அரசியலுக்கு வந்த நடிகர்கள் சந்தித்த சவால்கள்!

அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து கோட்டையை பிடித்தபின், தமிழகத்தில் உள்ள ஹீரோக்கள் பலருக்கும் அரசியல் ருசி மனதுக்குள் ஊறியது.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி தொடங்கி ஒரு டஜனுக்கும் குறையாத கதாநாயகர்கள் கட்சி ஆரம்பித்தனர்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இருந்தபோது எஸ்.எஸ்.ஆர். சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பதவிகள் அடைந்தார்.

காங்கிரசில் இருந்த போதும் சரி, தனிக்கடை விரித்த போதும் சரி, சிவாஜிக்கு அந்த ப்ராப்தம் வாய்க்கவில்லை.

தனிக்கட்சி தொடங்கி விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், கருணாஸ் உள்ளிட்டோர் இன்றைக்கு செயல்பாட்டிலாவது இருக்க, மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் ஆகியோர் அரசியல் கடலில் கரை சேராமலேயே போய் விட்டார்கள்.

ஏன்?

திரை உலகில் அவர்கள் அடைந்த உச்சங்களையும், கட்சி ஆரம்பித்து காணாமல் போனதையும் விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு:

பாக்யராஜ்

தனது குருநாதர் பாரதிராஜாவால் அடைய இயலாத உயரங்களை எட்டியவர் பாக்யராஜ். டைரக்ஷனில் புதிய சகாப்தம் உருவாக்கிய பாரதிராஜாவால், நடிகராக சோபிக்க முடியவில்லை. அவர், கதையின் நாயகனாக தோன்றிய முதல் படமே படுதோல்வி.

பாக்யராஜுக்கு முதல படமே வெள்ளிவிழா. தொடர்ச்சியாக பல வெள்ளி விழாக்களை கண்டவர்.

ஆனால், அரசியலில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட்டு, தும்பை விட்டு வாலை பிடித்த கதையானது, அவரது அரசியல் பிரவேசம்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர், பாக்யராஜை அதிமுகவுக்கு அழைத்தார்.

மறுத்து விட்டார் பாக்யராஜ். அதுவே அவர் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. எம்.ஜி.ஆர். பேச்சை கேட்டிருக்க வேண்டும்.

அவர் மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, அரசியல் கடலில் நீந்தி பழக்கமில்லாததால் அவர் மூழ்க நேரிட்டது. தேர்தலில் அவரது கட்சி தோற்றுப்போனது. சினிமாவிலும் இழப்புகளை சந்தித்தார்.

கட்சியை கலைத்து விட்டு திமுகவுக்கு போனார். கொஞ்ச காலம் அங்கு தங்கி இருந்துவிட்டு, அதிமுகவுக்கு வந்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும், அவரது மறைவுக்கு பிறகும் அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்த பாக்யராஜ், அ.தி.மு.க. ஓபிஎஸ் அணியில் இப்போது ஐக்கியமாகியுள்ளார்.

டி.ராஜேந்தர்

அஷ்டாவதானி என்ற வார்த்தையை நம்மில் பலர் கேள்விப் பட்டுள்ளோம். பொருளும் கூட அறிவோம். அந்த வார்த்தைக்கு நம் கண் முன், உருவகமாக நின்றவர் டி.ராஜேந்தர். சினிமாவில் எல்லா வேலைகளும் அவருக்கு தெரியும்.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர் டி.ராஜேந்தர்.

நட்பு வட்டாரத்தில் டி.ஆர். என அழைக்கப்படும் டி.ராஜேந்தர் படங்களின் சிறப்பு – பிரமாண்ட அரங்குகளும், மனதை மயக்கும் பாடல்களும், அடுக்கு மொழி வசனமும் தான்.

சினிமாவில் அவரது வியாபார சந்தை, விரிந்து பரந்த சமயத்திலேயே அரசியலுக்குள் நுழைந்தவர் டி.ஆர். கருணாநிதி காலத்தில் தி.மு.க.வின் ஸ்டார் பேச்சாளராக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் எனும் கட்சியை தோற்றுவித்தார். தமிழகம் முழுக்க அரசியல் கட்சி தலைவராக சுற்றி வந்தார்.

சினிமாவைபோல், அரசியலில் அவரது அடுக்கு மொழி எடுபடவில்லை. கட்சியை கலைத்து விட்டு மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

1996 ஆம் ஆண்டு பூங்காநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக நின்று வாகை சூடினார். தொகுதிக்குள் அவருக்கு தனிசெல்வாக்கு உருவானது. கட்சி மேலிடம் இதனை ரசிக்கவில்லை.

’கட்சி உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை’ என சொத்தை காரணம் சொல்லி திமுக. தலைமை டி.ஆரை வெளியேற்றியது.

உடனடியாக லட்சிய திமுக என்ற கட்சியை 2004 ஆம் ஆண்டு தொடங்கினார். அடுத்த ஆண்டே விஜயகாந்த் புதிய கட்சியை ஆரம்பித்து, சுழலத் தொடங்கினார். அவரது வேகத்துக்கும், அவருக்கு இருந்த தொண்டர்கள் பலத்துக்கும் டி.ஆர். ஈடு கொடுக்க முடியவில்லை.

சினிமாவிலும் அவரது ஆட்டம் ஓய்ந்திருந்தது. பொதுப் பிரச்சினையில் கட்சி பெயரில் ஓர் அறிக்கை வெளியிட்டு, தனது இருப்பைப் பதிவு செய்து வந்தவர், வெளிநாட்டில் ஆபரேஷன் செய்து வந்த பின் வீட்டிலேயே முடங்கிப்போனார். கட்சியும் முடங்கிக் கிடக்கிறது.

கார்த்திக்

பாரதிராஜா எனும் மோதிரக் கையால் குட்டுப்பட்ட கார்த்திக்குக்கு அறிமுகமான முதல் படமே வெள்ளிவிழா படமாக அமைந்தது.

மணிரத்னம், ஃபாசில், ஆர்.வி.உதயகுமார் போன்றோரும் செதுக்கியதால், தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தை எட்டினார். கால்ஷீட் சொதப்பலால், கெட்டபெயரும் ஈட்டினார்.

பட வாய்ப்புகள் குறைந்தபோது அரசியல் பக்கம் ஒதுங்கினார். அரசியலை கார்த்திக், பொழுதுபோக்கு விளையாட்டாகவே நினைத்தார் என்பது அவரது அடுத்தடுத்த நிகழ்வுகள் உணர்த்தியது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்த அவருக்கு, மாநில செயலாளர் பதவியை அளித்தார்கள்.

அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோற்றதால், அங்கிருந்து விலகினார்.

2009 அம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்து விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

வெறும் 15 ஆயிரம் ஓட்டுகள் மட்டும் வாங்கினார்.

கட்சிப் பெயர் ராசி இல்லை என நினைத்து, மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இன்னும் அந்தக் கட்சியின் பெயர் கார்த்திக் வசமே உள்ளது. ஆனால் செயல்பாடுகள் தான் இல்லை.

பாக்யராஜ், டி.ஆர். வரிசையில் இவரும் அரசியலில் ’ராசி இல்லாத ராஜா’ ஆகி விட்டார் என்பதே நிதர்சனம்.

– பி.எம்.எம்.

You might also like