புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!

ஆண்ட சாதி, ஆதிக்‍க சாதி என்றெல்லாம் சொல்லிக்‍கொண்டு, அடுத்தவரை அடக்‍கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்‍கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள்.

ஆனால், ஒடுக்‍கப்பட்ட மக்‍களை மட்டும் தங்கள் காலுக்‍குக் கீழே காலணியைவிட கீழாக நினைத்து மிதித்துக்‍ கொண்டே இருந்தார்கள். காலணியைவிட கேவலமாக மதித்த மக்‍களை காலனி மக்‍கள் என்றும் அழைத்தார்கள்.

ஆண்டாண்டு காலமாய் அடக்‍கி ஒடுக்‍கப்பட்ட ஒரு இனம், அடுத்தவர்களின் அளவுக்‍கு மீறிய அத்துமீறல்களால் அவலநிலைக்‍கு ஆளாகும்போது, சிங்கம்போல் கிளர்ந்தெழுந்து தன்னை அழித்தவர்களை எல்லாம் சின்னாபின்னமாக்‍கி விடுவார்கள் என்பதை உணர்த்தும் ஒரு பெயராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பெயர்தான் ‘பூலான்தேவி’.

‘Bandit Queen’ என்றும், தமிழில் சம்பல் பள்ளத்தாக்‍கு கொள்ளைக்‍காரி என்றும் அச்சுறுத்தி வந்த பூலான்தேவி இளமைக்‍காலம் ஒரு கொடிய காலம்.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் பள்ளத்தாக்‍கின் ஜலான் மாவட்டத்தில் “மல்லாஸ்” எனப்படும் மிகவும் ஒடுக்‍கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் பூலான்தேவி.

படகு ஓட்டி தங்கள் பசியை போக்‍கிக்‍ கொண்டிருந்தது பூலான்தேவி குடும்பம்.

பூலான்தேவிக்‍கு 4 சகோதரிகள். வாழ்க்‍கையின் அர்த்தம் விளங்காத 11 வயதில் பூலான் தேவிக்‍கு திருமணம். பூலான் தேவியை திருமணம் செய்து கொண்ட புட்டி லால் என்பவன், பூலான்தேவியை விட 20 வயது மூத்தவன்.

ஏற்கெனவே 2 பெண்களை திருமணம் செய்து கொண்டவன். பூலான் தேவிக்‍கு திருமண வாழ்க்‍கையும் கொடூரமாகக் கழிந்தது.

உயர்சாதி மக்‍களுக்‍கு, ஒடுக்‍கப்பட்ட சாதி மக்‍கள்தான் ஒரே பொழுதுபோக்‍கு. அவர்களை அடிப்பார்கள், உதைப்பார்கள், கொல்வார்கள், பெண்களின் கற்பை சூரையாடுவார்கள்.

இப்படித்தான் ஒருநாள் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவன், பெற்றோர்கள் மற்றும் சகோரிகள் முன்னிலையில் பூலான் தேவியை வன்புணர்வு செய்தான்.

வாழ்க்‍கையில் வெறுப்புற்ற பூலான் தேவி, தனது சகோதரிகளை அழைத்துக்‍ கொண்டு ஊரைவிட்டே ஓடினாள். பூலான் தேவியின் பெற்றோர்கள் காவல்துறையின் அடக்‍கு முறைக்‍கு பலியாகி சிறையில் அடைக்‍கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் பிடியில் பூலான்தேவி சிக்‍கினார். காவல்துறையினரும் பூலான் தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தார்கள்.

இளமையிலேயே வறுமைக்‍கு வாழ்க்‍கைப்பட்ட பூலான்தேவிக்‍கு பசி, பட்டினி, பலாத்காரம், அடக்‍குமுறை என வாழ்க்‍கை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த வாழ்க்‍கை போராட்டம்தான் பூலான் தேவியை சமுதாயத்தில் உலவும் புல்லுருவிகளை எதிர்த்துப் போராடும் போராளியாக மாற்றியது.

பூலான்தேவியின் மீதான வழக்‍கு விசாரணையின்போது, 15 வயதில் பூலான்தேவி கொடூரத் தாக்‍குதலுக்‍கு ஆளாகி இருந்ததை உணர்ந்த நீதிபதி, கருணை காட்டி, பூலான் தேவியை விடுதலை செய்தார்.

