டக்கர் – மக்கர் பண்ணும் திரைக்கதை!

கனவுலோகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தைத் திரைப்படங்கள் தருவது புதிதல்ல. அன்றும் இன்றும் திரையில் தென்படும் உலகம் அப்படிப்பட்டதுதான். அதில் உண்மையும் யதார்த்தமும் கொஞ்சமாய் கலப்பதே பெரிய விஷயம்.

அப்படிப்பட்ட சூழலில், முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை.

அவை நேர்த்தியாக இருக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த நிபந்தனையும் அவர்களிடம் இல்லை.

சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், ஆர்ஜே விக்னேஷ்காந்த், யோகிபாபு, அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘டக்கர்’ படம் அப்படியொரு முழுமையான கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா?

பையாவை நினைவூட்டும் கதை!

பணம்தான் வாழ்வில் முக்கியம் என்று நினைப்பவர் குணசேகர் (சித்தார்த்). அதனை அடையும் பொருட்டு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட், ஜிம் ட்ரெய்னர், பார் சர்வர் என்று சில வேலைகள் பார்த்துவிட்டு ஒரு விலையுயர்ந்த சொகுசு கார் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார்.

வாடகை டாக்ஸி என்றாலும், அவருக்கு வாய்க்கும் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் ‘காஸ்ட்லி’ வாழ்க்கை வாழ்பவர்கள்.

அப்படித்தான் தற்செயலாக மகாலட்சுமி எனும் லக்கியை (திவ்யான்ஷா கவுசிக்) சந்திக்கிறார். பார்த்தவுடன் காதல் கொள்கிறார். அதனை வெளிப்படுத்த முயற்சிக்காமல் அவ்வப்போது அவரைத் தூரத்தில் இருந்து பார்க்கிறார்.

ஒருநாள் பெண்களைக் கடத்தி விற்கும் / பெற்றோர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காரில் ஏற்றுகிறார் குணா. இறங்குமிடத்தில் போலீசார் அவர்களை விரட்டுகிறது.

பணம் தருகிறேன் என்று சொன்ன ஒரே காரணத்தால் அவர்களைக் காப்பாற்றுகிறார் குணா. அவர்களோ அவரை அடித்துப் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

அதே கும்பல் லக்கியைக் கடத்த முற்படுகிறது; அந்த நேரத்தில், எதேச்சையாக அங்கே குணா வருகிறார். அதில் அவரது கார் கடுமையாகச் சேதமுறுகிறது.

அதன் எதிரொலியாக, சம்பளமே இல்லாமல் பல ஆண்டுகள் பணியாற்ற வேண்டுமென்று மிரட்டுகிறார் கார் உரிமையாளர்; அது போதாதென்று அவரை அடித்து உதைத்து வசை பாடி அவமானப்படுத்துகிறார்.

விரக்தியின் விளிம்பில் இருக்கும் குணசேகர், தற்கொலைக்கு முயன்று தோற்கிறார்; அவமானத்தை விழுங்க முடியாமல், ஏதேனும் ரவுடிகளிடம் சென்று அடி வாங்கிச் சாவது என்று முடிவெடுக்கிறார்.

ஆர்ஜேவாக இருக்கும் நண்பன் (விக்னேஷ்காந்த்) சொன்ன ஒரு இடத்திற்குச் செல்கிறார். அந்த இடத்தில் லக்கியை அடைத்து வைத்திருக்கிறது ஒரு கும்பல். அந்த கும்பலைப் பார்த்தவுடன், தன்னை ஏமாற்றிய ரவுடிகளின் நினைவு குணாவுக்கு வருகிறது.

அதன்பிறகு அவர் அடி வாங்கினாரா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று நகர்கிறது ‘டக்கர்’.

நாயகன், நாயகி, வில்லன், காமெடியன் என்று ஒவ்வொருவருக்கும் கதையில் ஒரு பின்னணி உள்ளது. அது நல்ல விஷயம். நாயகனும் நாயகியும் காரில் பயணிப்பது போல பாதி திரைக்கதை அமைந்திருப்பது லிங்குசாமியின் ‘பையா’வை நினைவூட்டுகிறது. அதுவும் கூட ஓகேதான்.

