முழுக்க கிராமிய வாத்தியங்கள் சார்ந்த இசை. கதை நகர்விலும் பேச்சு வழக்கிலும் குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிபலிப்பு.
கதை மாந்தர்களின் அசைவுகளில் நாம் காணும் மனிதர்களின் சாயல். யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் திரை மொழி.
இவற்றோடு கொஞ்சம் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த கலர்ஃபுல்லான ஒரு பொழுதுபோக்குச் சித்திரத்தைக் கண்டால் எப்படியிருக்கும்? ‘காடப்புறா கலைக்குழு’ ட்ரெய்லர் அவையெல்லாம் ‘இஞ்ச்’ பிசகாமல் இருக்குமென்ற உறுதியைத் தந்தது. படமும் அப்படித்தான் இருக்கிறதா?
கலைகளுக்கு மரியாதை!
கலைகளுக்கு மதிப்பும் மரியாதை அளிக்க வேண்டுமென்ற கொள்கை உடையவர் பாவாடைசாமி (முனீஸ்காந்த்). திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவரும் அவர், பலருக்கு உணவு, உடை, இருப்பிடம் தந்து வாழ்வித்து வருகிறார்.
அவரால் வளர்க்கப்பட்டவர் தமிழ் (ஹரிகிருஷ்ணன்). நிகழ்த்துக் கலைகள் குறித்த முதுகலைப் படிப்பை பயின்றுவரும் தமிழுக்குக் கலையரசி (சுவாதி முத்து) என்ற பெண் மீது காதல்.
இந்தக் கலையரசியின் சகோதரர் பெயர் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர்குட் சுப்பிரமணி). பெருமாளுக்கும் பாவாடைசாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.
அதனால், இவர்களது கலைக்குழுக்கள் இடையேயும் ஒரு மறைமுகப் போட்டி நிலவுகிறது.
பாவாடைசாமியின் ‘காடாப்புறா கலைக்குழு’ கடுமையான நிபந்தனைகளைச் செயல்படுத்தி வருகிறது.
மாறாக, பெருமாளின் குழுவோ ஆபாச நடனங்களுக்காகவும் இசைக் கச்சேரிகளுக்காகவும் மக்களால் விரும்பப்படுகிறது.
பாவாடைசாமி நாட்டுப்புறக் கலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவர். அவரை ஆதரித்துவரும் சரவணன் என்பவர், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்.
அதுவரை எந்தச் சார்பும் இல்லாமல் இருந்துவரும் பாவாடை, சரவணனுக்கு ஆதரவு தர வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆளாகிறார்.
அது, பாவாடைசாமியின் குழுவில் இருப்பவர்களோடு விரோதத்தைக் கடைப்பிடித்துவரும் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் (மைம் கோபி) ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
எதையும் அரசியல் லாபமாக நோக்கும் ஈஸ்வரமூர்த்திக்குப் பாவாடை சாமியுடன் மோதுவதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. ஆனால், சூழல் இருவரையும் நேருக்கு நேராக மோதச் செய்கிறது.
அப்படியொரு நிலைமை உண்டாகும் அளவுக்கு என்ன நடந்தது? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘காடப்புறா கலைக்குழு’வின் மீதி.
இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எளிமையான சில மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
சில இடங்களில் நகைச்சுவை ரொம்பவே செயற்கையாகவும் ஏற்கனவே கேள்விப்பட்டதாகவும் உள்ளது. அதையும் மீறி, ஒரு இலகுவான கதையம்சம் கொண்ட கிராமியப் படம் பார்த்த திருப்தியைத் தருகிறது ‘காடாப்புறா கலைக்குழு’.
கரகாட்டக்காரன் நினைவுகள்!
இயக்குனர் ராஜா குருசாமி, கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்திற்குப் பயங்கரமான விசிறியாக இருப்பார் போல.. படத்தின் அடிப்படைக் கதை, திரைக்கதை ட்ரீட்மெண்ட், சில காட்சிகளின் உள்ளடக்கம் என்று பலவற்றில் அதனை நினைவூட்டுகிறார்.
கரகாட்டக்காரனில் திரைக்கதைக்கு என்று ஒரு இலக்கு உண்டு. இப்படத்தில் அது ஈஸ்வரமூர்த்தி – பாவாடை சாமி இடையிலான பகையாக இடம்பெற்றுள்ளது.
ஆனால், அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் வகையில் அழுத்தமான காட்சிகளோ, நேர்த்தியான திரைக்கதையோ அமையப் பெறவில்லை. அதனால், அங்குமிங்கும் பரவிப் படரும் காட்டாறு போல நீளும் காட்சிகள் முடிவுகள் ஓரிடத்திற்கு வந்து நிற்கிறது. கொஞ்சம் முயன்றிருந்தால் அதனைச் சரி செய்திருக்கலாம்.
இதுவொரு இலகுவான பொழுதுபோக்குப் படம் என்ற எண்ணத்தோடு, நாட்டுப்புறக் கலைகள் மீதான ஆர்வமும் அக்கறையும் மிகுந்து நகர்கிறது திரைக்கதை ட்ரீட்மெண்ட்.
படத்தின் ப்ளஸ்ஸும் மைனஸும் அதுவே.
