சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி!

இன்றைய சென்னைவாசிகளுக்கு பூந்தமல்லி சாலையிலுள்ள புனித ஜார்ஜ் பள்ளி நல்ல பரிச்சயமுள்ள இடம். காரணம், சில வருடங்கள் இங்கு புத்தகக் காட்சி நடத்தப்பட்டிருக்கிறது என்பதே!

ஆனால், மெட்ராஸில் முறையாக தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி இது என்பது பலர் அறியாதது! தவிர, இதுவே ஆசியாவில் பழமையான மேற்கத்திய பாணிப் பள்ளியும் கூட.

1715-ம் வருடம் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கடந்த 2015ல் தனது 300வது வருட கொண்டாட்டத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்துள்ளது.

அன்றைய மெட்ராஸில் முதல் பள்ளி, வெள்ளையர் நகர் என்றழைக்கப்பட்ட வொயிட் டவுனில் எபிரேம் என்கிற பிரஞ்சுப் பாதிரியாரால் நடத்தப்பட்டது. அவர் தனது வீட்டிலிருந்தே இந்தப் பள்ளியை நடத்திவந்தார்.

இதில், மயிலாப்பூரில் இருந்து வணிகம் நிமித்தமாக கோட்டையில் குடியேறிய போர்த்துக்கீசியர்களின் குழந்தைகளும், ஐரோப்பிய – ஆசிய கலப்பினர் மற்றும் ஆங்கிலேயர்களின் குழந்தைகளும் படித்தனர்.

ஆனால், கிழக்கிந்தியக் கம்பெனி மெட்ராஸை நிர்மாணித்து முப்பத்தியெட்டு வருடங்களுக்குப் பிறகே கல்வி பற்றி சிந்தித்தது.

புனித மேரி தேவாலயம்

அதாவது, 1678-ல் ரால்ஃப் ஆர்டு என்கிற பள்ளி ஆசிரியருக்குக் கல்வி போதித்ததற்காக வருடத்துக்கு ஐம்பது பவுண்ட் சம்பளம் கொடுத்ததாகக் கம்பெனியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த ரால்ஃப் எந்த இடத்தில் பள்ளிக்கூடத்தை நடத்தினார், என்னவிதமான கல்விமுறையை பின்பற்றினார் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.

பின்னர், 1687ம் வருடம் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் நகராட்சி மன்றம் அமைப்பது தொடர்பாக மெட்ராஸ் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு வரைவுத் திட்டத்தை வழங்கினர்.

அதில், குடிமக்களிடம் இருந்து வரி வசூலித்து ஒரு பள்ளிக் கூடமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலவச பாட சாலைகளோ அமைப்பதற்குக் கட்டடம் கட்டலாம் என்றும்,

ஆங்கில வழிக்கல்வியை உள்ளூரைச் சேர்ந்த தெலுங்கு, முஸ்லிம் மக்களின் குழந்தைகளுக்கும் மற்ற இந்தியக் குழந்தைகளுக்கும் வழங்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிறகு, 1691ம் வருடம் கவர்னர் யேல், ‘பள்ளிக்கூடம் கட்ட நகராட்சி மன்றம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதற்கென ஒதுக்கிய தொகையை அரசிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்’ என கறாராகச் சொன்னார்.

கம்பெனியின் இயக்குநர்களும் பள்ளிக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது பற்றி கடிதம் மூலம் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னைக்கு, 1715-ம் வருடம் அக்டோபர் மாதம் 28ம் தேதி நடந்த பொதுக் கூட்டமொன்றில் முடிவு காணப்பட்டது.

அந்த நொடிப் பொழுதே ஐரோப்பிய, இந்திய குழந்தைகளுக்கென ஒரு அறக்கட்டளைப் பள்ளியும் உருவானது.

இந்தப் பள்ளியில் கல்வியுடன் உணவும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இப்படியாக, கோட்டையினுள் ‘செயின்ட் மேரிஸ் அறக்கட்டளைப் பள்ளி’ மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே தொடங்கப்பட்டது.

இதை கோட்டையின் பாதிரியாரான ரெவரண்ட் வில்லியம் ஸ்டீவன்சன் ஆரம்பித்தார். முப்பது குழந்தைகளுடன் கோட்டையின் மேற்குப் பகுதியிலிருந்து பள்ளி செயல்பட்டது.

“இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், வரவு – செலவு கணக்குகள் பராமரிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு படிக்கவும், வீட்டின் அன்றாடப் பணிகள் பற்றியும் சொல்லித் தரப்பட்டது.

மொத்தத்தில், வெறும் ஏட்டுக் சுரைக்காயாக இல்லாமல் நடைமுறை சார்ந்த பாடத்திட்டமாக அமைந்திருந்தது…” என ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் குறிப்பிடுகிறார் மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பி.ஜே.தாமஸ்.

1746-ல் பிரஞ்சுப் படையின் கட்டுப்பாட்டில் மெட்ராஸ் இருந்தபோது செயின்ட் மேரிஸ் அறக்கட்டளைப் பள்ளி கோட்டையிலிருந்து வெளியேறியது. ஆங்கிலேயர் வசம் மெட்ராஸ் வந்த பிறகே மீண்டும் பள்ளி செயல்பட்டது.

