கல்விக்குழுவிற்கு அளிக்கப்பட்ட 36 பரிந்துரைகள்!

– அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தமிழ்நாடு அரசின் கல்விக் குழுவிற்கு அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3) சார்பில் 36 பரிந்துரைகளை அளித்திருக்கிறார் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.உமாமகேஸ்வரி.

அந்த பரிந்துரைகளின் விவரம்.

1. ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும்.

2. வகுப்பறைப் பற்றாக்குறையை சரி செய்ய புதிய வகுப்பறைகளை உடனடியாகக் கட்டித் தர வேண்டும்.

3. கழிப்பறைப் பற்றாக்குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

4. தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசே உடனடியாகப் பொறுப் பேற்க வேண்டும்.

5. பாடப் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும். பாடங்களைக் குறைக்க வேண்டும்.

குறிப்பாக, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு சமூக அறிவியல் பாடங்கள் மிக அதிகமாக இருக்கின்றது. அதே போன்ற அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் கள ஆய்வு செய்து பாடங்களைக் குறைக்க வேண்டும்.

6. பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கைக் குறைவாக நிகழ்வதால் எதிர்காலத்தில் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியர்கள், கணக்கு, அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்கள் அருகிவிடும் சூழல் உருவாகும்.

இந்த நிலையை மாற்ற நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.

7. மேல்நிலைப் பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு வகுப்பான 10 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் 6 , 7 ,8 வகுப்பு மாணவர்களுக்குத் தரப்படாததால் தரமான கல்வி எப்போதும் கிடைப்பதில்லை. ஆகவே இந்த நிலை மாற வழிவகை செய்ய வேண்டும்.

8. மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 2000 / 3000 என இல்லாமல் 750 / 800 என்ற அளவிற்குக் குறைக்க வேண்டும்.

தற்காலச் சூழலுக்கு அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களை கவனிப்பது இயலவில்லை.

9. வளரிளம் பருவக் குழந்தைகளைக் கையாள்வதற்கு சவாலாக இருப்பதால் ஒவ்வொரு பள்ளிக்கும் உளநல ஆலோசகர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்.

10. உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் EMIS பணிக்கு தனியாக ஒருவரைக் கட்டாயமாக நியமிக்க வேண்டும்.

11. மருத்துவ விடுப்பில், பிள்ளைப் பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக ஒருவரை நியமித்து கற்றல் – கற்பித்தல் பணியில் ஈடுபடுத்துதல் அவசியம்.

12. கல்விக்கான அனைத்துத் திட்டங்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.

13. தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விளையாட்டுத் திடல் கட்டாயம் தேவை. அதே போல விளையாட்டு ஆசிரியர்களும் நியமனம் தேவை. (முதல் வகுப்பு முதல் )

14. மழலையர் வகுப்புகள் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் அவசியம் வேண்டும். ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும்.

15. கற்றல் – கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும் உரையாடுதல், பகிர்தல் வகுப்பறைகளாக கட்டாயம் மாற்றம் பெற வேண்டும்.

16. CCE மதிப்பீட்டில் புத்தக வாசிப்பு பகிர்வுக்கு மதிப்பெண் வழங்கி கிரேடு போடும் முறை வர வேண்டும்.

17. நூலக வாசிப்பு 1 – 12 வகுப்புகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டும்.

18. ஆசிரியர்கள் வாசிப்புக்குள் வர ஆணைகள் வழியாகவாவது கட்டாயமாக்க வேண்டும்.

19. 20 ஆண்டுகால பணி அனுபவம் மிக்க ஆசிரியர் தலைமை ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிய, மாவட்ட , மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

20. வருடத்தில் இரு முறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தரங்கங்களை நடத்தி ஆசிரியர்களின்புதிய சிந்தனைகளைத் தொகுக்க வேண்டும்.

உமா மகேஸ்வரி

21. அதிகாரிகள் கீழே உள்ளவர்களை வெறுமனே அச்சுறுத்தக் கூடாது. கற்றல் – கற்பித்தலை குறித்த பகிர்வுகள், பிரச்சனை சார்ந்த கள எதார்த்தங்களை உண்மை அறியும் நபர்களாக இருக்க வேண்டும்.

22. மாற்றுத் திறனாளி, CWSN கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் உள்ள புத்தகங்கள் வழங்கப் பட வேண்டும்.

