கூமர் – விழுந்தாலும் எழுந்தாலும் இலக்கு ஒன்றே!

ஒரு விளையாட்டு வீரருக்கு அல்லது வீராங்கனைக்கு, அந்த விளையாட்டைத் தவிர மற்றனைத்தும் மதிப்பற்றதுதான். அவர்களிடம் இருந்து அந்த விளையாட்டைப் பிரித்துவிட்டால் எதுவும் மிஞ்சாது. அதுவே, அந்த விளையாட்டில் அவர் செலுத்தும் கவனம் எத்தகையது என்பதனை உணர்த்தும்.

இது, எந்தத் துறைக்கும் பொருந்தக்கூடிய உண்மை. அப்படி, கிரிக்கெட் விளையாட்டில் தன்னைப் பொதித்துக்கொண்ட ஒரு வீராங்கனை, ‘இனி அந்த விளையாட்டில் ஈடுபடவே முடியாது’ எனும் சூழலை எவ்வாறு கடந்து செல்கிறார் என்பதைச் சொல்கிறது பால்கி இயக்கியுள்ள ‘கூமர்’ திரைப்படம்.

அந்த ஒரு விஷயம்தான், அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற தூண்டுதலை அதிகப்படுத்தியது. சரி, அதற்கேற்றவாறு திருப்திகரமான அனுபவத்தை அப்படம் தருகிறதா?

விழுந்தாலும் எழுந்தாலும்..!

அனினா (சயாமி கேர்) ஒரு கிரிக்கெட் வீராங்கனை. வீசப்படும் பந்தின் பயணம் எப்படியெல்லாம் அமையும் என்பதைத் துல்லியமாக அறிவதற்காகவே, இயற்பியலை பட்டப்படிப்பாகத் தேர்வு செய்யும் அளவுக்கு அவருக்குள் கிரிக்கெட் ஆர்வம் உண்டு.

அவரது கனவுக்குத் தந்தை, சகோதரர்களைத் தாண்டி பாட்டி (சப்னா ஆஸ்மி) பெரும் ஆதரவாக விளங்குகிறார். அனினாவின் உணவுக்கட்டுப்பாடு முதல் கிரிக்கெட் நுணுக்கங்கள் வரை அனைத்தையும் வடிவமைப்பவராகத் திகழ்கிறார்.

ஒருநாள் தனது சிறுவயது தோழனான ஜீத்தை (அங்கத் பேடி) மீண்டும் சந்திக்கிறார்.

அன்றைய தினமே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு முகாமில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கிறது.

அவரது பேட்டிங் ஸ்டைல் தேர்வாளர்கள் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. ஆனால், பதம் சிங் சோதி (அபிஷேக் பச்சன்) எனும் ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் அதனை ஏற்க மறுக்கிறார்.

அவர் வீசும் சுழற்பந்து, அனினாவின் விக்கெட்டை பறிக்கிறது. அது, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் அவருக்கிருக்கும் பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது. அதையும் மீறி, தேசிய அணிக்கு அனினா தேர்வு செய்யப்படுகிறார்.

அதனையொட்டி நடக்கும் விருந்தில் அத்துமீறி நுழைகிறார் பதம் சிங். அப்போதும், அனினாவைப் பார்த்து ‘நீ தேசிய அணிக்கு லாயக்கு இல்லை’ என்று போதையில் வார்த்தைகளை அள்ளியிறைக்கிறார். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், ஜீத்தை வரச் சொல்கிறார் அனினா.

இருவரும் காரில் பயணிக்கின்றனர். அந்த பயணத்தின்போது கோபத்தில் கொதிக்கிறது அனினாவின் மனது. அதனைத் தணிக்க, அவரே காரை ஓட்ட முற்படுகிறார்.

ஒரு திருப்பத்தில் திரும்பும்போது வலதுகையை வெளியே நீட்ட, அந்த நொடி அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது; எதிரே வரும் கார் மோதி கை துண்டாகிப் போகிறது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிரிக்கெட் என்றாலே வெறுப்பை உமிழ்கிறார் அனினா. அந்த நேரத்தில், பதம் சிங் சோதி அவரைச் சந்திக்க வருகிறார். பந்தைக் கையில் கொடுத்து, ‘கிரிக்கெட்டில் நீ சாதிக்க இன்னும் நிறைய உள்ளது’ என்கிறார்.

அதுவரை வலது கையால் கூட அனினா பந்து வீசியதில்லை. அப்படிப்பட்டவர் எவ்வாறு இடது கை சுழற்பந்துவீச்சாளராக மாறுகிறார், இந்திய அணியில் தேர்வு செய்யும் அளவுக்கு உயர்கிறார் என்பதைச் சொல்கிறது ‘கூமர்’.

கிரிக்கெட் மட்டுமல்லாமல் எல்லா விளையாட்டுகளிலும் வீரர்கள், வீராங்கனைகள் காயமடைவதும், சிகிச்சைகளுக்குப் பிறகு கடுமையான போராட்டங்களைச் சந்திப்பதும் இயல்பு.

அந்த வகையில், விழுந்தபோதெல்லாம் எழுவதற்கான மனத்துணிவு வேண்டும் என்று சொல்வதே இதன் சிறப்பம்சம்.

அசத்தல் பெர்பார்மன்ஸ்!

