90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா.
1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் – தம்பி மனைவியை அண்ணன் அடையத் துடிப்பது என்ற கொஞ்சம் விவகாரமான கதையை துணிச்சலுடன் கையில் எடுத்து அதை ரசிக்கும்படி திரையில் காட்சிப்படுத்தியிருப்பார்.
இப்படம் அஜித் – சிம்ரன் – எஸ்.ஜே.சூர்யா மூவருக்குமே ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரே ஒரு பாடலில் ஜோதிகாவை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கவும் செய்திருந்தார்.
அடுத்ததாக தான் இயக்கிய ‘குஷி’ படத்தில் அதே ஜோதிகாவை கதாநாயகி ஆக்கினார்.
தமிழில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் தெலுங்கு – இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்போதும் தமிழின் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ‘வாலி’ மற்றும் ‘குஷி’க்கு இடமுண்டு.
இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிப்பில் கால்பதிக்க எண்ணிய எஸ்.ஜே.சூர்யா ’நியூ’ என்ற ஒரு படத்தை இயக்கி, தானே ஹீரோவாக நடிக்கவும் செய்தார்.
சிம்ரன் நாயகியாக நடித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
‘காலையில் தினமும் கண்விழித்தால்’ பாடல் இன்றுவரை சோஷியல் மீடியாவில் ரீல்ஸ்களில் இடம்பெற்று வருகிறது.
டபுள் மீனிங் வசனங்கள், தூக்கலான கவர்ச்சி என அன்றைய காலகட்டத்தில் இப்படம் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’ என்ற படத்தையும் இயக்கி நடித்தார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யா ஹீரோவுக்கான வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின.
‘கள்வனின் காதலி’, ‘திருமகன்’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என பல படங்களில் நடித்தாலும் இவை பெரிய வெற்றிகளைப் பெறவில்லை.
ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ‘கொமரம் புலி’ என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் அப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கினார்.
2012ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கி நடித்த ‘இசை’ படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘இறைவி’ படம் எஸ்.ஜே.சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு பாய்ச்சல் எனலாம்.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்து அதன்பிறகு சினிமாவில் ஜொலிக்க முடியாத ஒரு நடுத்தர வயது குடிகார மனிதனாக நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை தொட்டிருப்பார்.
இப்படமே எஸ்.ஜே.சூர்யாவின் திரைப் பயணத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வைத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தில் ஊர் துன்பப்படுவதை ரசிக்கும் சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.
எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்தால் மட்டுமே அப்படம் இன்றுவரை நினைவு கூரப்படுகிறது என்பதே உண்மை.
தொடர்ந்து அட்லீயின் மெர்சலில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும் ஸ்டைலிஷ் வில்லன், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் வஞ்சகம் நிறைஞ்ச கதாபாத்திரம் என தொடர்ந்து நெகட்டிவ் ரோல்களில் நடித்தவர், நெல்சன் வெங்கடேசனின் ‘மான்ஸ்டர்’ படத்தில் சடாரென்று யு-டர்ன் அடித்து நெஞ்சத்தை வருடுவது போன்ற ஒரு மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து ஈர்த்தார்.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் தொடக்கம் முதல் மாணவர்களை கதிகலங்க வைக்கும் டெரர் கல்லூரி முதல்வராக வந்தாலும், கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயனிடம் அவர் பேசும் ஒற்றை வசனம் காண்போரை உருக வைத்துவிடும்.
எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பாய்ச்சல் சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் மூலம் நிகழ்ந்தது.
படம் முழுக்க ஒய்.ஜி.மகேந்திரனிடம் அவர் பேசும் ‘தலைவரே.. தலைவரே’ என்ற ட்ரேட்மார்க் வசனம் பெரும் வைரலானது.
எஸ்.ஜே.சூர்யாவின் மூலம் தமிழ் சினிமாவின் டாப் வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றாக ‘மாநாடு’ தனுஷ்கோடி இடம்பிடித்தது.
’கிழக்குச் சீமையிலே’, ‘நெத்தியடி’ போன்ற படங்களில் துண்டுக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புப் பயணம் இன்று பான் இந்தியா அளவில் பரந்து விரிந்துள்ளது.
ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் வில்லன், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’-வில் வில்லன், ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’-ல் பிரதான கதாபாத்திரம், ‘மார்க் ஆண்டனி’யில் வில்லன் என தொடர்ந்து தனது இலக்கைத் தாண்டி ஓடிக் கொண்டே இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
நன்றி: இந்து தமிழ் திசை.