திரையரங்குகளுக்குக் கூட்டம் வராத‍து ஏன்?

ஊர் சுற்றிக் குறிப்புகள் :

“புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நாளிலேயே தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் காட்சிகள் கேன்ஸலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்” – என்று அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் சுந்தர்.சி.

அவர் சொல்லியிருப்பது உண்மை தான். சென்னையில் உள்ள பல திரையங்குகளில் இந்த நிலையைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

சென்ற வாரம் ஒரு புதுப்படம் ரீலீஸ் அன்று திரையரங்கிற்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணிவிட்டு நேரே போனால், அன்றையக் காட்சியையே ரத்து பண்ணி விட்டார்கள். காரணம் – முதல் நாள் முதல் காட்சி புக்கிங் ஆகியிருந்த டிக்கெட்கள் மூன்று மட்டுமே.

குறைந்த பட்சம் பத்து டிக்கெட்களாவது புக் ஆகியிருந்தால் தான் தாங்கள் குறிப்பிட்ட காட்சியை ஓட்ட முடியும். இல்லாவிட்டால் திரையரங்க உரிமையாளர்களுக்குத் தான் நட்டம் என்கிறார்கள் திரையரங்க ஊழியர்கள்.

இன்னொரு படத்தின் முதல் காட்சிக்கு வந்திருந்தவர்கள் அதிகபட்சம் பதினெட்டு பேர்.

சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பிறகு, சிறிது சிறிதாக‍க் கூட்டம் அதிகரித்து பிக்அப் ஆன படங்கள் – ‘குட் நைட்’டும், போர்த் தொழில்’- இரண்டும் தான்.

மலையாளத்தில் வணிகரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்ற சில படங்கள் கூட தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டு வெளியானபோது குறைந்தபட்சக் கவனத்தைக் கூடப் பெறவில்லை.

மிகவும் ஆரவாரமாக எதிர்பார்க்கப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் தமிழ் வெர்ஷனுக்கும் உரிய வரவேற்பில்லை.

பாப்புலரான ஸ்டார்கள் நடித்துப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளிவந்தால் திரையரங்குகளில் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு வாரங்கள் கூட்டம் களை கட்டுகிறது. ‘விக்ரம்’ போன்ற படங்கள் ஒரு விதிவிலக்கு.

என்னதான் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், குறிப்பிட்ட சில படங்களைத் தவிர, பெரும்பாலான படங்கள் வெளிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்றன.

அப்படிப்பட்ட படங்களுக்குத் தனியார் தொலைக்காட்சிகளிலும், ஓ.டி.டி. தளங்களிலும் கூட மதிப்பு குறைவு.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நூறு கோடி ரூபாய் பணத்தை இறைத்து உருவாக்கப்படும் படங்களுக்குத் திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு இந்த அளவுக்குக் குறைந்து போனதற்கு என்ன காரணம்?

குறிப்பிட்ட படத்தைத் திரையரங்குகளில் போய்ப் பார்ப்பதற்கான தூண்டுதல்களைப் பார்வையாளர்கள் இழந்து வருகிறார்களா?

அல்லது போதுமான பணப்புழக்கம் இல்லாத நிலை ஒரு காரணமா?

3 டி. தொழில்நுட்பத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்கான டிக்கெட் கட்டணத்தைக் குறைந்தும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லையே ஏன்?

அதே சமயம் வெற்றிமாறனின் ‘விடுதலை-1’ போன்ற படங்கள் இத்தகைய வறண்ட நிலையிலும், வணிகரீதியான வெற்றியைப் பெற்றது எப்படி?

சத்தான உள்ளடக்கம் உள்ள, அதே சமயம் மக்களின் பிரச்சினைப் பிரதிபலிக்கும் படங்கள் மட்டும் கவனம் பெறுகின்றன என்றால், திரைப்படத்தைத் தயாரிப்பவர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

வலுவான கதையும், காட்சிப்படுத்தலும் தான் பிரபலமான ஹீரோவைவிட முக்கியம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது திரையரங்குகளின் நிகழ்காலம்.

– யூகி

You might also like