பார்பி – பெண்ணியத்தின் மகத்துவம் சொல்லும் பொம்மை!

ஒரு பொருள், மனிதர், இடம் அல்லது ஒரு படைப்பு என்று ஏதேனும் ஒன்றைப் பார்க்கிறோம். அப்போது, மனதுக்குள் ஒரு உணர்வு பூக்கிறது. காலம் மாறும்போது, அது தொடர்பான எண்ணம் அடியோடு மாறுகிறது.

அதன்பிறகு, எதைப் பார்த்து மகிழ்ந்தோமோ அதுவே துக்கமானதாக மாறுகிறது; எது அழகாகத் தெரிந்ததோ அதுவே அசிங்கமாகத் தெரிகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

முதன்முறையின்போதே, தொலைநோக்குப் பார்வையோடு நோக்கினால் இந்த சிக்கல் வராமல் இருக்கக்கூடும். அப்படியொரு விஷயத்தைப் பேசுகிறது ஹாலிவுட் படமான ‘பார்பி’.

பார்பி பொம்மை பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்று. அதை அற்புதமான படைப்பு என்று கொண்டாடுவோர் ஒருபுறம் இருக்க, அது ஆணாதிக்கப் பார்வையின் வெளிப்பாடு என்ற எதிர்ப்பு இன்னொரு புறம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

பல காலமாகத் தொடரும் இரு வேறுபட்ட பார்வைகளை ஒருகோட்டில் இணைக்கிறது க்ராடா கெர்விக் இயக்கத்தில் மார்கட் ராஃபி, ரியான் கோஸ்லிங் உட்படப் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பார்பி’ திரைப்படம்.

பார்பிக்களின் உலகம்!

பார்பி என்ற பெண் பொம்மையோடு கென் என்ற ஆண் பொம்மையும் சேர்ந்தே சந்தையில் அறிமுகமானது.

மேட்டெல் எனும் நிறுவனமே அவற்றைத் தயாரித்தது; அதன் நிறுவனர்களின் ஒருவரான ரூத் ஹேண்ட்லர் என்ற பெண்மணி தான் பார்பி பொம்மையை வடிவமைத்தவர் என்று சொல்லப்படுகிறது.

அந்த தகவல்களைக் கொண்டு, மேட்டெல் உடன் இணைந்து ‘பார்பி’யைத் தயாரித்திருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

டைட்டில் காட்சியில் டபிள்யூபி எனும் லோகோவே ‘பிங்க்’ நிறத்தில் வடிவமைக்கப்பட்டதைக் கண்டவுடன், இதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது புரிந்துவிடுகிறது.

அதற்கேற்ப, பார்பிக்களும் கென்களும் தனியாக ஒரு உலகத்தில் வாழ்வது போல ‘பார்பிலேண்ட்’ எனும் இடத்தில் இக்கதை நிகழ்கிறது.

பார்பிலேண்ட்டில் பார்பிக்களின் ஆட்சியே நடக்கிறது; அதாகப்பட்டது, ஆண்களான கென்கள் வெறுமனே கடற்கரையில் விளையாடுவது, ஓய்வாக இருப்பது என்று பொழுதைக் கழிக்கின்றனர்.

சமூகத்தில் இருக்கும் எந்த வேலையானாலும், எப்படிப்பட்ட அதிகார பீடமாக இருந்தாலும், அவற்றில் பார்பிக்களே இடம்பெறுகின்றனர்.

இந்தச் சூழலில், முதன்முதலாக உருவாக்கப்பட்ட ‘ஸ்டீரியோடைப்’ பார்பிக்கு (மார்கட் ராஃபி) ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

ஹீல்ஸ் அணிந்தாற் போல் உயர்ந்து நிற்கும் அதன் குதிகால்கள், திடீரென்று தட்டையானதாக மாறுகின்றன. ‘செல்லுலைட்’ எனப்படும் தோல் பிரச்சனையும் வருகிறது.

அதையடுத்து, ‘அக்லி’ பார்பியை அவர் தேடிச் சென்று காரணம் கேட்கிறார். ’பூமியில் வாழும் யாரோ ஒருவர் பிசகலாகச் சிந்தித்ததே, என்னையும் உன்னையும் பாதிக்கிறது.

நீ அங்கு சென்றால் மட்டுமே அதைச் சரி செய்ய முடியும்’ என்று ‘அக்லி’ பார்பி சொல்கிறது. அதோடு, இந்த நிலைமை வேறு பார்பிக்களுக்கும் நேராமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் எச்சரிக்கிறது.

விபரீதத்தை உணர்ந்து, பார்பிலேண்ட்டில் இருந்து பூமிக்குப் பயணம் மேற்கொள்கிறார் ‘ஸ்டீரியோடைப்’ பார்பி.