அதேநேரத்தில், இதில் நடித்த கலைஞர்கள் அனைவரும் மிகப்பாந்தமாக அந்தந்த பாத்திரங்களில் பொருந்தியுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதுவே, இருக்கையில் இருந்து எழச் செய்யாமல் நம்மைக் கட்டிப் போடுகிறது.
அந்த வகையில் முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரிகிருஷ்ணன், மைம் கோபி, ஆந்தக்குடி இளையராஜா, ஸ்ரீலேகா ராஜேந்திரன், புதுமுகம் ஸ்வேதா, டெலிபோன் மணி உட்படப் பலரும் பெயரைத் தட்டிச் செல்கின்றனர்.
மிக முக்கியமாக முனீஸ்காந்தும் காளி வெங்கட்டும் எவ்வளவுக்கெவ்வளவு நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்களோ, அதற்கிணையாகக் கண் கலங்கவும் வைக்கின்றனர்.
நாயகி சுவாதி முத்து மட்டுமே, இக்கதையில் துருத்தலாகத் தென்படுகிறார். அவரது உடலமைப்புக்கும் தோற்றத்துக்கும் ஏற்ப காஸ்ட்யூம் வடிவமைப்பு, மேக்கப்புக்கான மெனக்கெடல், திரைக்கதையில் அவரது பாத்திரத்தை மட்டும் ‘வேற்றுக் கிரகவாசி’யாக உணரச் செய்கிறது.
இப்படியொரு கதையைத் தாங்கிப் பிடிக்கும் வண்ணம் பாடல்களும் பின்னணி இசையும் அமைய வேண்டும். அந்தப் பொறுப்பை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் ஹென்றி.
‘நாட்டுக்கூத்து’, ‘ரட்டக்க ரட்டக்க’ பாடல்களோடு ஹரிகிருஷ்ணன் – சுவாதியின் டூயட் பாடலும் கூட எளிதாக மனதில் ஒட்டிக்கொள்கிறது.
தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட நாட்டுப்புற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை சண்டைக் காட்சிகளிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் ‘பெப்’ கூட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி படம் முழுக்க ‘கலர்ஃபுல்’லாக இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.
அவருக்கு உதவிகரமாக இருந்ததோடு, முழுக்க ஒரு கிராமத்திற்குள் நுழைந்த உணர்வை உண்டுபண்ணுகிறார் கலை இயக்குனர் இன்பா ஆர்ட் பிரகாஷ்.
படத்தொகுப்பாளர் ராம் கோபியின் உழைப்பு, ரொம்பவே எளிமையாகக் கதை சொல்வதில் கவனம் செலுத்தியிருக்கிறது. அப்படியே நகைச்சுவைக் காட்சிகளின் நீளத்திலும் கொஞ்சம் பார்வையைத் திருப்பியிருக்கலாம்.
தரையில் அடித்த பந்து போல சண்டைக்கலைஞர்கள் பறக்கும் ஷாட்களுக்கு பதிலாக, அவர்களைக் காற்றில் சுழல வைத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஷார்ப்’ சங்கர். திரையில் ரத்தக்கறை வடியப் படம் பார்த்த அனுபவத்தைப் பெறவிடாமல் அதுவே நம்மைக் காப்பாற்றுகிறது.
நல்லதொரு முயற்சி!
கிராமப்புறக் கலைகள் அழிந்துவிடாமல் போராடும் கலைஞர்களுக்கு மரியாதை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜா குருசாமி. இசையும் ஒளிப்பதிவும் அதற்கேற்ப ஒத்துழைப்பைத் தந்து, திரைக்கதை நகர்வை ஜனரஞ்சகமாக மாற்றியுள்ளன.
கதையில் பாத்திர வடிவமைப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. அதற்கேற்ப காட்சிகளைக் கோர்வையாகத் தரத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதனைச் செய்திருந்தால், இன்னும் நேர்த்திமிக்க படைப்பைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.
அதேபோல, சமீபகாலப் படங்களின் பாத்திர வார்ப்புகளில் சாதி அடையாளங்கள் ரொம்பவே கூர்மையாகப் பொருத்தப்படுகின்றன. ‘காடாப்புறா கலைக்குழு’வில் அதனைத் தவிர்த்திருக்கிறார் ராஜா குருசாமி.
ஒரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை அப்படிப்பட்ட சித்தரிப்புகள் சிதைத்துவிடுமோ என்று யோசித்திருக்கவும் வாய்ப்புண்டு. சூப்பர்குட் சுப்பிரமணி சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் தொண்ணூறுகளில் வந்த படங்களை நினைவூட்டுகின்றன.
அது போன்ற சில விஷயங்களைச் சரி செய்திருந்தால், ‘காடாப்புறா கலைக்குழு’ தரும் காட்சியனுபவம் மிகச்சிறப்பானதாக மாறியிருக்கும்.
வழக்கமான கமர்ஷியல் சினிமாவில் பார்த்துச் சலித்த அம்சங்களில் இருந்து விடுபட்டு, ரொம்பவே எளிமையான ஒரு படத்தைப் பார்த்தாக வேண்டுமென்பவர்களை ‘காடப்புறா கலைக்குழு’ நிச்சயம் குதூகலப்படுத்தும்!
– உதய் பாடகலிங்கம்