16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர்.
அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.
சினிமா என்றால் செட்தான் என இருந்த விதியை உடைத்து கிராமத்தின் வரப்புகளுக்கு கூட்டி சென்றவர்.
பாரதிராஜாவின் கண்கள் ஷாட்:
சப்பாணியை ஹீரோவாக்கிய பிறகுதான் கிராமங்களின் கண் சினிமா மீது நிலைக்குத்தி நின்றது.
அவரது ஒவ்வொரு படமும் மேல்தட்டு மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்துபோன கிராமத்து மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் காட்சிப்படுத்தின.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழிப்போம் என்றார் பாரதியார்.
ஒரு கிராமத்தானுக்கு கலை செல்லவில்லை என்றால் கலையை அழித்திடுவோம் என்ற இறுமாப்போடு சினிமாவுக்குள் வந்தவர் பாரதிராஜா.
அவரது படமாகட்டும், சீரியல் ஆகட்டும் அத்தனையும் அதைத்தான் உணர்த்தின. பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.
அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார்.
இதற்கிடையே கடைசியாக வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜியில் பறவை கூட்டில் வாழும் மான்கள் கதையை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜா, ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி என பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் அனைவரும் வெறும் அழகை மட்டும் கொண்டிருக்காமல் தங்களது திறமையின் துணையோடு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளாக வலம் வந்தனர்.
கோலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் அவர்கள் தங்களது ஆளுமைகளை நிரூபித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவுக்கு சின்ன வயதிலிருந்தே நாடகங்கள் மீதும் சினிமா மீதும் தீராத ஆசை. இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் அப்போது அமையவில்லை.
சூழல் இப்படி இருக்க எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பாரதிராஜாவுக்கு மலேரியா நோய் தடுப்பு குழுவின் அரசாங்க வேலை கிடைக்கிறது.
ஆண்டிபட்டியில் போஸ்டிங் கிடைத்த பாரதிராஜா சில காலம் கழித்து மிலிட்டரிக்கு ஆள் எடுப்பதாக விளம்பரத்தை பார்த்து அதற்கான தேர்வில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுவிடுகிறார்.
தேர்வானவுடன் கோவாவுக்கு சென்ற பாரதிராஜாவுக்கோ வேலை சூழல் சுத்தமாக பிடிபடவில்லை. வேலையை விட்டு விலகலாம் என்று முடிவெடுத்தாலும் அதுவும் நிறைவேறவில்லை.
ஒருகட்டத்தில் வெறுத்துப்போன பாரதிராஜா தனது வீட்டுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார், ‘தெரிந்தோ தெரியாமலோ இந்த வேலையில் சேர்ந்துவிட்டேன்.
ஒருவாரத்தில் என்னை அழைத்து செல்லவில்லை என்றால் தூக்கு போட்டு இறந்து போவேன்’.
கடிதத்தை படித்த குடும்பத்தினர் பதறியடித்து யார் யாரையோ பிடித்து பாரதிராஜாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
இதனையடுத்து அதே மலேரியா தடுப்பு குழுவில் பணியில் இணைந்தார். இந்த முறை பண்ணைபுரத்தில். அங்குதான் இளையராஜாவுடனான அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அப்போது பாவலர் வரதராஜன், இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் பாவலர் க்ரூப்ஸ் பெயரில் மேடையில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
பாரதிராஜாவுடனான பழக்கத்துக்கு பிறகு அவருக்கு வசனம் எழுதும் திறமை இருந்தது தெரியவர; அவரையே பல நாடகங்களை எழுதும்படி பணித்தனர்.
அதனையடுத்து பாரதிராஜாவும் பல நாடகங்கள் போட அதில் இளையராஜாவும் நடித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் இது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த பாரதிராஜா, சென்னை போவதாக முடிவெடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
சினிமா ஆசையை வீட்டில் சொல்ல அதற்கு முதலில் வீட்டில் எழுந்தது எதிர்ப்பு. யாராவது மாதம் 75 ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு சினிமாவுக்கு போவார்களா என வீட்டில் கேட்க; பாரதிராஜாவோ சினிமா என்பதில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். இருந்தாலும் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.
இதனையடுத்து சீப்பு, கண்ணாடி போன்றவைகளை ஜன்னல் வழியாக விட்டெறிந்துவிட்டு அமைதியாக இருப்பாராம்.
கதவை தாழிட்டுக் கொண்டு மனோகரா வசனத்தை கத்தி பேசிக் கொண்டிருந்தாராம். ஏன் இப்படியெல்லாம் பண்ற என கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் அதற்கும் அமைதிதானாம்.
இதனையடுத்து சினிமாவை நினைத்தே பைத்தியமாகிட்டான். அங்க போனால்தான் குணமாவான் போல என எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதையெல்லாம் கேட்ட பாரதிராஜாவின் தாய், 300 ரூபாய் கந்துவட்டிக்கு பணம் வாங்கி பாரதிராஜாவை ஒரு அடைமழையில் அனுப்பி வைத்திருக்கிறார்.
அதை எடுத்து சென்னை வந்த பாரதிராஜா பல கஷ்டங்களை அனுபவித்து 16 வயதினிலே படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்த்தினார் என்பது அனைவரும் அறிந்தது.
– நன்றி: முகநூல் பதிவு