மக்கள் திலகத்தை தமிழில் பாராட்டிப் பேசிய என்.டி.ராமராவ்!

சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு.

2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில் மாபெரும் பாராட்டு விழா நடத்த தடபுடல் ஏற்பாடுகளில் ஈடுபட்டார் க.ராஜாராம்.
சேலத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுவர்களில் ஒருவரான ராஜாராம்–அமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் போன்ற உச்ச பதவிகளிலும் இருந்தவர்.

இந்த விழாவிற்கு, தென்னிந்திய அரசியல் ஆளுமைகளும், தமிழ் சினிமாவில் இமயம் தொட்டவர்களும் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேச அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது தென்னிந்தியாவில் முதலமைச்சர்களாக இருந்த ஆந்திராவின் என்.டி.ராமராவ் (தெலுங்கு தேசம்) கர்நாடகாவின் ராம கிருஷ்ண ஹெக்டே உள்ளிட்டோர் அரசியல் ஆளுமை பட்டியலில் அடங்குவர்.

எம்.ஜி.ஆரின் நீண்ட கால நண்பரான சிவாஜி கணேசன் விழாவின் பிரதான சினிமா ஆளுமை.

அப்போது தமிழ் சினிமாவை தங்கள் கரங்களில் வைத்திருந்த பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரும் ஆஜர்.

தமிழ்நாட்டில் இருந்து வடக்கே சென்று இந்தி சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்த ஹேமமாலினியும் மேடையை அலங்கரித்த நட்சத்திரங்களில் ஒருவர்.
விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் எம்.ஜி.ஆரைப் பாராட்டினார்கள் என்று சொல்வதை விட அவருடன் தங்களுக்கு இருந்த பந்தத்தைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதே உண்மை.

என்.டி.ராமராவ், தனது உரையைத் தெலுங்கில் தான் தொடங்கினார். மொழிபெயர்ப்பு சரியாக இல்லாததால் தமிழிலேயே அவர் பேசிய போது கூட்டம் ஆர்ப்பரித்தது.

எம்.ஜி.ஆருக்காக அரசியல் மற்றும் சினிமா வி.ஐ.பி.க்கள் ஒருசேர பங்கேற்ற இந்த விழா, சேலம் நகரைத் தவிர வேறு ஊரிலும் நடந்ததாக நினைவில்லை. சேலம் நகரம் அன்று கண்ட கூட்டத்தை வேறு எந்த ஒரு நிகழ்விலும் கண்டிருக்காது.

இந்தப் பெருமை, விழாவுக்கு ஏற்பாடு செய்த க.ராஜாராம் அவர்களையே சேரும்.
நிகழ்ச்சி முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி சொல்ல சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு பத்திரிகையாளர்களை அழைந்திருந்தார் ராஜாராம்.

“சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்த பெருமை உங்களையே சாரும்” என்று பத்திரிகையாளர்கள் ஒருமித்த குரலில் சொன்னபோது –
ராஜாராம் கண்ணில் இருந்து நன்றியும், சொட்டு கண்ணீரும் எட்டி பார்த்தது.

– பி.எம்.எம்.

You might also like