திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக வீடு மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறியதாவது, சுமார் 50 ஆண்டு காலமாக இப்பகுதியில் மலை அடிவாரம் பகுதியில் குடியிருந்து வருகின்றோம் குடியிருக்க வீடு இல்லாமல் தார்ப்பாய் மூலம் நாங்களாகவே வீடு அமைத்துக் கொண்டு மழையிலும் வெயிலும் காய்ந்து வருகின்றோம்.
அதிகாரிகள் வருகிறார்கள் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.
ஆனால் தற்பொழுது வரை வீடு மற்றும் மின் வசதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
அருகில் உள்ள அமராவதி அணைக்கு சென்று குடிநீர் வசதியை பூர்த்தி செய்து வருகின்றோம்.
இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
குறிப்பாக யானைகள் தினமும் இரவு நேரத்தில் வருவதால் இரவு முழுவதும் ஒரு சில நாட்களில் தூங்காமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது.
ஆகையால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து இப்பகுதியில் கள ஆய்வு செய்து 50 ஆண்டு காலமாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு இதே பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் வீடு மற்றும் மின் வசதி அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளை கேட்டு கொண்டுள்ளனர்.
இவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
– தேஜேஷ்