ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!

நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய் காத்துக் கிடப்பதும் உண்டு.

உலகம் முழுக்க அப்படியொரு புகழைச் சம்பாதித்திருப்பவர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். வழக்கமான கமர்ஷியல் படங்களைத் தாண்டி, திரையில் அவர் கதை சொல்லும் விதம் புதியதொன்றாக இருப்பதே அதற்குக் காரணம். அந்த வகையில், அவர் தற்போது தந்திருக்கும் ‘ஓபன்ஹெய்மர்’ எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

முதல் அணுகுண்டு!

ஒரு விஞ்ஞானி மிகுந்த உற்சாகத்தோடு தனது கண்டுபிடிப்பின் வெற்றியைக் கண்ணார ரசிக்கிறார். மிகச்சில நாட்கள் கழித்து, அதன் விளைவுகள் தெரிய வருகின்றன. அதன் கோரம் அவரது மனதைக் குத்திக் கிழிக்கிறது. அதன்பிறகு, அவர் எப்படிச் சிந்தித்தார்? மீதமுள்ள வாழ்வை எந்த வகையில் கழித்தார்? இவற்றுக்கான பதில்களைத் தருகிறது டாக்டர் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை.

இவர்தான் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டைக் கண்டுபிடித்தவர்.

ஓபன்ஹெய்மர் மீதான அமெரிக்க அரசு அமைப்புகளின் விசாரணையில் இருந்து திரைக்கதைதொடங்குகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? போரில் வெற்றிகளுக்குக் காரணமானவர்களைக் கொண்டாடும் ஒரு நாடு, ஏன் அப்படியொரு நாயகனைக் குற்றவாளியாக நோக்குகிறது? தான் மேற்கொண்ட பணியில் அவர் குற்றம் இழைத்தாரா அல்லது துரோகங்கள் புரிந்தாரா? இந்தக் கேள்விகளைத் தாங்கியவாறு ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை திரையில் விரிகிறது.
அணுவைப் பிளக்கும்போது வெளிப்படும் ஆற்றலைத் தொடர் சங்கிலியாக மாற்றி, பெருமளவிலான வெடிப்பை நிகழ்த்த முடியும் என்பதே ஓபன்ஹெய்மரின் ஆய்வு முடிவு. காகிதங்களில் இருக்கும் அந்த கோட்பாட்டை, உண்மையாக நிகழ்த்த விரும்புகிறது அமெரிக்க அரசு. குவாண்டம் இயற்பியலில் சாதனை படைத்த ஓபன்ஹெய்மரை தலைமைப் பதவியில் அமர்த்தி, உலகின் முதல் அணுகுண்டை உருவாக்க முனைகிறது. பல பில்லியன் டாலர்கள் செலவில் அமையும் அத்திட்டத்தில் பல்வேறு இயற்பியல் நிபுணர்கள் தங்களது பங்களிப்பைத் தருகின்றனர்; அச்செயல்பாட்டின் இடைநிலையிலேயே சிலர் விலகுகின்றனர்; இடையிடையே, தனது தனிப்பட்ட வாழ்வுச் சிக்கல்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் ஓபன்ஹெய்மர்.

அனைத்தையும் மீறி அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக அவர் நடத்தியது எப்படி என்பதைச் சொல்கிறது ‘ஓபன்ஹெய்மர்’. அதோடு நின்றுவிடாமல், அந்த அணுகுண்டு சோதனையின் பின்விளைவுகளால் அந்த விஞ்ஞானியின் மனதில் நிகழ்ந்த போராட்டங்களையும் சொல்கிறது இத்திரைப்படம். ஒரு அரசாங்கம் ஒரு கண்டுபிடிப்பை எப்படி அணுகும் என்பதும் இதில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பான அம்சம்.
முடிவில், எந்தக் காட்சியில் திரைக்கதை தன் ஓட்டத்தைத் தொடங்கியதோ, அதே காட்சியோடு படம் நிறைவடைகிறது. ஐன்ஸ்டீன் – ஓபன்ஹெய்மர் இடையிலான சந்திப்பாக அக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் வசனங்கள், புதிதாக அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கான பால பாடம் என்றால் மிகையல்ல.

நாயகனா, வில்லனா?

அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் எப்படி நாயகனாக விளங்க முடியும்? இந்தக் கேள்விதான், ஓபன்ஹெய்மர் குறித்து அறிவியல் பாடம் படிக்கும்போது பலரது மனதில் எழுந்திருக்கும். அதற்கேற்ப ஒரு குழப்பவாதியாக, முட்டாளாக, அதேநேரத்தில் மாபெரும் அறிவுஜீவியாக ஓபன்ஹெய்மர் பாத்திரத்தைத் திரையில் வடித்துள்ளார் இயக்குனர் நோலன். அதனை உள்வாங்கிச் சிறப்பாக நடித்துள்ளார் ஓபன்ஹெய்மராக வரும் சிலியன் மர்பி. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரையில் நிச்சயம் அவரது பெயர் இடம்பெறும்.

