மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் 60 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய திலக் வர்மா 43 ரன்களும், கேமரன் கிரீன் 30 ரன்களும் எடுத்தனர். ரோகித் சர்மா 8 ரன்களிலும், விஷ்ணு வினோத் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.  

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like