அவரது ஜோடியான ‘பீச்’ கென்னும் (ரியான் கோஸ்லிங்) அந்த வாகனத்தில் மறைந்து பயணிக்கிறார். அதையறிந்து பார்பி ஷாக் ஆனாலும், அவர் துணைக்கு வருவதை ஏற்றுக்கொள்கிறார்.

பூமியில் எங்கும் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது; பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை.

பெண்களை ஒரு போகப்பொருளாக நோக்கும் எண்ணம் பெண்களிடமே நிறைந்திருக்கிறது.

அதைக் கண்டு மனம் வெம்பும் பார்பி, தன்னை ஆராதிக்கத் தற்போதைய இளம்பெண்கள் தயாராக இல்லாததைக் கண்டு வருத்தமடைகிறார்.

அதற்குள், பார்பி பூமிக்கு வந்திருப்பதைக் கண்டறிகிறது மேட்டெல் நிறுவனம்.

அவரை மீண்டும் பார்பிலேண்ட்டுக்கு கொண்டு செல்லும் பணிகளை மேற்கொள்கிறது.

அதற்குள், பார்பிலேண்ட் மாற்றங்களுக்குக் காரணமாக விளங்கும் நபரைச் சந்திக்கிறார் பார்பி. அவரது பெயர் குளோரியா (அமெரிக்கா பெரைரா). அவது மகள் சாஷா. இருவரும் மேட்டெல் பிடிக்குள் பார்பி சிக்காமல் காப்பாற்றுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, ஆணாதிக்கத்தால் வெறுமையான மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குளோரியாவைச் சமாதானப்படுத்துவதற்காக, அவரை ‘பார்பிலேண்ட்’ அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார் ‘ஸ்டீரியோடைப்’ பார்பி.

சாஷாவும் அவர்களுடன் செல்லச் சம்மதிக்கிறார். இந்த களேபரங்கள் நிகழ்ந்து முடிவதற்குள், பூமியில் நிலவும் ஆணாதிக்கத்தை பார்பிலேண்ட்டிலும் அமல்படுத்த முடிவெடுக்கிறார் ‘பீச்’ கென்.

அதனால், பார்பிலேண்ட் திரும்பும் ‘ஸ்டீரியோடைப்’ பார்பி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளைச் சந்திக்கிறார்.

அதிகார பீடத்தில் இருந்த பார்பிக்கள், வெறுமனே அழகுப் பொம்மைகளாகவும் கென்களுக்கு சேவை செய்யத் துடிப்பவர்களாகவும் திரிகின்றனர். குளோரியாவும் சாஷாவும் கூட அதனைக் கண்டு அதிர்கின்றனர்.

பழையபடி பார்பிலேண்ட் மாற வேண்டும் என்று எவ்வளவோ கெஞ்சியும் பார்பியின் வார்த்தைகளை ‘பீச்’ கென் ஏற்பதாக இல்லை; ‘இவ்வளவுநாள் பார்பிலேண்டில் இருந்த பார்பிக்களின் ஆதிக்கம் முடிவுற்று கென்களின் ஆட்சியே இனி நிலவும்’ என்பதில் ‘பீச்’ கென் உறுதியாக இருக்கிறார்.

ஆண்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமே பெண்களின் வேலை என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார்.

‘ஸ்டீரியோடைப்’ பார்பி தவிர மற்ற பார்பிக்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்தச் சூழலில், மீண்டும் ‘பார்பிலேண்ட்’டை பழைய நிலைக்குக் கொண்டுவர ‘ஸ்டீரியோடைப்’ பார்பிக்கு குளோரியாவும் சாஷாவும் உதவுவதாக உறுதியளிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் கென்கள் கை ஓங்காமல் இருப்பதற்கான வேலைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘பார்பி’யின் மீதி.

துள்ளல் இசை!

‘பார்பி’ பொம்மையையோ, ஆங்கிலப் படங்களையோ அறியாதவர்கள் கூட இப்படத்தைப் பார்க்கையில் குதூகலமாக உணர முடியும். அதனைச் சாதித்திருக்கிறது மார்க் ரான்சன், ஆண்ட்ரூ வியாட்டின் இசை.

படம் முழுக்க விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைந்திருந்தாலும், அவற்றுக்கு இடம் தந்து ‘பளிச்’சென்று கதை சொல்ல உதவியிருக்கிறது ரோட்ரிகோ ப்ரீடோவின் ஒளிப்பதிவு.

பார்பிலேண்ட், பூமியை வித்தியாசப்படுத்தும் ‘படத்தொகுப்பு உத்தி’களை வடிவமைத்தது முதல் சீராகக் கதை நகர உதவியது வரை, ‘பார்பி’யை உருவாக்குவதில் தன் சிரத்தையை வெளிப்படுத்தியிருகிறார் படத்தொகுப்பாளர் நிக் ஹாயோ.

சாரா க்ரீன்வுட்டின் தயாரிப்பு வடிவமைப்பு, பொம்மைகளின் உலகை நிஜமென்று நம்பச் செய்கிறது.