ஆனால், எடுத்துக்கொண்ட கதைக்கேற்ப காட்சிகளும் திரைக்கதையும் முழுமையாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறதா என்றால் உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது.

மக்கர் பண்ணுதே!

கிராமத்தில் நகரத்தானாக வாழ ஆசைப்படுவது போல சித்தார்த் ஏற்ற குணசேகர் பாத்திரத்தைக் காட்டியிருப்பது நன்று. ஆனால், பணத்தைச் சம்பாதித்தே தீர வேண்டும் என்ற வேட்கையை அதிகப்படுத்துவது போல அக்காட்சிகள் வலுவானதாக இல்லை.

பணம் தான் பிரதானம் என்று நினைக்கும் குணசேகர் கடினமான வேலைகளைச் செய்ய முன்வருவது நல்ல விஷயம். ஆனால், அதிகப்படியான பணம் வரும்படியான வேலைகளை நாடிச் செல்வதை விளக்கும் காட்சிகள் படத்தில் இல்லை.

வில்லன் இடத்திற்கு நேரடியாகச் சித்தார்த் செல்லும்போது, திரைக்கதை ஜிவ்வென்று மேல்நோக்கி நகர்கிறது. ஆனால், அந்த சண்டைக்காட்சியை ஜவ்வாக இழுத்து, வில்லன் கும்பல் நாயகனையும் நாயகியையும் தேடி அலைவதை காமெடி ஆக்கி, இறுதியில் எங்கெங்கோ அலைகிறது திரைக்கதை.

நாயகனும் நாயகியும் ஒன்றாகக் காரில் பயணிக்கும்போது எகிற வேண்டிய திரைக்கதை, அதன்பிறகு மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டது. அந்த இடத்தில் இருவரது எண்ணங்களுக்கும் உள்ள முரண்களை அடிக்கோடிடும் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாதது பெருங்குறை.

இந்தக் கதையில் நாயகியின் தந்தை மற்றும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, நாயகியைக் கடத்தும் கும்பல், வாடகை கார் உரிமையாளர் கேங் என்று மூன்று தரப்பில் இருந்து வில்லத்தனம் வெளிப்பட்டிருக்கிறது. அதனை வைத்து திரைக்கதையில் கபடி விளையாடத் தவறியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்.

கனவிலும் சந்திக்க முடியாத பெண் உடன் ஏழ்மையான பின்னணி கொண்ட ஒரு ஆணுக்குப் பழகும் வாய்ப்பு கிடைப்பதும், அதனூடே அந்த ஆடவனின் மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வெழுச்சி பீறிடுவதும் நல்லதொரு கமர்ஷியல் கதைக்கான அம்சங்கள். அதனைத் திறம்படத் திரைக்கதையில் சொல்லியிருந்தால், எந்நாளும் கொண்டாடத்தக்க கனவுலகமாக ‘டக்கர்’ மாறியிருக்கும்.

சித்தார்த்தின் அந்நியத்தனம்!

தொழில்நுட்ப அறிவு கொண்ட, உலக சினிமாவைத் தெரிந்த நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். அவரது கதைத் தேர்விலும் குறையில்லை. ஆனாலும், அவரைப் பார்க்கையில் நம்மவராக நினைக்க ஏதோ ஒன்று இடையூறாக இருக்கிறது; அந்நியர் என்ற முத்திரை விழுகிறது.

தன்னைக் குறித்து சித்தார்த் கொண்டிருக்கும் பிம்பம், கதாபாத்திரமாக அவர் உருமாறும் மாயாஜாலத்தைத் தடுக்கிறதோ என்று தோன்றுகிறது.

வெற்றிப் படங்களான தீயா வேலை செய்யணும் குமாரு, சிவப்பு மஞ்சள் பச்சை போன்றவற்றிலும் அதனை உணர முடியும். இதனைச் சரி செய்யாவிட்டால் ‘எலைட் வேடங்களில் நடிக்கத்தான் இவர் லாயக்கு’ என்ற பேச்சு பூதாகரமாகிவிடும்.

