புலம் பெயர்தல் எனும் வலி!

மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு புலம்பெயர்தல் நிகழ்கிறது. விவசாயம் மட்டுமே மனிதனை கொஞ்சகாலம் நிலத்தோடு கட்டிப்போட்டது.

மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனம் உலகெங்கும் விரிந்த கதையை ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர் யுவா நோராரி விரித்துரைத்திருப்பார்.

பஞ்சமும், யுத்தமும், வணிகமும், தேடலும் மனிதனை ஓடு ஓடு எனத் துரத்தியது. விவசாயக் குடியிலிருந்து அரசுகள் தோன்றிய பிறகு நாடு எனும் கருத்தாக்கம் விரிவானது.

மதங்கள் தோன்றின. மதமும் அரசும் கை கோர்த்து. தன்நாடு, தன் மதம் எனப் பெருமிதம் கட்டமைக்கப்பட்டது. யுத்தங்கள் தவிர்க்க முடியாதது ஆகின. உலக யுத்தங்கள் உலகத்தை அணி பிரித்தது.

தொழிற்புரட்சி இயந்திரங்ளை குவித்தது. காலனி நாடுகள் உருவாகின. மனிதனின் சுதந்திர வேட்கை காலனி ஆதிக்கத்தை உடைத்தது. வர்க்க முரண்பாடு முற்றியது.

சமதர்மக் கருத்து சோசலிச நாடுகளை உருவாக்கின. பனிப்போர் முற்றியது.

நவீன காலனி ஆதிக்கம் உலகமயமாக்கல் எனும் போர்வையுடன் உலகை ஆக்கிரமித்தது.

கணினி தன் ஆற்றலால் உலகை சுருக்கியது. பொருளாதாரம் தேச, மத எல்லைகளைத் தாண்டி மனிதனின் சிறகினை விரித்தது.

மனிதனின் புலம்பெயர்தல் வேகம் எடுத்தது. இனக்கலப்பு தவிர்க்க முடியாதது ஆயிற்று.

மனிதன் மீண்டும் மனிதன் ஆனான். யாதும் ஊரே..யாவரும் கேளிர்!

-ஆதிரன்

You might also like