தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிற நிலையில், இது தொடர்பான சில விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு.
“உயிர்ப்பலிகள் நடந்திருப்பது கள்ளச்சாராயத்தால் அல்ல, ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தால். இந்த விஷச்சாராயம் புதுச்சேரியில் இருந்து விநியோகமாகி இருக்கிறது’’ என்று சொல்லியிருக்கிற டி.ஜி.பி, தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் திருடப்பட்டதாகவும் சொல்கிறார்.
இதையடுத்து அவர் தெரிவிக்கிற கள்ளச்சாராயப் புழக்கம் தொடர்பான புள்ளிவிபரம் அதிர்ச்சி ஊட்டும் விதத்தில் இருக்கிறது.
அவர் தெரிவிக்கிறபடி – கடந்த 2022 ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பதிவாகி இருக்கிற கள்ளச்சாராய வழக்குகள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649.
இந்த ஆண்டில் மே மாதம் வரை பதிவு செய்யப்பட்டிருக்கிற வழக்குகள் மட்டும் 55 ஆயிரத்து 474.
இது தொடர்பாக இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் 55 ஆயிரத்துக்கும் மேல். இதில் பெண்கள் 534 பேர். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் 79 பேர்.
இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட லிட்டர் அளவுக்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்றால் கள்ளச்சாராயப் புழக்கம் மலைக்க வைக்கிறது.
பிடிபட்டதே இந்த அளவுக்கு இருக்கிறது என்றால் புழக்கத்தில் இருந்தது எந்த அளவுக்கு இருக்கும்?
சம்பந்தப்பட்ட மீனவக் கிராமங்களில் இருப்பவர்கள் தொலைக்காட்சிகளில் சொல்கிறபடி பார்த்தால், கள்ளச்சாராயப் புழக்கம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருவது புலப்பட்டிருக்கிறது.
இதில் ஈடுபடுகிற நபர்களும் அந்தப் பகுதி மக்களுக்கு நீண்டகாலமாகவே தொடர்பில் இருப்பவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
இது முன்பிருந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதிருந்தே நடந்திருக்கிறது. ஆட்சி மாறிய பிறகும் அதே விநியோகம் தொடர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யின் அறிக்கைப்படியே இவ்வளவு கைதுகள் நடந்திருக்கின்றன என்றால் உற்பத்தியும் விநியோகமும் எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும் என்பது எளிய கேள்வி.
சில மனிதர்களைக் கைது செய்து, சில ஆதிகாரிகளை இடம் மாற்றம் செய்வதுடன் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை.
உண்மையில் ஓராண்டுக்கு எவ்வளவு பேர் மதுவினால் உயிரிழக்கிறார்கள் அல்லது தங்கள் உறுப்புகளை இழக்கிறார்கள் என்பதைக் கணக்குப் பார்த்தால், பதின் பருவத்துச் சிறுவர்கள், சிறுமிகள் கூடப் பள்ளிக்கூட யூனிஃபார்முடன் மது அருந்துகிற காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் பார்க்கிறபோது, மனதில் ஈரம் இருப்பவர்கள் அதிர வேண்டியிருக்கிறது.
போதை ஒரு பெரும் தொற்றைப் போலப் பால்பேதமற்று அதிகாரபூர்வமாகப் பரவியிருப்பதை உணர வேண்டியிருக்கிறது.
மதுவினால் எத்தனை பெண்கள் விதவைகளாகி இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரங்களைச் சொன்னவர்கள் கூட, ஆட்சி மாறியதும் அந்தப் புள்ளி விபரங்களை மறந்துவிடுகிறார்கள்.
சிலர் மட்டும் காலத்தால் தொலைக்காத நினைவுப் பிழையாக அவற்றை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
விஷச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் கிராமத்திற்கு அமைச்சர் பொன்முடி நிவாரணத் தொகை வழங்கச் சென்றபோது அங்கிருந்த இளைஞர் ஒருவர் ”கள்ளச்சாரயத்தை மட்டுமில்லே.. மதுவையே தடை பண்ணுங்க’’ என்று கேட்டதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் அமைச்சர் அமர்ந்திருக்க – நகர்கிறது அவரது கார்.
அரசால் அங்கீகரிக்கப்பபட்ட ‘டாஸ்மாக்’ போதை,
முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆனால் விநியோகமாகும் ‘கள்ளச்சாராயப்’ போதை,
இவற்றோடு விஷச்சாராயப் போதை என்று இத்தனை வகைப் போதைகள் மக்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் போது, அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அந்த இளைஞரின் குரல் – குறிப்பிட்ட அந்த இளைஞரின் குரல் மட்டுமல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
-யூகி