ஒரு பெண்ணால் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாகப் பேச முடியுமா? அதுவும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் பேச முடியுமா? அதனை இந்தச் சமூகம் ஏற்குமா?
இப்படிப்பட்ட கேள்விகளே பாலியல் ரீதியிலான புகார்கள் செய்திகளாகும்போதும், திரைப்படங்கள் உள்ளிட்ட புனைவுகளில் இடம்பெறும்போதும் பூதாகரப்படுத்தப்படும்.
அதற்கு உருவம் தந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் சமீத் வித்வன்ஸ். கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி நடிப்பில் ‘சத்யபிரேம் கி கதா’ எனும் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.
யார் இந்த சத்யபிரேம்?
எந்த வேலைக்கும் செல்லாமல், வீடே கதி என்று இருக்கும் ஒரு இளைஞன் சத்யபிரேம் (கார்த்திக் ஆர்யன்). தந்தை நாராயண் (கஜராஜ் ராவ்) மட்டுமே அவருக்கிருக்கும் நெருங்கிய நண்பன். அவரும் எந்த வேலைக்கும் செல்வதில்லை.
காரணம், பல வியாபாரங்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்த அனுபவம். சத்யபிரேம் வீட்டில் அவரது தாயும் தங்கையும் மட்டுமே சம்பாத்தியம் உள்ளவர்கள். இருவருமே பெண்களுக்கான நடனப் பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனர்.
தாய், தங்கை, உற்றார் உறவினர் என்று பலரும் திட்டினாலும், தனக்கென்று ஒரு பணி வாழ்க்கையை சத்யபிரேம் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.
அவர் மனதில் எப்போதும் ஒரேயொரு கனவுதான். அது, கதா (கியாரா அத்வானி) எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது.
கடந்த ஆண்டு நடந்த நவராத்திரி விழாவில்தான் கதாவை முதன்முறையாகச் சந்தித்தார் சத்யபிரேம். அவரது அழகில் மயங்கி, பார்த்தவுடன் காதல் கொண்டார்.
அதை அவரிடம் தெரிவிக்கவும் செய்தார். ஆனால், தனக்கு பாய்பிரெண்ட் இருப்பதாகக் கதா சொன்னவுடன் அதிர்ச்சியானார்.
அதைச் சீரணித்துக்கொண்டு, ‘அவரை நீங்கள் திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லையே’ என்று சத்யபிரேம் கேட்க, ‘அந்தக் கேள்வி எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது’ என்று கூறிவிட்டுத் தனது பாய்பிரெண்ட் உடன் காரில் பறந்து சென்றுவிட்டார் கதா.
நாட்கள் பலவானாலும், அந்த நினைவோடே இருந்து வருகிறார் சத்யபிரேம். ‘எப்படா நவராத்திரி விழா வரும்’ என்று காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்த தருணமும் வருகிறது.
முதல் நாள் நவராத்திரி விழாவின்போது, மகன் மனமறிந்து கதாவின் பெற்றோரை அறிமுகப்படுத்துகிறார் நாராயண். அன்றைய தினம் கதா வரவில்லை. அவரது உடல்நலம் சரியில்லை என்று காரணம் சொல்கின்றனர் பெற்றோர்.
அதைக் கேட்டதும், சுவரேறிக் குதித்தாவது கதாவைப் பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்கிறார் சத்யபிரேம். அதன்படியே, அவரது வீட்டுக்கும் செல்கிறார்.
அங்கு கையை அறுத்துக்கொண்டு ரத்தம் வடிய மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கதா. அவ்வளவுதான். அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் சத்யபிரேம்.
அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது. கதா – சத்யபிரேம் இருவரும் திருமண பந்தத்தில் இணையும் அளவுக்கு நிலைமை செல்கிறது.
அந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத கதா, சத்யபிரேம் உடன் தாம்பத்தியம் கொள்ளத் தயாராக இல்லை. இருவரும் வெவ்வேறு அறைகளில் உறங்குகின்றனர்.
ஒரு உறவினரின் வருகை, இருவருக்குமான இடைவெளி ஏன் என்ற கேள்வியைப் பகிரங்கமாக்குகிறது. அதற்கு, திருமணத்திற்கு முன்னர் பாய்ப்ரெண்டால் நான் வல்லுறவுக்கு ஆளானேன் என்கிறார் கதா.
அதைக் கேட்டபிறகு சத்யபிரேம் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்தார்கள்? கதாவின் வாழ்க்கை என்னவானது என்று சொல்கிறது ‘சத்யபிரேம் கி கதா’.
தனது வாழ்வில் மனைவியுடன் மட்டுமே ‘செக்ஸ்’ உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் இளைஞர் சத்யபிரேம்.
தான் ஆசைஆசையாய் காதலித்து மணந்துகொண்ட மனைவிக்கு நேர்ந்த கொடுமையைக் கேள்விப்பட்டதும் அவர் என்ன செய்தார் என்பதே ‘யார் இந்த சத்யபிரேம்’ எனும் எண்ணத்தை நம் மனதில் விதைக்கிறது.
இனிப்பு தடவிய மருந்து!