சயாமி கேர் இப்படத்தில் அனினாவாக நடித்துள்ளார். ஒரு ஆண்மகனைப் போன்ற உடல்மொழி கொண்ட வீராங்கனையைத் திரையில் பிரதிபலிக்கிறார்.

விபத்துக்குள்ளான பிறகு மாற்றுத்திறனாளியாக வாழ்வதைத் தனது நடிப்பால் உணர்த்தியிருப்பது அழகு.

அது மட்டுமல்லாமல், கிளிசரின் இல்லாமல் தாரைதாரையாகக் கண்ணீர் வடிப்பாரோ என்று கருதும் அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார்.

‘டோண்ட் கேர்’ உடல்மொழியோடு நடிக்கும் வேடம் என்றபோதும், மிகச்சாதாரணமாக அதனைக் கையாண்டுள்ளார் அபிஷேக் பச்சன். அதற்கேற்ப, அவரது பாத்திரத்திற்கென்று திரையில் ‘நாயகத் தருணங்களும்’ கூட கொடுக்கப்படவில்லை.

சப்னா ஆஸ்மிக்கு இதில் பெரிய வேடம் இல்லை; அதேநேரத்தில், தான் வரும் சில காட்சிகள் மூலமாக நம் மனதில் இடம்பிடிப்பதே அவரது இருப்புக்கான வெற்றி.

சயாமியின் பாய்ப்ரெண்டாக அங்கத் பேடி இதில் வந்து போயிருக்கிறார். சயாமியின் தந்தை, சகோதரர்களாக நடித்தவர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள், பதம்சிங் வீட்டு பணியாளராக வரும் இவாங்கா தாஸ் என்று பலர் இதில் ’அசத்தல் பெர்பார்மன்ஸ்’ தந்துள்ளனர்.

விஷால் சின்ஹாவின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியான சூழலைக் காட்டுகிறது; கூடவே, ’கிரிக்கெட் மைதானத்தில் நாமே இறங்கி நிற்கிறோம்’ எனும் அளவுக்குப் பரபரப்பையும் ஊட்டுகிறது.

நிபுண் அசோக் குப்தாவின் படத்தொகுப்பில், காட்சிகள் மிகச்சரியான அசைவில் கோர்க்கப்பட்டுள்ளன. ஆனால், சயாமி விபத்துக்குள்ளாகும் இடம் மட்டும் திரையில் தெளிவாகக் காட்டப்படவில்லை.

இந்த படத்தின் வெற்றியில் அமித் திரிவேதியின் பின்னணி இசைக்கு முக்கியப் பங்கு உண்டு. அதைத் தாண்டி, ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்துகிறது ‘கூமர்’ பாடல்.

நல்லதொரு காட்சியனுபவம்!

கூமர் என்றால் அங்குமிங்கும் அலைந்து திரிபவர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனாலும், எத்திசை செல்லினும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதியை ஊட்டுகிறது ‘கூமர்’. அந்த வகையில், தன்னம்பிக்கையூட்டும் ஒரு புனைவு என்ற வகையில் இது கவனம் ஈர்க்கிறது.

சக்தே இண்டியா முதல் இறுதிச்சுற்று வரை பல ‘ஸ்போர்ட்ஸ்’ திரைப்படங்களை நினைவூட்டுகிறது ‘கூமர்’ திரைக்கதை. இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மைகள் நிறைந்திருக்கின்றன என்பதை நம்மால் சொல்ல இயலாது.

அதேநேரத்தில், இப்படியொரு அதிசயம் கிரிக்கெட் விளையாட்டில் நிகழ வாய்ப்புண்டு என்று சொன்ன வகையில் இது நம்மைக் கவர்கிறது.

முதல் அரை மணி நேரக் காட்சிகள் கோர்வையாக நகர்ந்தாலும், நார்மலாக இருக்கும் நாயகி எப்படி மாற்றுத்திறனாளி ஆவார் என்ற கேள்வியே மனதுக்குள் அசைந்தாடுகிறது.

அந்த விபத்து காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இவர் மீண்டும் எப்படி கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வியை எழுப்புகின்றன. இரண்டாம் பாதியில், அது நிகழும் விதத்தைக் காட்சியாக்கம் செய்திருக்கிறார் பால்கி.

அவற்றில் சரிபாதி சினிமாத்தனமாக தெரிந்தாலும், நம்மை அனினா எனும் பாத்திரமாக உணரச் செய்திருப்பதே பால்கியின் வெற்றி.

அந்த வகையில் இயக்குனரோடு இணைந்து திரைக்கதை வசனத்தில் பங்காற்றிய ராகுல் சென்குப்தா, ரிஷி வீர்மணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாக வேண்டும்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருக்கிறார். அவர் வருமிடங்கள் நிச்சயம் தியேட்டரில் கொண்டாட்டத்தை நிகழ்த்தும்.

நாயகி எப்படி விபத்தில் சிக்கினார் என்பதைச் சொன்ன வகையிலும், அவருக்கு ஏன் அபிஷேக் பாத்திரம் உதவுகிறது என்பதைச் சொன்னதிலும், சிறிது தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.

அதைத் தாண்டி, ஒட்டுமொத்தப் படமும் ஒரு ‘பீல்குட்’ அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட அனுபவத்தை வேண்டுபவர்கள் தாராளமாக ‘கூமர்’ பார்க்கலாம்!

  • உதய் பாடகலிங்கம்
You might also like