- சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “தமிழ்மொழியில் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை முதலில் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது சிங்கப்பூர் தான். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ ஒருபோதும் பிளவுப்படுத்த முடியாது.
அதோடு இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.