ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அதன் டைட்டிலுக்கு பெரும் பங்கிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்திற்கு அது சாலப் பொருந்தும்.
ஏனென்றால், அப்பெயரைக் கேள்விப்பட்ட நாள் முதலே அதனைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன்.
ட்ரெய்லரும் கூட அதனை வழிமொழிந்தது. அதையும் மீறி, ‘அநீதி’யைக் காணச் சென்றேன். அப்போது எத்தகைய அனுபவம் கிடைத்தது?
அநீதியான நிகழ்வுகள்!
‘அநீதி’யின் கதை நாம் நேரில் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவே உள்ளது. அவற்றைத் திரைக்கதை ஆக்கித் தந்ததிலும் தனது அனுபவத்தின் மூப்பை உணர்த்தியிருக்கிறார் வசந்தபாலன்.
உணவு டெலிவரி செய்யும் வேலை பார்ப்பவர் திருமேனி (அர்ஜுன் தாஸ்).
வேகமாக வண்டியோட்டுவது, வாடிக்கையாளர் விரும்பும் உணவை உரிய நேரத்தில் ஒப்படைப்பது, அதிக ஆர்டர்களை பெறுவது போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் அவர் தினமும் அல்லல்படுகிறார்.
அது போதாதென்று அவருக்கு ஒரு மனநலப் பிரச்சனையும் இருக்கிறது. எதிர்ப்படும் மனிதர்களால் அவமானப்படும்போது அவர்களைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதை ஆட்டிப் படைக்கிறது.
அதனைத் தணிக்க, ஒரு மனநல மருத்துவரையும் சந்திக்கிறார். அந்த விஷயம் தெரிந்து, அவரோடு தங்கியிருக்கும் நண்பரும் இன்னொருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
திருமேனி தன் நிலையைச் சொன்னதும் நண்பர் அதனை ஏற்றுக்கொள்கிறார்; இன்னொரு நபரோ அருவெருப்பாக நோக்குகிறார்.
ஒருமுறை உணவு டெலிவரி செய்யப்போன இடத்தில் சுப்புலட்சுமியைச் (துஷாரா விஜயன்) சந்திக்கிறார். அவர், அந்த பங்களாவில் பராமரிப்பு வேலைகளைச் செய்து வரும் பெண்.
முதலிரண்டு சந்திப்புகளில் சுப்புலட்சுமியின் கைகளை மட்டுமே காணும் திருமேனி, அதன்பின் அவரை நேரில் கண்டு காதலில் உருகுகிறார். அவரும் அதே மனநிலையில் இருக்கிறார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரது காதலும் வளர்கிறது.
ஒருநாள் இருவரும் சந்தித்துப் பேசுவதை, அந்த வீட்டிலுள்ள மூதாட்டி பார்த்துவிடுகிறார். அவர்தான், அதன் உரிமையாளர். தன்னை மட்டுமல்லாமல், சுப்புலட்சுமியையும் அவர் அவமானப்படுத்துவதைக் கண்டு திருமேனி கொதிக்கிறார்.
அடுத்த சில மணி நேரத்தில், அந்த மூதாட்டி வீட்டில் மயங்கிக் கிடப்பதாகத் தகவல் சொல்கிறார் சுப்புலட்சுமி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், அவர் இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.
அவரது மகளும் மகனும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தகவல் சொல்ல போன் செய்தால், இருவரது மொபைலையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அந்த நேரத்தில், மூதாட்டியின் ஏடிஎம் கார்டை திருடிச் சென்று இரண்டு லட்ச ரூபாய் எடுத்துவிடுகிறார் சுப்புலட்சுமியின் சகோதரர்.
விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பதற்றத்தில் இருக்கும் சுப்புலட்சுமி மூதாட்டியின் பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லாமல் மறைக்க, அதேநேரத்தில் மிகச்சரியாக அவர்களும் இந்தியா வருகின்றனர்.
அவர்களது சுபாவம் முதலாளித்துவத்தின் உச்சம் என்பதால் சுப்புலட்சுமியும் திருமேனியும் மிரண்டு போகின்றனர்.
அதன்பிறகு மூதாட்டி இறந்தது அவர்களுக்கு எப்படி தெரிய வந்தது? திருமேனியும் சுப்புலட்சுமியும் என்னவானார்கள் என்று சொல்கிறது ‘அநீதி’யின் மீதி.
படம் முழுக்க, நாயகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியான நிகழ்வுகளே நிறைந்து கிடக்கின்றன.
அதிகார பலமும் முதலாளித்துவமும் அவரைச் சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது.
அதற்கேற்ப, அவர் கொலைவெறியுடன் அந்த மூதாட்டியின் வீட்டினுள் உலாவுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அசத்தும் காளி வெங்கட்!
ரசிகர்களிடம் எளிதாகக் கொண்டு போய்ச் சேர்க்கும் ஒரு வாய்ப்பை அர்ஜுன் தாஸுக்குத் தந்திருக்கிறது இந்தப் படம். அதைப் புரிந்துகொண்டு, மன பாதிப்புக்கு ஆளான ஒரு இளைஞனின் தோற்றத்தை மிகச்சரியாகக் கடத்தியிருக்கிறார்.
கோபம், இயலாமை, காதலை வெளிப்படுத்தும் இடங்களில் தேர்ந்த நடிகையைப் போலிருக்கிறது துஷாராவின் இருப்பு. தனக்கான பாத்திரங்களைத் தேர்வு செய்வதில் அவர் காட்டும் பொறுமை ஆச்சர்யம் தருகிறது.