இந்நிலையில், மெட்ராஸின் தட்பவெப்பநிலை காரணமாகவும். அடுத்தடுத்து பிரிட்டிஷ் படைகள் மேற்கொண்ட போர்களாலும் வெள்ளையர் நகரில் நிறையபேர் மாண்டனர். இதனால், அவர்களின் குழந்தைகள் அனாதைகளாயினர்.

இந்தக் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கம்பெனியிடம் வந்து சேர்ந்தது. இப்படியாக 1786-ல் முதன்முதலாக ராணுவ பெண்கள் அனாதை இல்லம் தோற்றுவிக்கப்பட்டது. இதை ஜெர்மன் மதபோதகரான ஜெரிக் கண்காணித்து வந்தார்.

இந்த இல்லத்திற்காக கர்நாடக நவாப் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கியிருந்த கட்டடத்தை நன்கொடையாகக் கொடுத்து உதவினார்.

அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ராணுவ ஆண்கள் அனாதை இல்லத்தை புகழ்பெற்ற டாக்டரான ஆண்ட்டு பெல் உருவாக்கினார். இவர்தான் மாணவர் தலைமையிலான கல்விமுறையை உருவாக்கியவர்.

அதாவது, நன்கு கற்றுத் தேர்ந்த சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். இதனால், ஆண்ட்ரூ பெல் மெட்ராஸ் கல்வி முறையை தோற்றுவித்தவர் என்றும் அறியப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து இந்த இரண்டு இல்லங்களுடன் மற்ற சில அனாதை இல்லங்களும் சேர, ‘பொது அனாதை இல்லம்’ (Civil Orphan Asylum) என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.

1867ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி ஆண்கள் இல்லத்தில் 75 சிறுவர்களும், பெண்கள் இல்லத்தில் 65 சிறுமிகளும் இருந்து வந்தனர்.

இந்நேரம், இந்த பொது அனாதை இல்லம் செயின்ட் மேரிஸ் அறக்கட்டளை பள்ளியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.

இந்த இணைப்பு 1871 – 72ம் வருடம் அன்றைய எழும்பூர் கோட்டையில் நடந்தது.

18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட எழும்பூர் கோட்டை ஒரு புற அரணாக செயல்பட்டது. இப்போது இந்த இடத்தில்தான் எழும்பூர் ரயில் நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, பள்ளியும் இல்லமும் எழும்பூரிலிருந்து இயங்கி வந்தன. இல்லத்தில் வசித்த அனாதைக் குழந்தைகளும், ராணுவ வீரர்களின் குழந்தைகளும் பள்ளியில் படித்தனர்.

1903-ம் வருடம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக இடம் தேவைப்பட்டபோது இந்த இடத்தைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இதனால், இப்போதைய கீழ்ப்பாக்கம் ஷெனாய் நகரில் 21 ஏக்கர் நிலம் ரூ.29,750 மதிப்பில் வாங்கப்பட்டது.

இதனுள் கர்னல் கான்வே என்பவரின் தோட்ட இல்லமும், 1884ம் வருடம் கட்டப்பட்ட செயின்ட் மேரி தேவாலயமும் இருந்தன.

இந்தப் பகுதிக்கு பள்ளியும், அனாதை இல்லமும் சென்றது. இந்தத் தோட்ட இல்லத்தை 1816ல் கான்வே வாங்கியதாக, ‘Vestiges of old Madras-vol III’ நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் லவ்.

ராணுவ வீரர்களின் நண்பன் என அழைக்கப்பட்ட கான்வே, 1798-ம் வருடம் குதிரைப் படையில் இணைந்து 1837-ல் காலரா நோயால் குண்டூரில் மடிந்தார். அவரின் சிலை இன்றும் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942-ம் வருடம் இந்தப் பொது அனாதை இல்லம் கோயமுத்தூரில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு மாறப்பட்டது. காரணம், அப்போது இங்கே அமெரிக்கப் படைகள் தங்கியிருந்தன.

பின்னர், 1954 ம் வருடம் பொது அனாதை இல்லம் என்பது புனித ஜார்ஜ் பள்ளி மற்றும் அனாதை இல்லம் எனப் பெயர் மாற்றமானது.

ஆரம்பத்தில் ஆங்கிலோ – இந்தியன் நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்டு, 1960-ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1978 – 79-ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.

அன்றைய செயின்ட் மேரிஸ் அறக்கட்டளைப் பள்ளியும், பொது அனாதை இல்லமும் இன்று புனித ஜார்ஜ் பள்ளி மற்றும் அனாதை இல்லமாக மாறி நூற்றாண்டுகளைக் கடந்து நடைபோட்டு வருகிறது.

– பேராச்சி கண்ணன் எழுதிய ‘தல புராணம்’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

************************

தல புராணம்.

பேராச்சி கண்ணன்

செல்: 9841912829

சூரியன் பதிப்பகம்

No.229, கச்சேரி சாலை,

மைலாப்பூர், சென்னை – 600004

பக்கங்கள் – 455

விலை – ரூ.350/-

You might also like