மணிப்பூர் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

“சொந்தச் சகோத‍ர‍ர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’’ – பாரதியின் வரிகளுக்குக் கண் முன்னாலிருக்கிற உதாரணத்தைப் போல வெப்பக் கதகதப்புடன் இருந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம்.

சில மாதங்களாகவே சாதித் தீயினால் துண்டுபட்டுக் கிடக்கிறது மணிப்பூர்.

தொடர்ந்து அங்கு எத்தனை மோதல்கள்? தீ வைப்புகள்? மனம் பதைபதைக்க வைக்கும் அவமானங்கள்?

பலர் உயிர்ப் பலியாகி இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திலேயே வாழ நிர்கதியற்று முகாம்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள் அல்லது மற்ற மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்.

பழங்குடிப் பெண்களைத் துகிலுரிந்து தெருக்களில் காட்சிப்படுத்திய அவலம் அங்கு நடந்த அநாகரீகத்தின் உச்சம்.

சர்வதேச அளவில் உள்ள ஊடகங்கள் இந்தியாவைக் கண்டித்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொதுவெளியிலும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

பலரையும் அதிர வைத்த அந்த வீடியோவை எடுத்தவரைக் கைது செய்த‍தாகச் சொல்கிறார்கள். குரூரக் கும்பலாக அந்தச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா?

எதிர்க்கட்சிகள் பிரதமரைப் பதில் தரச்சொல்லி முழக்கமிடுகின்றன. வழக்கமாக பிரதமரின் குரல் கேட்கும் ‘மன் கீ பாத்’தில் கூட அவரது குரல் ஒலிக்கவில்லை.

சில மாதங்களாகவே மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தைப் பற்றிய அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறார் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர்.

பதவியை விட்டு விலகப் போவதாக முதலில் அறிவித்த மணிப்பூர் முதலமைச்சர் பிறகு பின்வாங்கியிருக்கிறார்.

முதலமைச்சர் மற்றும் மணிப்பூர் மாநிலக் காவல்துறையின் சார்புநிலை பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

அங்குள்ள இணையத் தொடர்பு கூடத் துண்டிக்கப்பட்டு அங்குள்ள உண்மை நிலவரம் வெளியுலகிற்குத் தெரிய வராத நிலை நீடிக்கிறது.

எவ்வளவு காலத்திற்கு மௌனமாக இந்த அநாகரீகமான அவலங்களை அரசு கடந்துவிட முடியும்?

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க தான் மணிப்பூரிலும் ஆட்சியில் இருக்கிது.

ஆனாலும்,  உரிய வித‍த்தில் எந்தச் சாதியச் சார்பும் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க ஏன் தயங்கிக் கொண்டிருக்கிறது?

விவசாயிகளின் போராட்டத்தின்போது மத்திய அரசு காட்டிய காலதாம‍த‍த்தை இதிலும் காட்டக்கூடாது.

நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தேவையற்ற தாமதங்களால் ஒருபோதும் தீர்வு ஏற்படப் போவதில்லை.

– யூகி

You might also like