ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது.
அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும் அதிசயம்.
அதிலொன்றாக இடம்பெறுமோ என்ற ஐயத்தை உருவாக்கியது ‘பம்பர்’ ட்ரெய்லர். ‘ட்ரெய்லரும் டீசரும் நல்லாயிருந்தா போறுமா, மெய்ன் பிக்சர் எப்படியிருக்குன்னு சொல்லுவியளா’ என்ற ரசிகர்களின் சந்தேகத்திற்கு என்ன பதில் சொல்கிறது இப்படம்?
பணத்தின் மீதான வெறி!
இஸ்மாயில் எனும் பெரியவர், கேரளாவின் புனலூரில் இருந்து தூத்துக்குடிக்குப் பயணம் மேற்கொள்வதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அவர் யாரைத் தேடி அவ்வூருக்குச் செல்கிறார் என்பதுதான் முன்பாதியாக விரிகிறது. அவரைச் சந்தித்தபிறகு என்ன நடக்கிறது என்பது பின்பாதியாக மலர்கிறது.
தூத்துக்குடி நகரத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியவர் புலிப்பாண்டி (வெற்றி).
நண்பர்கள் பூதத்தான், சூடாமணி, செந்தூரான் ஆகியோரும் அவரோடு சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நகரத்திற்குப் புதிதாக வந்த போலீஸ் அதிகாரி பெஞ்சமின் (மதன் தட்சணாமூர்த்தி), ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார். அவரது பார்வை புலிப்பாண்டி கும்பல் மீதும் விழுகிறது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக புலிப்பாண்டியும் அவரது நண்பர்களும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களோடு கலக்கின்றனர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டுவதாக உறுதியளித்து மாலை அணிகின்றனர்.
கோயில் வளாகத்தினுள் இருக்கும் அவர்களைப் பெஞ்சமின் கைது செய்வது ஊடகங்களில் வெளியாகிப் புயலைக் கிளப்புகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்களை விடுவிக்கிறார் பெஞ்சமின்.
முறையாக விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்கிறது புலிப்பாண்டி கும்பல். அங்குதான் லாட்டரி விற்கும் இஸ்லாமியப் பெரியவர் இஸ்மாயிலை அவர்கள் சந்திக்கின்றனர்.
அப்போது, அவரிடம் இருந்து பம்பர் லாட்டரிச்சீட்டை வாங்குகிறார் புலிப்பாண்டி. அந்த இடத்திலேயே தொலைத்தும் விடுகிறார்.
அதனைப் பத்திரமாக எடுத்து வைக்கிறார் இஸ்மாயில். அதற்கு பத்து கோடி ரூபாய் பரிசு அறிவிக்கிறது கேரள அரசு. அந்தச் சீட்டைக் கொடுப்பதற்காகத்தான் தூத்துக்குடிக்குச் செல்கிறார் இஸ்மாயில்.
ஒருவழியாக புலிப்பாண்டியைக் கண்டுபிடித்து அதனைக் கொடுக்கிறார். இஸ்மாயிலை அழைத்துக்கொண்டு. நண்பர்கள் சகிதமாக திருவனந்தபுரம் செல்கிறார் புலிப்பாண்டி.
இதுவரை தான் சந்தித்த அவமானங்களைத் தன் கைக்குக் கிடைக்கும் பணம் அடியோடு துடைத்தெறியும் என்று நம்புகிறார்.
அது, அவரது பேச்சில், செயல்பாட்டில் மாற்றத்தை விதைக்கிறது. இஸ்மாயில் மீது சந்தேகத்தை விதைக்கிறது; நண்பர்களிடம் மோதலை உருவாக்குகிறது.
அதேநேரத்தில், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் இஸ்மாயிலின் குடும்பத்தினர். கிடைக்கும் பணத்தில் கொஞ்சமாவது தமக்குக் கிடைத்தால் நல்லது என்பதே அவர்களது ஆசை.
