கனவுடன் ஒரு தலைவன்!

டாக்டர் க. பழனித்துரை

நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

காரணம் ஒரு மிகப் பெரிய தொழில்சாலை அங்கு உருவாக்கப்படுவது போல் ஒரு செயல்பாட்டுத் தோற்றம். சுமார் 15 ஏக்கர் பகுதியில் ஓர் ஏரி உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் அது ஏரியாகத்தான் இருந்துள்ளது. கிராமத்து மக்களின் பொறுப்பற்ற செயல்பாட்டில் அந்த ஏரி காணாமல் போனது. தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ஏரியாக்கப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டிற்கு முதலில் ஒரு துணிவு வேண்டும். அடுத்து நீர் பற்றிய பார்வை வேண்டும். இந்த இரண்டும் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவருக்கு இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஏரியிலிருந்து 80 டிராக்டர்கள் மண்ணை அள்ளி வெளியேற்றுகின்றன.

ஏரிக்குள் மண் அள்ளும் இயந்திரம் மண் அள்ளி டிராக்டர்களில் கொட்டுகின்றன.

அவற்றைக் கண்காணிக்க கிராமத்தில் ஒரு குழு குடிசை போட்டு ஏரிக்குள் பகலும் இரவும் கண்காணிக்கின்றது.

மண் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. மண் எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி வேண்டும். தன் சொந்த வீடு அதுவும் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தந்த வீடு கட்ட எடுத்த மண்ணிற்கு உத்தரவு வாங்கவில்லை என்று கூறி அந்த பயனாளியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அந்த மண் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல் அதே ஊரில் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஊரில்தான் 16 நாட்களுக்கு இந்த ஏரியிலிருந்து எடுக்கும் மண்ணை அந்த ஊர் மக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். 227 பயனாளிகளுக்கு அனுமதியளித்து அந்த மண் வெளியேற்றப்படுகிறது.

பொதுவாக மண் எடுத்தால், அந்த இடத்திற்கு மண் மாபியா அரசியல் பின்னணியுடன் வந்துவிடுவார்கள்.

இவர்களையும் மீறி ஒரு பஞ்சாயத்து, மாவட்ட ஆட்சியரின் நம்பிக்கையைப் பெற்று ஒரு பிடி மண் கூட எந்த வணிகத்திற்கும் செல்லாது என்ற உறுதி மொழி தந்து உத்தரவைப் பெற்று செயல்படுவது பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

இந்தச் செயல்பாடுதான் அனைவரையும் அந்த ஊரை திரும்பிப்பார்க்க வைக்கிறது.

அரசியல் பின்புலம் உள்ளோர்க்கு இதில் ஒரு வணிக வாய்ப்பு இருப்பது புரிந்த காரணத்தால் ஒரு ஏமாற்றத்துடன் குறை கண்டுபிடிக்க அலைவதையும் பார்க்க முடிகிறது.

தேர் வடம்பிடித்து வருவது போல் டிராக்டர்கள் அங்கு வந்துபோவதை பார்க்கும்போது மிகப்பெரிய கனவுத் திட்டம் நீரை வைத்து ஒன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை பறைசாற்றுகின்றது.

அந்த ஊர் கடற்கரையை ஒட்டி இருப்பதால் பேரிடரில் தொடர்ந்து சிக்குண்டு வருவதிலிருந்து இந்த ஊரை காப்பது எப்படி என்ற சிந்தனை தான் தலைவரின் பார்வையாக இருக்கிறது.

இவர் செய்கின்ற பணி என்பது ஒரு கதையின் தொடர். இன்றைய பஞ்சாயத்துத் தலைவரின் பாட்டனார் சாம்ராஜ் குடியை ஒழிக்க முயன்று கள்ளச்சாராயம் தயாரிப்போரால் கொலையுண்டவர். அவர் சிலையை பஞ்சாயத்து வளாகத்திலேயே மக்கள் அமைத்துள்ளனர். 

அவருக்குப் பிறகு இன்றைய பஞ்சாயத்துத் தலைவரின் தந்தை பஞ்சாயத்துத் தலைவராக்கப்பட்டார். அந்த ஊரில் நன் மதிப்பைப் பெற்றிருந்ததால் அனைவருக்கும் ஏற்புடைய குடும்பமாக இருந்ததால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுனாமி பாதிக்கப்பட்டபோது மிகப் பெரிய பணிகளைச் செய்து மக்களின் நன் மதிப்பைப் பெற்றார்.

