குடிப்பது மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அரசு அதிகாரபூர்வமாக விநியோகிக்கும் டாஸ்மாக் தாராளமாக எப்போதும் கிடைக்கிறது என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12 வரை போயிருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் கதை தனி.
இத்தனை உயிர்ப்பலிகள் நடந்து அது வெளியே தெரிய வந்த பிறகு தான் மற்றவர்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.
ஆனால், அந்தப் பகுதியில் இருக்கிறவர்கள் விஷச்சாராயம் உள்ளிட்ட பல லோக்கல் சரக்குகள் புதுச்சேரிப் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு வருவது நீண்ட காலமாகவே நடந்து வந்திருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
ஏதோ மலிவுவிலைப் போதைச் சரக்கைப் போல இது தொழிலாக இங்கு நடந்திருக்கிறது.
பத்து ரூபாய் முதல் அறுபது ரூபாய் வரை அதன் மதிப்பு இருந்திருப்பதால், டாஸ்மாக் போய் வாங்கிக் கொடுத்துப் போதை ஏற்றிக் கொள்ள முடியாதவர்கள் உள்ளூரில் விலை மலிவாகக் கிடைக்கும் இவ்வகைச் சரக்குகளை நாடியிருக்கிறார்கள்.
அதே சரக்குகள் சில சமயங்களில் மிதமிஞ்சிப் போகும்போது இப்போது நிகழ்ந்த மாதிரி உயிரையும் விட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகளிலும் பாட்டில்களில் போட்டிருக்கிற விலையை விடக்கூடுதலான விலைக்கு வாங்க வேண்டியிருப்பதைப் பற்றிப் போதையிலும், தெளிந்த நிலையிலும் கலங்கியிருக்கிறார்கள் பல குடிமகன்கள்.
இந்தக் கலக்கத்தை மையப்படுத்தியே மலிவு விலைச் சாராயங்கள் சந்தைக்கு வருகின்றன. அமைதியாக விநியோகமும் ஆகியிருக்கின்றன.
இதை மறைமுகமாக ஆதரித்த நிலையில் காவல்துறையினரும் இருந்திருக்கிறார்கள்.
தற்போது இது தொடர்பாக ஏழு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மதுவிலக்குத் துறை மறுபடியும் மோப்பம் பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த நிகழ்வுக்கு ஒரு தனி நபரை மட்டும் தனித்துக் குற்றம் சாட்டி விட முடியாது.
மலிவுவிலைச் சாராயம் அந்த அளவுக்கு மாநிலங்கள் கடந்த பெரும் போதைச் சங்கிலியாகத் தொடர்ந்து புழங்கியிருக்கிறது. தற்போது வெளித்தெரிய வந்திருப்பது அந்தச் சங்கிலியின் ஒரு புகுதி மட்டுமே. பெரிய அளவிலான தொடர்புச் சங்கிலி அறுபடவில்லை.
டாஸமாக் சரக்குகளின் விலையேற்றமும் சாதாரண அடித்தட்டு மக்கள் மலிவுவிலைச் சரக்குகளைத் தேடிப் போவதற்கு முக்கியக் காரணம்.
போதை எந்த வடிவில் இருந்தால் என்ன, குறைந்த விலைக்குக் கிடைக்கிறதா என்று தங்களுடைய பொருளாதாரம் சார்ந்து அடித்தட்டு மக்கள் யோசிப்பது தான்.
ஆமாம்.. போதையிலும், போதையூட்டுவதிலும் மட்டும் ஏன் சமநீதி இல்லை?
எப்படியோ பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாகப் பத்து லட்சம் ரூபாயை அறிவித்திருக்கிறார்கள்.
மலிவான விலையில் போதையைத் தேடி வாழ்வைத் தொலைத்தவர்களின் உயிரின் மதிப்பைக் கூட்டியிருக்கிறது அரசாங்கம்.
– யூகி