பானிபூரி – கண்ணியமான காதல்கதை!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் பேசிய தயாரிப்பாளர் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன், “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம்.

‘பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் வினோத் பேசும்போது, “பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது.

இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது.

‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி” என்று உற்சாகமாகப் பேசினார்.

நடிகை சாம்பிகா, “ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட், ஷார்ட்ஃபிலிக்ஸ் மற்றும் பாலாஜி வேணுகோபால் சாருக்கு முதலில் எனது நன்றி.

இது போன்ற கதாபாத்திரத்தை எனக்கு நம்பி கொடுத்துள்ளார். எங்களுக்குப் பிடித்தது போலவே உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று சுருக்கமாகப் பேசினார்.

நடிகர் கோபால், “பாலாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பு மிகப் பெரியது. எந்த ஒரு காதல் கதையை எடுத்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பார்ப்பது கடினம். அதற்குள் இந்த கதையை வெற்றிகரமாக அவர் செய்துள்ளார்.

அதனால், என்னை விட அவருக்குதான் இது முக்கியமான நாள். கதையில் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருக்கும்” என்றார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால், “இருபது வருடங்களாக நானும் ரேடியோவில் இயங்கி வருகிறேன்.

அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறேன்.

அதற்கு உங்களைப்போல நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் விமர்சனங்களும்தான் காரணம் என நினைக்கிறேன்.

நீங்கள் இலைகளை வெட்டலாம், கிளைகளை வெட்டலாம், ஏன் மரங்களை கூட வெட்டலாம் ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்கமுடியாது என்ற பாப்லோவின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நமக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதுபோல எனக்கும் இருந்தது.

அப்போது எல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு சரியான நபர் உத்ரா ஸ்ரீதரன். ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். ரேடியோவில் சேர்ந்த போது அவர் எனக்கு அறிமுகமானார்.

காதலை கண்ணியமாக காட்ட முடியாதா என்ற பிடிப்பில் ஆரம்பித்த ஒரு கதைதான் ’பானிபூரி’.

இந்த கதையை 15 நாட்களில் படமாக்கினோம். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய அணி.

இந்தப் படத்தை நீங்கள் குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த பானிபூரியை சோளாபூரியாக மாற்றிக் கொடுங்கள்” என்றார்.

You might also like