’நானும் ரவுடிதான்’ படத்தில் பார்த்திபன் ஏற்ற பாத்திரம், ‘சரிகமபதநீ’ நாயகனின் நீட்சிதான் என்று சொல்வதை நம்மால் மறுக்க முடியுமா? கொஞ்சம் அடாவடியான, ஆதிக்கம் செலுத்துகிற, எல்லோரையும் சீண்டுகிற ஒரு பாத்திரத்தை பார்த்திபன் ஏற்றாலே, அந்த சாயல் எளிதாக ஒட்டிக் கொள்கிறது.

இன்றைய தேதியில், தொலைக்காட்சியில் மட்டுமே ‘சரிகபதநீ’யை பார்க்கும் நிலை உள்ளது. யூடியூப் உட்பட வேறெங்கும் அப்படத்தின் தடம் காணக் கிடைக்கவில்லை.

ஆனால், பார்த்திபன் நினைத்தால், ‘சரிகமபதநீ’ படத்தை அவரே ‘ரீபூட்’ செய்ய முடியும். ஏனென்றால், அன்று அவர் ஏற்ற பாத்திரத்தின் தாக்கம் இன்றுவரை நம் சமூகத்தில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பெண்ணின் விருப்பங்களுக்குப் புறம்பாக, அவரைத் துரத்திச் சென்று காதலிப்பது நியாயமற்றது என்று சொல்வதற்கான தேவை இருக்கிறது.

‘இந்த பொண்ணுங்களே மோசம்’ என்று ‘சிகப்பு ரோஜாக்கள்’ வசனத்தை ஒப்பிக்கிற ஒரு தலைமுறையிடத்தில் மாற்றத்தை உருவாக்குகிற பொறுப்பும் பக்குவமும் பார்த்திபனிடம் உள்ளது.

’சரிகமபதநீ’ படத்தில்தான், இசையமைப்பாளர் தேவா உடன் பார்த்திபன் இணைந்தார்.

’புள்ளக்குட்டிக்காரன்’ படத்திலும் அந்த கூட்டணி தொடர்ந்தது. அதற்குப் பிறகும், பார்த்திபனால் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்ற முடிந்தது.

அப்போது வெளியான ‘ஏலேலோ’ அறிவிப்பு முதல் சமீபத்திய ‘இரவின் நிழல்’ வரை ஏ.ஆர்.ரஹ்மானோடு அவரது நட்பு தொடர்கிறது. இது ரொம்பவே அரிதான விஷயம்.

இசையே மூச்சு என்றிருக்கும் ‘சென்சிடிவ்’ கலைஞர்களுடன் இனிய நட்பைப் பேணும் பார்த்திபன், தனது படைப்பில் இடம்பெறும் பெண் பாத்திரங்களிடமும் அதேவிதமான நட்பைப் பாராட்ட வேண்டும்.

எனக்கென்னமோ, அது நிகழ்ந்தால் பார்த்திபனிடம் இருந்து ஒரு அற்புதமான, கமர்ஷியலான ‘பீல்குட்’ படங்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்று தோன்றுகிறது.

  • உதய் பாடகலிங்கம்
You might also like