இந்த படத்தின் இன்னொரு ஆச்சர்யம், காளி வெங்கட்டின் நடிப்பு. ‘தங்கப்பிள்ளே கோபப்படாதீங்க’ என்று பிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சும் அவரது குரலில், நம் மனது இளகிக் கரைந்துவிடுகிறது. அவரது அசத்தும் நடிப்பே, கொலைவெறியான கிளைமேக்ஸை நியாயப்படுத்த உதவுகிறது.
அதேபோல, வெகுநாட்களுக்குப் பிறகு வனிதா விஜயகுமாரை இதில் பார்க்க முடிகிறது.
மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம், ஜே.சதீஷ்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நாடோடிகள் பரணி, ஆர்ஜே ஷராவோடு நடனக்கலைஞர் சாந்தா தனஞ்ஜெயனும் இதில் நடித்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா, பாவா லட்சுமணன் வருமிடம் சிரிக்க வைத்தாலும், அந்தக் காட்சியின் தன்மையை நீர்த்துப் போவது மறுக்க முடியாத உண்மை.
எட்வின் சகாய் ஒளிப்பதிவில் துஷாரா – அர்ஜுன் தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கவிதையாய் மாறியிருக்கின்றன.
அதேநேரத்தில், நாயகன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்பதைப் பதிவு செய்யும்விதமாக பல காட்சிகளில் ஒளியமைப்பு அமைக்கப்பட்டிருப்பது அருமை.
ரவிக்குமாரின் படத்தொகுப்பானது, மன பாதிப்போடு இருக்கும் ஒரு நாயகனின் உலகத்தைத் திரையில் குழப்பமில்லாமல் காட்ட முடிந்தவரை உதவியிருக்கிறது.
இயக்குனர் உருவாக்க விரும்பிய உலகை நம் கண் முன்னே காட்டியிருக்கிறது சுரேஷ் கல்லாரியின் கலை வடிவமைப்பு.
இவர்களோடு இணைந்து, பின்னணி இசை மூலமாக அவ்வுலகுக்கு உயிர் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். போலவே, இனிமையான பாடல்களையும் படைத்திருக்கிறார்.
எது உலக சினிமா?
‘வெயில்’ போல இப்படம் வசந்தபாலனுக்கு ஒரு ‘கம்பேக் பிலிம்’ என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், ‘அங்காடித்தெரு’ தந்த திருப்தியை இது கொஞ்சம் கூடத் தரவில்லை.
ஏனென்றால், இது போன்ற கதைகளுக்கு பெரிதாக லாஜிக் குறைகள் இல்லாமல் ஒரு திரைக்கதையைப் படைத்தாக வேண்டும்.
துஷாரா பாத்திரம் அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்குவதாகக் காட்டப்பட்டிருப்பது, திரையில் காட்டப்படும் அதன் இயல்புக்கும் பொருளாதாரச் சூழலுக்கும் பொருத்தமானதாக இல்லை.
பரணி பாத்திரம் திரைக்கதையின் பின்பாதியில் இருந்து காணாமல் போயிருப்பதை, கதையோட்டத்தில் இயல்பாக நிகழ்ந்ததாக உணர முடியாதது பெருங்குறை.
போலவே அர்ஜுன் சிதம்பரம், வனிதா பாத்திரங்களின் குரூரம் வெளிப்படும் இடங்கள் செயற்கையாகத் தெரிகின்றன.
மிக முக்கியமாக, சாந்தா தனஞ்ஜெயன் இறந்து கிடப்பதாகக் காட்டப்படும் அறையையோ, அது தொடர்பான விசாரணையையோ திரையில் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். மையக்கதையோடு சம்பந்தப்பட்டது என்பதால், அதற்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்.
இது போல மேலும் பல குறைகள் ரசிகர்களுக்குத் தென்படலாம். அவற்றை மீறி, இப்படத்தை ரசிக்கச் செய்வது அர்ஜுன் தாஸ் – துஷாரா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் தான். அதுவே முன்பாதியை ரசிக்க வைக்கிறது.
பின்பாதியில், அந்த ரசிப்பை தொடரச் செய்கிறது காளி வெங்கட்டின் இருப்பு. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ‘அநீதி’யை ரசிப்பது கடினம் என்றே தோன்றுகிறது.
இதில் காளி வெங்கட்டும் துஷாராவும் கைகூப்பி வேண்டுவது போன்று இரு வேறு காட்சிகள் வருகின்றன.
கதையின் மையக்கருத்தும் அதைச் சார்ந்தே இருக்கிறது. ரத்தமும் சத்தமும் இல்லாமல் அதனைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பதே நம் விருப்பம்.
இந்தப் படத்தைப் பார்க்கும் சில உலக சினிமா ஆர்வலர்கள், உணவு டெலிவரி செய்பவர்களின் கைகளே அத்தொழிலின் அடையாளம் என்றும், அதில் ரத்தக்கறை படிந்திருப்பதாகக் காட்டியிருப்பது அது தொடர்பான நிறுவனங்கள் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் குறியீடு என்றும் பலவாறாக வசந்தபாலனைப் புகழக்கூடும்.
அதற்கேற்ப, ஒரு உலக சினிமாவைப் படைக்கும் விருப்பத்தோடே ‘அநீதி’யைக் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.
இனிமேலாவது அது போன்ற போலியான வார்த்தைகளுக்குச் செவி சாய்க்காமல், உள்ளூர் பிரச்சனையொன்றை மக்களின் மனதைத் தொடும்படி ‘அங்காடித் தெரு’போன்ற இன்னொரு படைப்பை இயக்குனர் வசந்தபாலன் தர வேண்டும்.
அதுவரை அவரது செயல்பாடு சாதாரண ரசிகருக்கு ‘அநீதி’யாகவே தென்படும்!
- உதய் பாடகலிங்கம்