மேட்டெல் உருவாக்கிய ‘பார்பி’யை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் தயாராகியுள்ளன.

அவற்றில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு இக்கதைக்கு உருவம் தந்துள்ளது இயக்குனர் க்ராடா ஜெர்விக் மற்றும் நோவா பாம்பாக் இணை.

பெண்ணியம் எனும் கருத்தாக்கத்தை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘பார்பி’ எனும் பொம்மை, ஒருகட்டத்தில் அழகை மையப்படுத்தும் நுகர்வுக் கலாசாரத்தின் அடையாளமாக மாறிப்போனதைச் சுருங்கச் சொல்லிப் புரிய வைக்கிறது க்ராடா ஜெர்விக்கின் திரைப்பார்வை.

இந்தப் படத்தில் ‘ஸ்டீரியோடைப்’ பார்பியாக வரும் மார்கட் ராஃபியின் கொஞ்சும் மொழி சட்டென்று நம்மை ஈர்க்கிறது. அதற்கிணையாக, ‘மொக்கை’ வாங்கி வருந்தும் ‘பீச்’ கென் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் ரியான் கோஸ்லிங்.

இவர்களைத் தவிர்த்து பல ஹாலிவுட் பிரபலங்கள் திரையில் வந்து போகின்றனர். நம்மூர் ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் ஹீரோ ஜான் சேனா கூட இரண்டு ஷாட்களில் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

பாலின சமத்துவம்!

இந்த உலகில் பாலின சமத்துவம் இல்லை என்பதனை உணர்த்தும்விதமாக, யதார்த்த நிலையின் இன்னொரு துருவத்தைக் காட்டும்விதமாகவே ‘பார்பி’ பொம்மைகள் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், முதலாவதாக அறிமுகமான பார்பி அழகை முன்னிறுத்த, அதன்பிறகான தயாரிப்புகளும் அப்படியே சந்தைப்படுத்தப்பட்டன என்கிறது இப்படம்.

‘பார்பி’யின் முதல் காட்சியில் பொம்மைகளைக் குழந்தையாக்கித் தங்களைத் தாயாகப் பாவிக்கும் சிறுமிகள் காட்டப்படுகின்றனர்.

அதாவது, குழந்தைமையில் இருந்து தாய்மை பேற்றை நோக்கிச் செல்லும் பெண்களின் பயணத்தை விளையாட்டாகச் சொல்ல பொம்மைகள் உதவின.

ஆனால், நுகர்வுப் பொருளாக பெண்களையும், அவர்களைக் கைப்பாவைகளாக ஆட்டிவைப்பவர்களாக ஆண்களையும் மாற்றியது நுகர்வுக் கலாசாரம்.

அதனை ஒட்டுமொத்த உலகமும் மெல்ல ஏற்றுக்கொண்டதை கேள்விக்குட்படுத்துகிறது ‘பார்பி’ திரைக்கதை.

படத்தின் முடிவில் மார்கெட் ராஃபி பாத்திரம் ஒரு மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது காட்டப்படும். அது எத்தகைய மாற்றத்தின் அறிகுறி என்பது சொல்லப்பட்டிருக்காது.

இதுவே, திரைக்கதையின் பிற்பாதியில் பேசப்பட்ட பெண்ணியத்திற்கும் யதார்த்த வாழ்வில் பெண்களின் நிலைக்குமான வித்தியாசங்களைப் பற்றி நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.

தியேட்டரில் அமர்ந்திருக்கையில் ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் வசனங்களுக்குப் பதின்பருவத்து பாலகர்களும், பெண்ணியத்தை அழுத்திச் சொல்லும் இடங்களில் சிறு பெண்களும் கைத்தட்டி ஆரவாரித்ததைக் காண முடிந்தது.

அதேநேரத்தில், பெண்களால் ஆளப்படுவதாக ‘பார்பிலேண்ட்’ தொடர்வதாகவும், மெல்ல அங்கு ஆண்களுக்கும் சம இடம் கிடைக்குமெனவும் சொல்லப்பட்டபோது, எவ்வித ‘ரெஸ்பான்ஸ்’ஸையும் காண முடியவில்லை.

பார்பி பொம்மை போல அழகுப் பதுமைகளாக வலம் வரத் துடிக்கும் பெண்கள் கூட, ஒருகட்டத்தில் தங்கள் அறிவை.

ஆற்றலை வெளிக்கொணரும் சுயத்தை இந்த உலகம் பொருட்படுத்தும் என்றே விரும்புவார்கள்; அந்த பாலின சமத்துவம் எப்போது வாய்க்கும் என்பதை ‘பேண்டஸி’ வடிவில் சொன்ன வகையில் புதிய காட்சியனுபவத்தைத் தருகிறது இந்த ‘பார்பி’.

– உதய் பாடகலிங்கம் 

You might also like