விடுதலையாகி சரியாக ஓராண்டு ஆனபின், குஜார்சிங் என்ற கொள்ளைக்‍காரன் பூலான் தேவியை கடத்திச் சென்றான்.

இந்தக்‍ கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான், பூலான்தேவியின் வாழ்க்‍கை பாதை மாறியது. குதிரையேற்றம் கற்றுக்‍ கொண்டார், துப்பாக்‍கி சுடும் பயிற்சியையும் பெற்றார்.

இந்தக்‍ கொள்ளைக் கும்பலில் இருந்த விக்‍ரம் மல்லா என்பவன், பூலான் தேவிக்‍கு பாதுகாப்பாக இருந்தான். இருவருக்‍கும் இடையே காதல் மலர்ந்தது. கொள்ளைக் கும்பல் தலைவன் குஜார்சிங் கொல்லப்பட்டான்.

விக்‍ரம் மல்லா கொள்ளைக் கும்பல் தலைவராகி பூலான் தேவியை மணந்து கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தனது முதல் கணவனான புட்டி லாலை சந்தித்தார். அவனை பிரம்பால் அடித்து தனது ஆத்திரத்தை பூலான் தேவி தீர்த்துக்‍ கொண்டார்.

விக்‍ரம் மல்லா கொல்லப்பட்ட பின், தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான் தேவியை சிறைப்பிடித்து, வன்புணர்வுக்‍கு ஆட்படுத்தினர். அவர்களிடமிருந்து தப்பித்த பூலான் தேவி, மான் சிங் என்ற கொள்ளைகாரனுடன் இணைந்து ஒரு கொள்ளைக்‍ கூட்டத்தை உருவாக்‍கினார்.

விக்‍ரம் மல்லாவை கொன்ற 22 பேரை வரிசையில் நிற்க வைத்து குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார் பூலான் தேவி.

இந்தியாவையே உலுக்‍கிய இந்த சம்பவத்திற்கு பிறகு பூலான் தேவியின் வாழ்க்‍கையில் திருப்பம் ஏற்பட்டது. தன்னையும் தன் இனத்தையும் கொடுமைப்படுத்தியவர்களை எல்லாம் கொன்றுகுவித்து பகை முடித்தார் பூலான் தேவி.

கொலை, கொள்ளை வழக்‍குகளில் 1983ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங் முன்னிலையில், பூலான் தேவி சரணடைந்தார்.

11 ஆண்டுகளுக்‍கு மேலாக சிறையில் இருந்த பூலான்தேவி, தன்னை விடுதலை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான் தேவியை விடுதலை செய்தது.

விடுதலைக்‍குப் பின் மனம் மாறி பொது வாழ்க்‍கையில் ஈடுபட்ட பூலான் தேவி, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து எம்.பி. ஆனார். நாடாளுமன்றத்தில் ஒடுக்‍கப்பட்ட மக்‍களின் குரலாய் ஒலித்தார்.

“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் சுயசரிதை எழுதினார். கடந்த 2001ம் ஆண்டு டெல்லியில் அவர் இல்லத்திலிருந்து காரில் புறப்படும் போது, முகமூடி அணிந்த 3 நபரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

உயர்சாதியைச் சேர்ந்த சேர்சிங் ராணா குற்றவாளியாக அறிவிக்‍கப்பட்டார். உயர் வகுப்பைச் சேர்ந்த அவர்களை கொலை செய்ததற்காக பழி வாங்கவே, பூலான்தேவியை கொன்றதாக அவன் வாக்‍குமூலம் அளித்தான்.

ஒடுக்‍கப்பட்ட சமூகத்தில் பிறந்து, குரலற்றவர்களின் கதறலாக வாழ்ந்து, வைராக்‍கியத்தால் போராளியாக உயர்ந்து சமூக அவலங்களுக்‍கு எதிராக ‘கொள்ளைக்‍காரி’ என்ற பட்டத்துடன் கொடியவர்களை, கொலைவெறி தாண்டவமாடிய பூலான்தேவியின் வாழ்க்‍கை ‘Bandit Queen’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது. பூலான்தேவியின் வாழ்க்‍கை படம் மட்டும்தானா?. பலருக்‍கு பாடம் அல்லவா?.

(பூலான்தேவியின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 10, 1963) இன்று)
✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like