ஆனால், இஸ்மாயில் அதனைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. அவரது நேர்மையைக் கண்டு மகனும் மருமகனும் ஆவேசம் கொள்கின்றனர்.
இறுதியாக அவரது வங்கிக்கணக்குக்குத்தான் பணம் வருகிறது என்பதை அறிந்ததும், அவரைக் கொலை செய்யவும் துணிகின்றனர்.
அதன்பிறகு என்னவானது? இஸ்மாயில் என்னவானார்? புலிப்பாண்டியின் பண வேட்கை தீர்ந்ததா என்று சொல்கிறது ‘பம்பர்’.
ஒவ்வொரு மனிதரும் பணத்தின் மீது வெறி கொண்டு திரிகின்றனர். அதுவே, அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் திசையையும் தீர்மானிக்கிறது.
ஆனால், நேர்மையாக வாழ்பவரிடம் அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்கிறது இப்படம்.
அற்புதமான காஸ்ட்டிங்!
கே.எஸ்.ரவிக்குமாரின் ‘முத்துக்குளிக்க வாரீயளா’ சாத்தான்குளம் வட்டாரமொழியைக் கைக்கொண்டது என்றால், ‘பம்பர்’ படத்தில் முழுக்க தூத்துக்குடி வாசனை.
‘சேக்காளிக’, ‘கிருமம்’ என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது அவ்வட்டார மக்களைக் குதூகலத்தில் ஆழ்த்தும். ‘நீயும் தான் சம்பாதிக்க, என்ன கோட்டையா கட்டிட்ட’ என்பது போன்ற வசனங்கள் அம்மக்களின் இயல்பு வாழ்வைப் பிரதிபலிக்கின்றன.
இயக்குனர் எம்.செல்வக்குமார் தேர்ந்தெடுத்திருக்கும் கதை, மலையாளத்தில் வெளியான ‘இந்தியன் ருபி’ படத்தை நினைவூட்டுகிறது.
ஆனால், அதற்காக அவர் ஆக்கியுள்ள திரைக்கதை அந்த எண்ணத்தை அடியோடு புரட்டிப் போடுகிறது. தூத்துக்குடியிலும் புனலூரிலும் உலவும் எண்ணத்தை விதைக்கிறது.
தூத்துக்குடி நகரில் இஸ்மாயில் புலிப்பாண்டியைத் தேடியலையும் காட்சிகள் ரொம்பவே நீள்கின்றன. போலவே, கிளைமேக்ஸில் வரும் திருப்பங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கின்றன.
அந்த இடங்களில் இஸ்மாயில், சண்முகம் ஆகியோரைப் புலிப்பாண்டி கும்பல் ஒருமையில் விளிப்பதும் வசை பாடுவதும் கொஞ்சம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால், கதாபாத்திரங்களில் இயல்பு அதுதான் என்ற நினைவு அதனை மழுங்கடிக்கும்.
இந்தப் படத்தில் வெற்றி, ஹரீஷ் பேரடி, ஆதிரா, ஷிவானி நாராயண், மதன் தட்சணாமூர்த்தி, டிடோ வில்சன், தங்கதுரை, கல்கி உட்படப் பலர் நடித்துள்ளனர். ஏட்டு மாடசாமியாக வரும் கவிதா பாரதியும், செந்தூரானாக நடித்தவரும் நம்மைத் திரைக்கதையுடன் ஒன்றச் செய்கின்றனர்.
போலவே, சமூகவலைதளப் புகழ் ஜிபி முத்து வரும் காட்சிகள் நம்மை விழுந்து புரண்டு சிரிக்க வைக்கிறது. வெற்றியுடன் திரியும் நண்பர்களின் உறவினர்களாக நடித்தவர்களும் அந்தந்த பாத்திரங்களாகவே நடமாடியிருக்கின்றனர்.
உண்மையைச் சொன்னால், இந்த படத்தைப் புதிதாக உணரச் செய்வது இந்த காஸ்ட்டிங் தான்.
வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் அழகுணர்ச்சியை விட, இயல்பான வாழ்வைக் காண்பிக்கும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் நமக்குச் சீர்மை நிறைந்த காட்சியனுபவம் கிடைக்கிறது. சுபேந்தரின் கலை வடிவமைப்பு, திரையில் எங்கும் ஜிகினாத்தனம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் நம் காதுகளில் சட்டென்று ‘சீட்’ போட்டு அமர்ந்து கொள்கின்றன. அதனை ஈடுகட்டும்விதமாக, பின்னணி இசையைக் காட்சிகளில் நிறைந்திருக்கும் உணர்வுகளுடன் பிணைக்கிறார் கிருஷ்ணா.
’பம்பர்’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் எம்.செல்வகுமாருக்கு இது முதல் படைப்பு. வழக்கமான சினிமா இலக்கணங்களை மீறிய கதை சொல்லலே அதைக் காட்டி விடுகிறது. ஆனால்,அதுவே அவரது பலமாகவும் அமைந்திருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் அதனை அவர் கைவிட்டுவிடக் கூடாது.
நல்ல திரைமொழி!
‘பம்பர்’ படத்தின் கதை வேலை வெட்டியில்லாமல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சில இளந்தாரிகளையே காட்டுகிறது. அதேநேரத்தில், மனிதருக்கு அமைதியான, நிம்மதியான, சீர்மையான வாழ்வே அவசியம் என்பதையும் பொட்டிலறைந்தாற் போலச் சொல்கிறது.
தன் மகனைச் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் குருசாமியைப் பார்த்தவுடன், உடனடியாக நெடுஞ்சாண் கிடையாக அவரது காலில் விழுவார் புலிப்பாண்டியின் தாய்.
சாலையின் நடுவே அந்த சம்பவம் நிகழும். அதனைக் கண்டதும் புலிப்பாண்டி மனதில் பாசம் பொங்கும். நமக்கோ, ‘இனியாவது மகனுக்கு நல்லதொரு வாழ்வு அமைந்திடாதா’ என்ற அத்தாயின் தவிப்பு புரியும்.
இன்னொரு காட்சியில், சாலையோரத்தில் தொழுகை புரியும் இஸ்மாயிலுக்கு நிழல் தரும் பொருட்டு ஒருவர் பெரிய பலகையொன்றை ஒருவர் தாங்கிப் பிடிப்பார். நெற்றி நிறைய குங்குமத்தைப் பூசியிருக்கும் அவரது தோற்றம் மனப்பிறழ்வுக்கு ஆளானவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.
புலிப்பாண்டியைக் காண முடியாமல் இஸ்மாயில் தவிக்கும் அத்தருணத்தில், கோயில் வாசலொன்றில் நிற்கும் அந்த நபர் ‘ஏன் இப்படிச் செய்கிறாய்’ என்று கேள்வி எழுப்புவதாக ஒரு ஷாட் இருக்கும்.
தொடர்ந்தாற்போல நான்கைந்து ஷாட்களில் இடம்பெறும் அந்த நபர், நம் மனதைக் கனக்கச் செய்வார். இப்படிப்பட்ட அம்சங்கள்தான் ‘பம்பர்’ படத்தின் பலம்.
தூத்துக்குடியை ஒருமுறை கூட பார்த்திராதவர்களுக்கு, இப்படத்தில் வரும் வசனங்கள் ‘ஜெர்க்’கை உருவாக்கலாம்.
கேரளாவில் நிகழும் காட்சிகளில் முழுக்க மலையாள வசனங்கள் இடம்பெற்றிருப்பதும், படத்துடன் ஒன்றுவதற்கு இடையூறாக இருக்கும்.
அதனை மீறி, நல்லதொரு படம் பார்த்தோம் என்கிற திருப்தியை ‘பம்பர்’ நிச்சயம் வழங்கும்.
அதுவே, இயக்குனர் எம்.செல்வக்குமார் மற்றும் குழுவினர் அடுத்தடுத்து நல்ல படைப்புகளைத் தருவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
– உதய் பாடகலிங்கம்