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு  Children with Special Needs க்கு உருவாக்க வேண்டிய பாடத்திட்டம் பற்றியது.

இக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், பாடநூல், இதர வேலைகள் பின்பற்றப்படுகின்றன.

அவர்களது திறனுக்கு ஏற்ப பாட நூலை வடிவமைக்க, அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து பாடத்திட்டம் – பாடநூல் தயாரிப்பு செய்ய வேண்டும்.

ஏனெனில் அவர்களது திறன்களை பொருட்படுத்தாமலேயே வருடா வருடம் அவர்களுக்கு தேர்ச்சி என்ற நிலையைக் கொடுத்து, அவர்களுக்கான பொதுத் தேர்வு சமயங்களில் தேர்வு எழுத Scribe ஆக ஆசிரியர்களைக் கட்டாயமாக பணியமர்த்தும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலை மாற வேண்டும் எனில் , CWSN குழந்தைகளுக்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு எளிமைையாக்கப்பட வேண்டும்.

அவர்களது கற்றல் குறைபாடுகளுக்கேற்பவே வினாத்தாள்கள் வடிவமைைப்பு, தேர்வுகள் அமைய வேண்டும்.

CWSN குழந்தைகளுக்காக நமக்கான கல்வித் திட்டத்தில் நிதி ஒதுக்குகின்றனர். அதை அடிப்படையான பாடத்திட்ட வடிவமைப்பிலிருந்தே எடுத்து வர வேண்டும்.

அதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்தால் தான் உண்மையான சமத்துவக் கல்வி அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும்.

23. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள், தனித்திறன்கள், சாதனைகள் குறித்து Profile பள்ளியில் பராமரிக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர், ஆணையர், கல்விச் செயலர் என அனைவருக்கும் தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட பணியாளர்களின் Profile பராமரிக்க வேண்டும்.

24. மேற்சொன்ன profile வழியே தான் ஆய்ந்து ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பித்து விருது பெறும் நடைமுறை மாற வேண்டும்.

25. தாய்மொழி வழிக் கல்வியை முதல் 5 வகுப்புக்கு கட்டாயமாக்க வேண்டும்.

26 ஆங்கில வழிக் கற்பித்தலுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

27. அரசு + அரசு உதவி பெறும் பள்ளிகளை இணைத்து அரசுப் பள்ளிகளாகவே நடத்த வேண்டும்.

28. வாடகை கட்டிடங்களாக இயங்கும் அரசுப் பள்ளிகளை அரசு மீட்க வேண்டும்.

29. கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டு பின் 25% மாணவர் தனியார் பள்ளிக்கு அனுப்பும் முறை நீக்கப்பட வேண்டும்.

அதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்து மாற்ற வேண்டும்.

30. BRT என்ற பணியிடமே அவசிபமில்லை, அவர்கள் தகவல் சேகரிக்கும் எந்திரங்களாக மட்டுமே செயல்படுவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு அவர்களை பணியமர்த்த வேண்டும்.

31.பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கானது சரியாகத் திட்டமிடப்பட வேண்டும். 
தற்போதைய ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள் என்பவை வெறும் சடங்காக இருக்கின்றன.

SSA, RMSA, தற்போது சமக் க்ஷர சிக்ஷா அபியான் திட்டம் இவை அனைத்தும் வெறும் ஆவணத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

பாடப்பொருள்களை மட்டும் மையப்படுத்தி சில பயிற்சிகள் திட்டமிடுகின்றனர். பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் மனதில் வைத்து கடமைக்காக அவற்றைப் பற்றி உரையாடுதல் 10% மட்டும் நடக்கிறது.

காரணம் பயிற்சி தருபவர் என்பவர் ஆசிரியர்களுக்குள் ஒருவராகவே இருப்பார். மீதி 90% பயிற்சி வெற்று அமர்வுகளாகவே கழிகின்றன.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நடத்தும் போது, வகுப்புக்கேற்ற பாடப் பொருள் அறிவு சார்ந்த பயிற்சி தருவது ஒரு வகையாக இருக்க வேண்டும்.

மற்றொரு வகையில் கற்பித்தல் திறன்களை வளர்த்துக் கொள்வது, வகுப்பறைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன்கள், இன்றைய குழந்தைகளைக் கையாள்வதில் உள்ள சவால்களை சந்திப்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் திட்டமிடவேண்டும். பாடப் பொருள் சுமை குறித்தும் விவாதம் அவசியம்.

