அன்றைய திமுகவில் நன்கு அறியப்பட்ட பெயர் உடுமலை ப.நாராயணன். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.
திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர்.
எஸ்.ஜே. சாதிக் பாடசா இவரின் வழியில் திமுகவில் செயல்பட்டவர்.
1971-ல் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக இவருக்காக ஒரு ஜீப்பை வழங்கினார். அப்பொழுது இந்தியாவில் யாரும் வெற்றி பெறாத அளவுக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் உடுமலை ப.நாராயணன்.
கடைசி வரை உடுமலைப்பேட்டையில் சீனிவாச நாயக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். மிதிவண்டியில் தான் பயணம் செய்துள்ளார். யாராவது காரில் வந்து அழைத்துச் சென்றால்தான் உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகும் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ளவும் இல்லை. வாங்கவும் இல்லை.
அண்ணா, சம்பத், நாவலர், சி.பி.சிற்றரசு, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற பெரும் ஆளுமைகளின் தொடர்பில் இருந்தவர்.
இத்தனைக்கும் அவர் வடபுலத்து ராஜபுத்திர இனத்தைச் சார்ந்தவர்.
அவரின் பெயரில் உடுமலை நகரில் நாராயணன் காலனி இருந்தது. பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் உடுமலை நாராயணன் பெயரில் ஒரு வீதிக்குப் பெயர் வைத்துள்ளனர்.
எளிமைக்குப் பெயர்போன உடுமலை ப.நாராயணன் நினைவு நாள் இன்று (ஜூலை – 26).
– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.