இளமை பொங்கும் ஜோடியாக கார்த்திக் ஆர்யன் – கியாரா அத்வானி இதில் தோன்றியிருக்கின்றனர். தொடக்கத்தில் வரும் பாடல் தவிர, முக்கால்வாசி காட்சிகளில் சோகம் ததும்ப நிற்கிறார் கியாரா.
அதனை ஈடு செய்வது போல, பெரும்பாலான காட்சிகளில் உற்சாகம் பொங்க வலம் வருகிறார் கார்த்திக் ஆர்யன். அவரது தந்தையாக வரும் கஜராஜ் ராவ், ஏற்கனவே ‘பதாய் ஹோ’வில் நம்மை அசத்தியவர்.
இதிலும் அப்படியொரு பெர்பார்மன்ஸையே தந்திருக்கிறார். போலவே, நாயகனின் தாயாக நடித்துள்ள சுப்ரியா பதக்கும் வெகு இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
நாயகியின் பெற்றோர் பாத்திரங்கள் கூட சட்டென்று நம்மை ஈர்க்கும் வகையில் வார்க்கப்பட்டுள்ளன. பால்காரராக வரும் ராஜ்பால் யாதவ் இரண்டொரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
அயனங்கா போஸின் ஒளிப்பதிவில் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் வண்ணங்கள் மிளிர்கின்றன.
அதேநேரத்தில், இரண்டாம் பாதியில் கதைக்கும் காட்சிகளும் அழுத்தம் தரும் வகையில் தன்னுழைப்பைத் தந்திருக்கிறார்.
சாரு ஸ்ரீராயின் படத்தொகுப்பில் சீராகச் செல்லும் நதி போலக் காட்சிகள் நகர்கின்றன.
ஹிதேஷ் சோனிக்கின் பின்னணி இசை காதலையும் சோகத்தையும் எளிதாகக் கடத்துகிறது. பாடல்கள் அனைத்தும் தியேட்டரில் துள்ளாட்டம் போடவைக்கும் வல்லமை கொண்டவை.
இந்தப் படத்தின் மையக்கதைக்கு ஏற்ப, எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைக்கலாம்.
ஆனால், குடும்பத்தோடு தியேட்டருக்கு வருபவர்கள் முகம் கவிழா வண்ணம் திரைக்கதை அமைக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கின்றனர் இயக்குனர் சமீர் வித்வன்ஸ் மற்றும் கரண் ஸ்ரீகாந்த் சர்மா இணை.
அதனாலேயே, இனிப்பு தடவிய மருந்து போல ஒரு கமர்ஷியல் குடும்பச் சித்திர வார்ப்புக்குள் இப்படியொரு பிரச்சனையை பொதித்து வைத்திருக்கின்றனர்.
உண்மையில், கார்த்திக் – கியாரா ஜோடியின் திருமணக் காட்சியில்தான் படம் சூடு பிடிக்கிறது.
அதுவரையிலான காட்சிகள் ஏற்கனவே பார்த்தது போலவும், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன. வழக்கமான காதல் படம் என்ற உணர்வையூட்டி பின்னர் அதிர்ச்சி தர உத்தேசித்து அவர்கள் இந்த உத்தியை யோசித்திருக்கலாம்.
நல்லதொரு முயற்சி!
‘டேட் ரேப்’ எனும் விஷயம் பற்றி மிகச்சிறிய அளவில் மட்டுமே விவாதங்கள் நிகழ்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் டேட்டிங் செல்லும்போது, ‘ரேப்’ என்ற வார்த்தைக்கே இடமில்லை எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து சுற்றினாலே படுக்கையைப் பகிரத் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்கிறது இப்படம். அந்த வகையில், ‘பிங்க்’ படத்தின் இன்னொரு வெர்ஷன் ஆகவும் இது உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்தவர்களாக நாயகனையும் நாயகியையும் காட்டுவதால், அங்குள்ள சில சடங்குகள், சம்பிரதாயங்கள் திரைக்கதையில் காட்டப்படுகின்றன. அங்கு சத்யநாராயணன் பூஜை என்பது ரொம்பவே பிரபலம்.
அதையொட்டியே, நாயகனுக்குச் சத்யநாராயணன் என்றே பெயர் வைக்கவும், படத்திற்கு ‘சத்யநாராயணனின் கதா’ என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் டைட்டில் வைக்கவும் யோசித்திருக்கிறது படக்குழு.
அதன்பிறகு வீணான சர்ச்சைகளுக்கு இடம் தர வேண்டாம் என்று சத்யபிரேம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சத்யபிரேம் என்றால் உண்மைக்காதல் என்றும், கதா என்றால் கதை என்றும் கூட அர்த்தம் கொள்ளலாம்.
இக்கதையில் அவை நாயகன் நாயகியின் பெயர்களாக உள்ளன. அதனாலேயே, உண்மைக்காதலின் கதை என்று இப்படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் பழமைவாதத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று தோற்றம் தந்தாலும், இக்கதையில் புரிதல் மிக்க காதலுக்கும் பெண்களின் உண்மையான விருப்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
திரையில் அதனைப் பார்க்கவே விரும்புகிறோம் என்பவர்கள் தாராளமாக ஒருமுறை இப்படத்தைப் பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்