டி.எம்.எஸ்.ஸூக்கு மதுரையில் சிலை!

தமிழ்த் திரையிசையின் தனித்துவமான அடையாளத்தைப் போல பல சாதனைகளோடு வாழ்ந்து, இன்னும் குரலால் வாழ்கின்ற தொகுளுவ மீனாட்சி சௌந்திர ராஜனுக்கு நூற்றாண்டுத் தருணத்தில் அவருடைய சொந்த ஊரான மதுரையில் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது.

1950 ஆம் ஆண்டில் ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் பாட ஆரம்பித்துப் பிறகு ‘மந்திரிகுமாரி’, தூக்குத் தூக்கி என்று பாணத்துவங்கிப் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிற மகத்தான கலைஞனுக்கு விழா எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சமயத்தில் அவரை நினைவூட்டும் ஓர் சந்திப்பு.

******

“ரிக்கார்டிங் தியேட்டருக்குள்ளேயே ஓடிப் பாடியிருக்கேன்’’ – டி.எம்.எஸ்.

*
‘’வயதானாலும் யோகாசனம் செய்துகொண்டு குரலில் இளமை ததும்பப் பேசுகிறார் டி.எம்.சௌந்திரராஜன். இடையிடையே துணுக்காக அவர் பாடிய பாடல்களைப் பாவத்துடன் பாடிக் காட்டுகிறார்.

“மதுரையில் பஜனை மடங்களில் சின்ன வயதில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பாடுவேன். அப்பவே எனக்கு உச்சஸ்தாயி. பாட்டை நம்பி படிப்பைக் கோட்டை விட்டுட்டேன்.

24 வயசு வரைக்கும் மதுரை தான். அதற்குப் பிறகுதான் நிரந்தரமாகச் சென்னைக்கு வந்து, கஷ்டப்பட்டு முன்னேறிக் குடும்பத்தைச் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தேன்.

எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், நான், எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாரும் சேர்ந்ததே நல்ல டீம் தான். ஒவ்வொருத்தரும் அவரவர் திறமையைக் காண்பிச்சோம். அதனால் படமும் மனசில் நின்னுச்சு. பாட்டும் நின்னுச்சு.

எம்.எஸ்.வி.யோ, கே.வி.மகாதேவனோ பாட்டையும், சூழ்நிலையையும் சொல்லிடுவாங்க. அதை நான் ‘இம்ப்ரூவ்’ பண்ணிப்பேன்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வரும் “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’’ பாடல் பதிவு. அதுக்காக ரிக்கார்டிங் தியேட்டருக்குள்ளேயே ஓடி வந்து மூச்சிரைக்கப் பாடினேன். (பாடிக் காண்பிக்கிறார்)

குரலிலேயே நடிச்சுருவேன். அந்த ‘பா’வத்தைக் கொண்டு வந்துருவேன். அந்த இன்வால்வ்மென்ட் இல்லைன்னா பாட்டுக்கு உசிர் இருக்காது. ‘யார் அந்த நிலவு’ பாட்டைக் கேட்டுட்டு ஒரு வாரம் டைம் கேட்டுட்டு நடிச்சார் சிவாஜி.

ராமநாதய்யர் போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் தொடர்ந்து ரிகர்சல் பண்ணச் சொல்லி வேலை வாங்குவாங்க.. அதனால் பாருங்க.. பாட்டு நிக்குது..

காஞ்சிப்பெரியவரோட ஒரு நாள் வாழ்க்கையைப் பாடி கேஸட் போட்டபோது, அதைக் கேட்டுட்டு உடனே திருஷ்டிக்காக தேங்காய் உடைக்கச் சொன்னார் பெரியவர். பக்திப்பாடல் பாடினா மனசு உருகணும். அந்தப்பாடல்கள் என்னைக்கும் டி.எம்.எஸ் பெயரைச் சொல்லிக்கிட்டிருக்கும்’’ – சொல்கிறார் ஒரு ஆர்வத்துடன்.

தமிழ் உச்சரிப்புச் சுத்தத்தைப் பற்றிக் கேட்டபோது, சுருதி சுத்தமான பதில்.
“பாட்டைப் பொறுத்தவரை எனக்கு நான்கு குருமார்கள். அழுத்தந் திருத்தமான உச்சரிப்புக்கு கே.பி.சுந்தராம்பாள் (‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலைப் பாடுகிறார்)

குரல் பாவத்திற்கு எம்.எஸ்.சுப்புலெட்சுமி, (‘அகம் குளிர’- பாடல்)
சாரீரத்திற்கு தியாகராஜ பாகவதர் (‘மன்மத லீலை வென்றார் உண்டோ?’)
சிரமம் இல்லாமல் பாடுறதுக்கு மணி அய்யர் இவர்களாலே தான் நான் பாடிக்கிட்டிருக்கேன்..’’ என்று சொல்கிற டி.எம்.எஸ்.ஸூக்குச் சமீபத்தில் கிடைத்திருக்கிற பட்டம் ’’தமிழிசை வேதவாணர்’’.

– 6.11.1997 தேதியிட்ட ‘குமுதம்’ வார இதழில் நான் எழுதி வந்த ‘நதிமூலம்’ தொடருக்காக, அவருடைய சொந்த ஊரான மதுரைக்குச் சென்று, அவருடைய வீட்டைப் பார்த்து, உறவினர்கள், நண்பர்கள் பலரையும் சந்தித்துவிட்டு, சென்னையில் உள்ள வீட்டில் டி.எம்.எஸ்.ஸைச் சந்தித்தபோது கொடுத்த பேட்டி.

– மணா
*

You might also like