ஏ பிளஸ் உடல்வாகு கொண்ட திவ்யான்ஷா கவுசிக், ஏற்கனவே ‘மைக்கேல்’ படத்தில் அழகிலும் நடிப்பிலும் அசத்தியிருந்தார்.. இதிலும் அப்படியே.

விஜய், அஜித் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்தால் இன்னும் பெரிதாக அவர் கொண்டாடப்படுவார்.

திவ்யான்ஷாவின் கவர்ச்சிக் காட்சிகள் திரையில் மங்கலாகத் தெரிவதாலேயே படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் நாயகி சிகரெட் புகைக்கும், மது அருந்தும் காட்சிகள் உண்டு.

அப்படிக் காட்டுவது புரட்சி அல்ல என்பதை நிச்சயம் படக்குழு உணர்ந்திருக்கும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் போதைக்கு அடிமையாதல் உடல்நலத்தைப் பாதிக்கும் என்பதைத் தவிர்த்து அவற்றை பேண்டஸியாக அணுகுவது ஒரு வகை மாயைதான்.

வில்லனாக வரும் அபிமன்யு சிங் படுசீரியசாக தோன்றியிருக்கிறார். யோகிபாபுவை அவரது கும்பலுடன் சேர்த்திருப்பது நல்ல உத்தி தான். ஆனாலும், மிகச்சில இடங்களிலேயே நமக்கு சிரிப்பு வருகிறது.

முனீஸ்காந்த் இடம்பெறும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு ‘மிஸ்’ ஆகியிருக்கிறது. விக்னேஷ்காந்த் பேசும் வசனங்கள் கூட ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிப்பூட்டுகிறது.

சொகுசு வாடகை கார் உரிமையாளராக வருபவரை வில்லனாக ஏற்க மனம் மறுக்கிறது.. நாயகியின் தந்தையும், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் ஆங்காங்கே வந்தாலும், அப்பாத்திரங்கள் திரைக்கதையில் முடிக்கப்பட்ட விதம் திருப்திகரமாக இல்லை.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு, ஒரு நல்ல கமர்ஷியல் படம் பார்க்கும் உணர்வை உண்டாக்குகிறது. நாயகியை மிக அழகாகக் காட்டியிருக்கிறது.

உதயகுமாரின் கலை வடிவமைப்பில் பாடல் காட்சிகள் அழகாகத் தெரிகின்றன. மற்றபடி படம் முழுக்க அனைத்து வண்ணங்களும் ஜொலிக்கும்படியான வடிவமைப்பை அவரோ, இயக்குனரோ உருவாக்க முனையவில்லை.

படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் எத்தனை ‘கட்’ செய்யப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், திரையில் கதையைக் கோர்வையாகச் சொல்ல தடுமாறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கவுதம்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கேற்ப அமைந்துள்ளது.

நிரா, மரகத மாலை நேரம், சாகிறேன் பாடல்கள் மனதை வருடும் மெலடிகள் என்றால் ரெயின்போ திரளில், கொய்யாலா இரண்டும் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் துள்ளலுடன் திகழ்கின்றன.

நிச்சயமாக இந்த ஆல்பம் கொஞ்சம் தாமதமாகக் கொண்டாடப்படும் வகையிலானது.

சிறப்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், அவர்களது மிகச்சிறந்த உழைப்பு இரண்டும் இருந்தும் சில படங்கள் சில காரணங்களால் நேர்த்தியை இழக்கும்.

இதில் திரைக்கதை அதில் முக்கால்வாசி வேலையைச் செய்திருக்கிறது.

‘இதுதான் ரசிகர்களுக்குப் பிடிக்கும்’ என்ற எண்ணத்தைத் துறந்துவிட்டு தங்களுக்குப் பிடித்தமானதொரு படத்தை இக்குழு தந்திருக்கலாம்.

முக்கியமாக, நாயகன் சித்தார்த் இதனை அடுத்த படத்திலாவது பின்பற்ற வேண்டும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

  • உதய் பாடகலிங்கம்
You might also like