‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!

நூல் அறிமுகம்:

விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா.

பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு முதலியவை வெளிவந்துள்ளன. இவருடைய உருவாக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ளது  குரவை என்ற முதல் நாவல்.

குரவையாட்டத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தப்படித்தான் மூலையில் வசிக்கின்றன. நாட்டுப்புறக் கலையைத் தவிர வேறு ஏதும் தெரியாத அல்லது விட்டுவிலக முடியாத கலைஞர்கள், ஆண்ட்ராய்டு உலகத்தில் வறுமையில் கடனோடு காலத்தைக் கடத்துகிறார்கள்.

ஆடியவளின் பேத்தியும் ஆட வருகிறாள். கடைகளில் அரைகுறையாய் ஊதியம் கொடுத்து ஆடையை இழுப்பதையும் பொறுத்துக் கொள்வதை விட, இது எவ்வளவோ சுகஜீவனம் அல்லவா!

தப்படித்தான் மூலையில் பணங்காசுக்குப் பஞ்சமிருந்தாலும் குடிக்கும், காமத்திற்கும் பஞ்சமேயில்லை.

பாகவதர்போல் அமோகமாக வாழ்ந்து பின் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டதுபோல், வாழ்ந்து கெட்டவர்கள் ஏராளமாக வருகிறார்கள் இந்த நாவலில்.

ஒரு ஆட்டத்திற்கு பத்தாயிரம் வாங்கிய வசந்தா எல்லாப் பணத்தையும், இளமையையும் தொலைத்துவிட்டு கடன் கேட்டு கூசி நிற்கிறாள்.

எத்தனையோ உயரத்தை எட்டியிருக்க வேண்டிய நாகு குடியிலும், சந்தேகத்திலும் எல்லாவற்றையும் தொலைத்து முதுமையில் தனித்து நிற்கிறார்.

இது ஒருவரின் கதையல்ல, பலரது கதை. ஆரம்பத்திலும், முடிவிலும் இரண்டு முற்றுப்பெறாத கதைகள் வருவது போல் முடிவடையாத கதைகள்.

உண்மையான காதல்கள் பலவும் இந்த நாவலில் வருகின்றன. தடாலடியாக ஆல்பர்ட்டைக் கைபிடிக்கும் நித்யா, மேரியை சேர்த்துக் கொள்ளும் பாய் போன்றவற்றைக் காதலில் சேர்ப்பதற்கில்லை.

சித்ரா, ரேகா, வசந்தா அழகாகக் காதலிக்கிறார்கள். விஜயா போன பிறகு நாகு கூட அவளை உண்மையாகக் காதலிக்க ஆரம்பிக்கிறார். எல்லாமே நிறைவேறாக் காதல்கள்.

வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தது மட்டுமன்றி அதற்கான தகவல்கள் சேகரிப்புக்கு நன்றாகவே உழைத்திருக்கிறார் சிவக்குமார் முத்தையா.

சிவக்குமார் முத்தையா

நண்டு, நத்தை, கருவாடு, சாராயம் என்று உணவுப் பழக்கங்களில் இருந்து, பேச்சு மொழி, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தெளிவான சித்திரம் தெரிகிறது.

கொலையும், துப்புத்துலக்கலும் மட்டுமே இந்த நாவலில் ஒட்டாமல் தனியாக நிற்கிறது.

பெண்கள் கதாபாத்திரங்களில் பலவற்றை hell bent woman ஆகச் சித்தரித்திருக்கிறார்.

குறிப்பாகக் கன்னி, ஆண்களின் Domainல் அச்சமின்றி நுழைவது.

இத்தனை கதாபாத்திரங்கள், அவர்களது கதைகள் எல்லாம் சேர்த்து 240 பக்கங்களில் முடிப்பது கடினம், அதை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

குரவை (நாவல்)
சிவக்குமார் முத்தையா

வெளியீடு: யாவரும் பதிப்பகம்,
முதல் பதிப்பு 2023,
விலை ரூ. 290.
தொடர்புக்கு: 90424 61472

You might also like