ஓபன்ஹெய்மரின் காதலியாக ப்ளோரன்ஸ் புஹ், மனைவியாக எமிலி ப்ளண்ட் நடித்துள்ளனர். இருவருக்குமே காட்சிகள் குறைவென்றபோதும், நிறைவான நடிப்பைத் தந்திருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து மேட் டாமன், ராபர்ட் டௌனி ஜூனியர், ஜோஷ் ஹார்னெட், கேஸி அஃப்ளெக், ராமி மாலிக், டைலன் ஆர்னால்டு உட்படப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ஹொய்டே வான் ஹொய்டெமா ஐமேக்ஸ் நுட்பத்தில் படம்பிடித்துள்ளார். அந்த நுட்பத்தின் சாதக பாதக அம்சங்களைத் தாண்டி, டிஜிட்டல் படமாக்கத்திற்கு முந்தைய காலகட்டத்தை நினைவூட்டுகிறது காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.

படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் ‘நான்லீனியர்’ திரைக்கதை உருவாக்கும் குழப்பங்களை மீறி, திரையில் சீராகக் கதை சொல்ல உதவியிருக்கிறார். விசாரணைக் குழுவின் முன்பாக, ஓபன்ஹெய்மர் அம்மணமாக இருப்பது போன்றும் உணருமிடம் சட்டென்று திரையில் வந்து போகிறது; அது அலாதியான அனுபவத்தைத் தருகிறது. இவர்கள் இருவரோடு இணைந்து, நோலன் உருவாக்க நினைத்த உலகத்திற்கு உயிர் தந்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ரூத் டி ஜோங். புதிய நகர உருவாக்கம், அணுகுண்டு உதிரிபாகங்கள், சோதனை நடத்தப்படும் இடம் என்று எங்கும் ‘மினிமலிசம்’ நிரம்பியிருந்தாலும், அந்த உலகம் நம்மை ஆச்சர்யமூட்டுகிறது.

‘ஓபன்ஹெய்மர்’ படத்தின் மாபெரும் பலம், இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சன் தந்திருக்கும் பின்னணி இசை. கண் மூடி ரசித்தால், நிச்சயம் அது வேறொரு உலகத்தை வரைந்தும் காட்டும்.

இந்தக் கதையில் ஓபன்ஹெய்மர் நாயகனா, வில்லனா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலே சொல்லவில்லை. மாறாக, அவரை ஒரு மாறுபட்ட மனிதராகச் சித்தரித்திருக்கிறார். நோலன் படங்களின் அடிநாதமே அதுதான் என்றபோதும், இக்கதையில் சுவாரஸ்யத்திற்கான அம்சங்கள் குறைவாக இருப்பது பெருங்குறையாகத் தென்படுகிறது.

எல்லோருக்கும் பிடிக்குமா?

கை பேர்டு, மார்ட்டின் ஷெர்வின் எழுதிய ‘அமெரிக்கன் ப்ரோமெதியஸ்’ நூலின் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். வாழ்க்கைக் கதையிலுள்ள சம்பவங்களை முன் பின்னாகக் கலைத்துப் போட்டு திரையில் அவர் ஆடியிருக்கும் ஆட்டம் அற்புதம். ஆனாலும், ஒவ்வொரு பிரேமிலும் சுவாரஸ்யம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் தூக்கத்தையே பரிசாகத் தரும். அதனால், எல்லோருக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.
ஆனால், நோலன் படங்களில் இருக்கும் தனித்துவம் இதிலும் உள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அந்த வகையில் அமைந்திருக்கிறது.

அதனைப் பார்த்தபிறகு, மீண்டும் ஒருமுறை ஓபன்ஹெய்மர் பாத்திரம் திரையில் என்னவெல்லாம் செய்கிறது என்று பார்க்கத் தூண்டும். போலவே, அந்தவொரு காட்சிதான் ஒட்டுமொத்த திரைக்கதையின் போக்கைத் தீர்மானிப்பதாகவும் உள்ளது.

விஞ்ஞானிகளின் பிற்கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைத் தாண்டி, அரசு எந்திரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நபர்களால் சாதனையாளர்கள் எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்யப்படுவார்கள் என்ற விஷயத்தைப் பேசுகிறது ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படம். மிக எளிமையாக வாழ்கிற மனிதரைக் குற்றவாளியாக மாற்றுவதற்கான சந்தர்ப்பங்களைக் குயுக்தியுடன் தேடுபவர்கள் அவர்கள் உடனே பயணிப்பார்கள் என்பதும் இத்திரைக்கதையில் காட்டப்படுகிறது.

வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்களைப் பற்றி அறிய நேரும்போது, அவர்களும் இப்படித்தான் பல இன்னல்களை எதிர்கொண்டு தங்களுக்குள்ளேயே கரைந்து காணாமல் போயிருப்பார்களோ என்ற சிந்தனையையும் தூண்டுகிறது இப்படம். அந்த வகையில், வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது ‘ஓபன்ஹெய்மர்’.

மூன்று மணி நேரம் ஓடுகிறது என்பதால், ’ஓபன்ஹெய்மர்’ நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும். அதனைக் கடக்கத் தயார் என்றால், கிறிஸ்டோபர் நோலன் ரசிகராக, ரசிகையாக ஒருமுறை இப்படத்தைப் பார்க்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like