ஒவ்வொரு மாவட்ட DIET நிறுவனமும் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளிகளையும் கள ஆய்வு செய்திருக்க வேண்டும்.

அதற்கேற்ப பெரும்பான்மை சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளைப் பயிற்சியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அப்போது தான் ஆசிரியர்களுக்கு பயிற்சியில் நம்பிக்கையும் ஆர்வமும் பிறக்கும்.

இவை மட்டுமன்றி, ஒவ்வொரு பள்ளியின் வெற்றிகள் செயல்பாடுகள், குறித்தும் தொடர்ந்து ஆவணம் செய்ய வைத்து தொகுத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதும் பயிற்சி நடத்தும் விரிவுரையாளர்கள் பின்பற்ற வேண்டும்.

இவற்றின் தொடர் செயல்பாடாகவே ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் செயல்களும் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஊடகம் மற்றும் கலைத்துறை சார்ந்தோர் பங்கேற்று நடத்தும் உரையாடல் சார்ந்த பயிற்சியும் திட்டமிடலாம்.

இது ஆசிரியர்களுக்கு தங்கள் பணி சார்ந்த தொலைநோக்குப் பார்வையை அளிக்கும்.

அவற்றை DIET முன்னின்று நடத்திட வேண்டும். எப்போதும் பள்ளி – DIET உடனான நெருக்‍‍‍கமான உறவு இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட DTET விரிவுரையாளருக்கும் மாவட்டத்தின் ஆசிரியர்களது பன்முக செயல்பாடு மற்றும் திறன்கள் குறித்தான விபரங்கள் தங்கள் நிறுவன அமைப்புகளில் பாதுகாக்க வேண்டும்.
தற்போது இணைய வழிப் பயிற்சியை முன்னெடுக்கின்றனர்.

அவை தவிர்க்கப் பட வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மைசூர் உள்ளிட்ட RIE மையங்களில் தரப்படும் பயிற்சிகள் மிக முக்கியமானவை, சிறப்பானவை.

அவர்கள் வழங்கும் பயிற்சிக்களை சில ஆயிரம் ஆசிரியர்கள் கூட பெற்றிருக்கவில்லை.

அதைப் போன்ற பொருண்மைகளுடன் தமிழக ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

32. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவசியமான செயல்களை செய்ய வேண்டும்.

33. ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் வாக்குச் சாவடி அலுவலர் பணி முதலானவை ஆண்டு முழுவதும் தருகின்றனர்.

கல்வித்துறை அல்லாத பிற துறைகளின் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது. தரமான கல்விக்கு இது போன்ற பணிகள் தடையாக உள்ளன.

34. தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை அடிப்படைக் கல்வியைப் பெறும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வரும் பொழுது தமிழ் வாசிப்புப் பயிற்சி அற்றவர்களாக வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளைக் கண்காணிப்பது போலவே தனியார் பள்ளிகளில் அடிப்படை வாசிப்புப் பழக்கம் எண்ணறிவு எழுத்தறிவு ஆகியவை கண்காணிக்கப் பட வேண்டும்.

இதற்காக அடிப்படை எழுத்துகள் அறியாத குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற ஆய்வு அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்விக்கு உறுதி செய்ய இயலும்.

35. தற்போது அரசு பள்ளிகளில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் பலவும் வெறும் ஆவணங்களாக இருக்கின்றன.

உண்மையாக செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போக்ஸோ குழு, வாசிப்பு இயக்கம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

36. பள்ளி மேலாண்மைக் குழு வழியாக பள்ளிக் குழந்தைகளது கல்வியை முழுமையாக கவனிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இது முற்றிலும் ஆபத்து.

ஏனெனில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பல பள்ளிகளில் அரசியல் சார்பு உடையதாக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலை நீடிக்கிறது.

EMIS தளத்தில் இந்த குழுவின் செயல்பாடுகள் குறித்தும் பதிவேற்றம் செய்வதாக கல்வித்துறை செயல்பாடுகள் திட்டமிடப்படுகின்றன.

ஆனால் அனைத்தும் களத்தில் வெறும் ஆவணங்களாக இருக்கின்றன. ஆகவே கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு தரமான கல்வியை வழங்கும் கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

You might also like