கர்நாடகா வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம்!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தேசிய அளவில் எதிர்பாராத, அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிவை சுருக்கமாக அலசிவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்.

தென் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகம்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கர்நாடகத்தை பா.ஜ.க. நழுவ விட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

“கிங் மேக்கராக இருப்போம். அடுத்த முதலமைச்சர் நாங்கள் தான்” எனகொக்கரித்த தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் இந்தக் கட்சிக்கு 37 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் தயவால் அந்த கட்சியின் தலைவர் குமாரசாமி ஒரு வருடம் முதலமைச்சராகவும் இருந்தார்.

அளவுக்கு மீறிய நம்பிக்கை, தகுதிக்கு மீறிய தம்பட்டம், வாரிசுகள் ஆதிக்கம் போன்ற காரணங்களால் இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி வீழ்ந்துள்ளது.

பழைய மைசூரு மண்டலம் உள்ளிட்ட தனது தளங்களை காங்கிரசிடம் தொலைத்து களை இழந்து காணப்படுகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.

அந்த கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

கர்நாடக வெற்றியால், காங்கிரஸ் புத்துணர்ச்சி அடைந்துள்ளது.

இந்தத் தேர்தலுக்கு முன்பாக, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் தான் எதிர்க்கட்சிகள் திரள வேண்டும் என்பது அவரது திட்டம்.

அவரது நிலைப்பாட்டை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆர்.ஜே.டி-யின் தேஜஸ்வி யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, பருக் அப்துல்லா போன்றோர் ஆதரித்தனர்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதலமைச்சர், நவீன் பட்நாயக், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதனை ஏற்கவில்லை.

காங்கிரஸ் தலைமையில் அணி வகுக்க அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

ஆனால், ஒரே நாளில், அதாவது, கர்நாடக தேர்தல் முடிவுக்கு பிறகு மம்தாவும், அகிலேஷும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.

அதாவது, காங்கிரஸ் தலைமையை ஏற்க, ஏறக்குறைய சம்மதித்து விட்டார்கள்.

“காங்கிரசுடன் கூட்டாக செயல்படப்போவதில்லை’’ என உரத்த குரலில் சொல்லிவந்த மம்தா, கர்நாடக தேர்தல் முடிவுக்கு பிறகு மனமாற்றம் அடைந்து விட்டார்.

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பலம் வாய்ந்த தொகுதிகளில் போட்டியிடட்டும். அவர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார்’’ என மம்தா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

“அதேபோல் மற்ற பிராந்தியக் கட்சிகள் எங்கு பலமாக உள்ளதோ அங்கெல்லாம் அந்த கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மம்தாவின் கருத்தை அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.

அதாவது, உ.பி. நீங்கலாக பிற மாநிலங்களில் காங்கிரசை ஆதரிக்க அவர் தயாராகி விட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ் ஆகியோர் நிலை இன்னும் தெரியவில்லை.

“400 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தினால், பாஜகவை தோற்கடித்து விடலாம்” என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

-பி.எம்.எம்

You might also like