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் 17 கிராமப் பஞ்சாயத்துக்களில் காந்திகிராம பல்கலைக் கழகம் பேரிடர் மறுசீரமைப்புத் திட்டம் தயாரிக்க உதவியது.

அந்தப் பஞ்சாயத்துக்களில் இந்த பிரதாமபுரம் பஞ்சாயத்தும் ஒன்று.

பேரிடர் மேலாண்மையில் முன்மாதிரியாகச் செயல்படும் பஞ்சாயத்துக்களை இனம் கண்டு தேர்ந்தெடுத்ததே அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தான்.

அந்த வகையில் இந்தப் பஞ்சாயத்து பலருடைய கவனத்தை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது.

இன்றைய பஞ்சாயத்துத் தலைவரின் தந்தை மக்கள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் அவர் பதவியை நிறைவு செய்கின்றபோது தன் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் கடனை வைத்துவிட்டு மக்கள் மத்தியில் நல்லபெயருடன் சென்றார். அவர் இறப்பு அவர் மகனை பொதுப்பணியிலிருந்து குடும்பத்தை காக்க சிந்திக்கத் தூண்டியது.

நல்ல குடும்பம் நல்ல பிள்ளைகளை உருவாக்கும் என்ற கூற்றுக்கிணங்க, MBA படித்து பல்கலையில் முதல் மாணவனாக தேர்ந்து இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களால் பாராட்டுப் பத்திரம் பெற்று, தன் குடும்பத்தைக் காக்க வெளிநாடு சென்று சம்பாதிக்கலானார்.

வேகமாக சம்பாதித்து கடனை அடைத்து குடும்பம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு விதி மீண்டும் பொதுப்பணிக்கு அவரைத் திருப்பியது.

கஜா புயல் வீசியபோது, மக்கள் குறிப்பாக புறம் தள்ளப்பட்டவர்கள் படும் வேதனை துடைக்க களம் கண்டு உரியவர்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒரு சில இளைஞர்களுடன் களம் கண்டு இடைத்தரகு வேலை பார்த்து பிழைக்கும் ஒரு கூட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி புறக்கணிக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பணி கிடைக்க செய்த‍தால் மக்கள் மத்தியில் ஒரு நற்பெயர் இவருக்கு ஏற்பட்டது.

இன்று தேர்தல் என்றால் பணம், மது, புலால் உணவு, என பணத்தை தண்ணீரைப் போல் பாய்ச்சி தேர்தலில் வெற்றி பெற்று, அதிகாரத்தைப் பிடித்து லஞ்சம் பெற்று தங்கள் வருமானம் பெருக்குவது என்பது நியதியாகிப் போன சூழலில்,

இன்றைய பஞ்சாயத்துத் தலைவரை, பலர் ஊக்கப்படுத்தி “நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், பணம் செலவழிக்கத் தேவையில்லை’’ என்று களத்தில் இறக்கிவிட்டனர்.

தங்களின் கஜா புயல் நிவாரண காலத்தில் பெற்ற அனுபவத்தை வைத்து வேட்பாளராக சிவராசு ஓர் தேர்தல் வாக்குறுதியை தயாரித்து அச்சிட்டு வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளார்.

அந்த அறிக்கை என்பது மக்களின் தேவைகளும் வேட்பாளரின் கனவும் ஒன்றிணைந்தது. மது, கை நிறைய பணம் என அனைத்தும் தேர்தலில் விளையாடின.

ஏழு பேருடன் போட்டியிட்டு ஒரு பைசா கூட வாக்காளருக்குக் கொடுக்காமல் வெற்றி பெற்றது இவருக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்தது.

இவரது குடும்பத்தின் மேல் மக்கள் வைத்திருந்த மக்களின் அபிமானம், இவருடன் இணைந்து பணி செய்தவர்களின் அப்பழுக்கற்ற குணங்கள் இவர் கஜா புயலின்போது நிவாரணம் கிடைக்காதவர்களுக்காகப் போராடி பெற்றுத் தந்தது போன்ற காரணிகள் பணத்தை வெல்ல சாதகமாக செயல்பட்டன.

இன்றைய சூழலில் நம் உலுத்துப்போன நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தலைவராக செயல்படுவது ஒரு மிகப்பெரிய சவால்.

அடுத்து அரசு தரும் இலவசங்களுக்காகவே இலவு காத்த கிளிபோல் பயனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனோபாவம் மற்றொரு சவால்.

