களைகட்டும் ஏற்காடு மலர்க் கண்காட்சி!

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை  அமைச்சர்கள் கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 46வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதோடு, அண்ணா பூங்காவில் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், தேனீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை பார்வையிட்டு ரசித்தனர்.

கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வகை  மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளனர்

மேலும் பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் டாலியா மேரி கோல்ட் ஜுனியா டோரினியம் சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களைக் கொண்டு 10,000 மேற்பட்ட மலர்த் தொட்டிகளை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனையும் அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

You might also like