இந்தியனோடு 7 ஆண்டுகள் போராடிய ஷங்கர்!

‘நினைத்தது ஒன்று… நடந்தது வேறொன்று’ என்ற பழமொழி இயக்குநர் ஷங்கருக்கு ரொம்பவே பொருந்தும்.

அவர் முதன் முதலாக இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது.

சரத், பவித்ரனின் ‘ஐ லவ் இந்தியா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால், அவருக்கு பதிலாக அர்ஜுன் ஜென்டில் மேன் ஆனார். அர்ஜுனுக்கு மறுவாழ்வு கிடைத்தது.

காதலன் படத்தின் கதையை பிரசாந்தை மனதில் வைத்தே உருவாக்கினார் ஷங்கர்.

ஜென்டில்மேன் வெளியாகாத நிலையில் பிரசாந்திடம் கால்ஷீட் கேட்டுப்போனார். அவர் மறுத்து விட்டார்.

பிரபுதேவாவை ஹீரோ ஆக்கினார். அவருக்கு புதுவாழ்வு கிடைத்தது.

முதல்வன் கதை ரஜினியை மனதில் வைத்தும், எந்திரனை கமலை மனதில் வைத்தும் உருவாக்கி கடைசி நேரத்தில் நாயகன்களை மாற்ற நேரிட்டது.

இப்போது ‘இந்தியன்-2’க்கு வருவோம்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ஷங்கர் இயக்கிய இந்தியன் 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இதன் இரண்டாம் பாகத்தை, ‘இந்தியன் -2 எனும் பெயரில் உருவாக்கப்போவதாக 2017 -ல் அறிவித்தார் ஷங்கர்.

முதல் பாகத்தில் நடித்த கமலஹாசனே இதிலும் நாயகன். இரண்டே ஆண்டில் அதாவது 2019 ஆம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்வதாக திட்டம்.

ஆனால் வரிசை கட்டி வந்து நின்றன தடங்கல்கள். முதலில் இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பதாக இருந்தது.

படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என ஷங்கர் சொன்னதால் தில்ராஜு மிரண்டு போனார். பின்வாங்கினார்.

அதன்பிறகே லைகா நிறுவனம் இந்தியன்-2 வை தயாரிக்க முன்வந்தது. சேனாபதி கேரக்டருக்கு ஆரம்பத்தில் போடப்பட்ட மேக்கப் கமலுக்கு திருப்தியாக இல்லை.

இதனால் படம் தொடங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. வெளிநாட்டு ஒப்பனைக் கலைஞரை ஒப்பந்தம் செய்து மேக்கப் பிரச்சினை சரி செய்யப்பட்டு
2019 ஆம் ஆண்டு ஒரு வழியாக படத்தை தொடங்கினார் ஷங்கர்.

கொரோனோவின் ஊடுருவல் இரண்டு ஆண்டுகள் படத்தை முடக்கிப்போட்டது.

மீண்டும் படத்தை ஆரம்பிக்க ஷங்கர் முயன்றபோது பட்ஜெட் எகிறி இருந்தது.

இதனால் லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு படம் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் படம் எப்போது ஆரம்பமாகும் என்று ஷங்கருக்கு தெரியவில்லை. எனவே ராம் சரணை நாயகனாக வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை தெலுங்கில் ஆரம்பித்தார் ஷங்கர்.

இந்தியனை முடிக்காமல் தெலுங்கு படத்தை இயக்கக்கூடாது என நீதிமன்றத்துக்கு போனது லைகா நிறுவனம்.

பல கட்டபஞ்சாயத்துகளுக்கு பின்னர், ஷுட்டிங் மீண்டும் தொடங்கியது. ஒரே நேரத்தில் இந்தியனையும், கேம் சேஞ்சரையும் இயக்கினார் ஷங்கர்.

வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு முழு மூச்சாய் நடைபெற்றது.

சில மாதங்களுக்கு முன்னர் போரூர் ஈவிபி ஸ்டூடியோவில் ஷுட்டிங் நடந்தது. அப்போது கிரேன் சரிந்து விழுந்து, உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது.

லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து கொண்டது.

கிளைமாக்ஸ் காட்சிகள் சில தினங்களுக்கு முன் சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது.

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கட்டணம் செலுத்தி ஷூட்டிங் நடத்தினார் ஷங்கர்.
அனுமதி பெறாத இடங்களிலும் படம் பிடித்ததாக குற்றம் சுமத்தி, ஷூட்டிங்கை அதிகாரிகள் திடீரென நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் ஷூட்டிங் நடந்தது.

படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டது. டப்பிங் வேலைகள் நடக்கிறது. கிராபிக்ஸ் வேலைகள் பல மாதங்கள் நீடிக்கும்.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கேம்சேஞ்சரும் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்தியன்-2 வுக்காக ஏழு ஆண்டுகள் போராடிய ஷங்கருக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு தெலுங்கு படத்தையும் முடித்த திருப்தி எஞ்சி இருக்கும்.

– பி.எம்.எம்.

You might also like