இவற்றைத் தாண்டி கிராமத்தை சுரண்ட எந்த வாய்ப்பையும் பயன்படுத்த கட்சிப் பாகுபாடின்றி அலையும் ஒரு சுரண்டல் கூட்டம் மிகப் பெரிய சவால்.

அடுத்து அரசியல் அறியாமையில் வாழும் மக்கள் ஒரு சவால், இவற்றைத் தாண்டி மக்களைச் சுரண்ட வெள்ளைக்காரன் செய்த பிரிவினைகளை விட, நம் கிராம சமுதாயத்தை சாதியின் அடிப்படையிலும் கட்சியின் அடிப்படையிலும் பிரித்து செயல்பட வைத்திருக்கும் சூழல் மற்றொரு சவால்.

மேற்கூறிய சவால்களை வென்றெடுப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல கிராமங்களில் சுரண்டல் கூட்டம் எதிலும் பணம் பார்க்கும் சுரண்டப்படுவோர் எதுவும் அறியாமையில் காலத்தை ஓட்டுவதும்,

வெற்று அரசியல் இதற்கு துணை போவதும், அரசுக் கட்டமைப்பு மக்களுக்கு திட்டங்கள் என பிச்சை போட்டு பயனாளிக் கூட்டமாக மக்களை மேய்ப்பதும் ஒரு பண்பட்ட வாழ்க்கை முறையை கிராமங்களில் கட்டமைக்க தடைக்கற்களாக இருப்பதை ஒரு படித்த இளைஞரால் தலைவராக வந்த பிறகு பார்க்க முடிகிறது.

அதன் விளைவு, மக்களின் அறிவார்ந்த செயல்பாட்டைக் கொண்டுவர, சுயமரியாதையுடைய ஒரு கிராமிய வாழ்வைக் கொண்டுவர மக்களுடன் இணைந்து மக்களை அனைத்துச் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தி செயல்பட வைக்க செயல்படுவது என்பது பஞ்சாயத்துத் தலைவருக்கு நெருப்பாற்றில் நீச்சலிடும் பணியாக இருக்கிறது என்பதை அவருடன் செயலாற்றுவோருடன் உரையாடிய போது உணர முடிந்தது.

வேறு காரணங்கள்  கூறி சோம்பித் திரிவதில் பலனில்லை, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், தான் கண்ட கனவை மக்கள் கனவாக மாற்றி மக்களை செயல்பட வைப்பது மட்டுமே தலைமைக்கு பொறுப்புணர்ந்த கடமையாக இருக்கும் எனக் கருதி களத்தில் நிற்கிறார் பஞ்சாயத்துத் தலைவர்.

தன் கனவினை நனவாக்க முதலில் கையிலெடுத்தது நீர் சூழலை உருவாக்குவதைத் தான்.

நீர் நிலைகளில் தண்ணீர் எந்த அளவுக்கு தேக்கி வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த ஊரில் மண் வளம் உப்பு ஏறாமல் பாதுகாக்கப்படும்.

இல்லையேல் கடல் நீர் ஊருக்குள் புக வாய்ப்பாகி, மண் கெட்டுவிடும் என உணர்ந்து காவிரித் தண்ணீரை தங்கள் ஊருக்கு கொண்டு வந்து, தங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும்.

நீர் நிலைகளின் நிலை, மற்றும் வரத்துக் கால்வாய், நீர் போக்குக் கால்வாய் இவை அனைத்தும் தூர்ந்து உள்ள நிலையில், இதற்கான திட்டங்கள் உடனடியாக அரசிடம் இல்லாத நிலையில் எப்படி சீர் செய்வது என்பதுதான் சவாலாக இவர் முன் எழுந்து நிற்கிறது.

இதைவிட மிகப்பெரிய சவால் கடல்நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்பணை அமைப்பது அடுத்த பெரிய சவால். இதற்கு அவரின் பெரிய கனவான இயற்கை அரண் அமைக்கும் பணி.

பனை வளர்க்கும் பணி என்பது, இரண்டு லட்சம் பனை விதைகளை ஊன்றி பனை வளர்த்து, ஊரை இயற்கை பேரிடரிலிருந்து காப்பதும், அதை வைத்து பலரின் வாழ்வாதாரத்தைக் மீட்டெடுப்பதும், அதில் ஒரு பொருளாதாரத்தைக் கட்டுவதும் திட்டச் செயலாக மாறி நிற்கிறது.

(தொடரும்…)

You might also like