‘பழிக்குப் பழி’ வகையறா கதைகள் எண்பது, தொண்ணூறுகளில் விதவிதமாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கென்று ஒரு திரைக்கதை சூத்திரம் உண்டு.
சாதுவாக வாழும் ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் காடு கொள்ளாத அளவுக்கு மூர்க்கன் ஆனான் என்று நேர்கோடாகக் கதை சொல்வது ஒரு வகை; குற்றங்களை வரிசையாக அடுக்கிவிட்டு நடுவே அதன் பின்னிருக்கும் வன்மத்தைப் பேசுவது இன்னொரு வகை.
இந்த இரண்டாம் வகையறா ‘பழிக்குப் பழி’ திரைப்படங்கள் இன்றும் கூட வந்து கொண்டிருக்கின்றன. அதற்கொரு உதாரணம் தான் ‘தீர்க்கதரிசி’.
ஆனால், சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கும் ஒரு சமூகநீதிப் பிரச்சனையொன்றையும் லேசாகத் தொட்டுச் சென்றிருப்பதுதான் இப்படத்தின் கதை சொல்லலைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
நடக்கப்போவதைச் சொல்பவர்!
சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்கின்றன; அடுத்தடுத்த நாட்களில் அவை செய்திகளாகின்றன.
அவை நடைபெறுவதற்கு முன்னதாகவே, யாரோ ஒருவர் அவற்றை காவல் துறைக்கும் மக்களுக்கும் சுட்டிக்காட்டினால் எப்படியிருக்கும்? ’தீர்க்கதரிசி’ நாயகன் அதையே செய்கிறார்.
பங்களாவொன்றில் தனியாக இருக்கும் நடுத்தர வயதுப் பெண், காரில் செல்லும் தொழிலதிபர், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு வங்கி அதிகாரி, சிலை திருட்டில் ஈடுபடும் ஒரு சமூக விரோதி ஆகியோர் மரணமடையப் போகின்றனர் என்பதனை அடுத்தடுத்த நாட்களில் காவல் துறைக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கிறார் ஒரு மர்ம நபர்.
முன்கூட்டியே அவர் சொல்வதை வைத்துக்கொண்டு, இரண்டு காவல் துறை அதிகாரிகள் (துஷ்யந்த், ஜெயவந்த்) நடக்கப்போவதைத் தடுக்க முயல்கின்றனர். காவல் துறை கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளர் (ஸ்ரீமன்) அவர்களுக்குத் தேவையான விவரங்களை வழங்குகிறார்.
மர்ம நபர் சொல்வது போலவே மரணங்கள் நிகழ, ஊடகங்களில் விஷயம் பெரிதாகி மக்களைச் சென்றடைகிறது. அதையடுத்து, அந்த வழக்கு விசாரணையைக் கையாள ஒரு உயர் போலீஸ் அதிகாரி (அஜ்மல்) நியமிக்கப்படுகிறார். அவரோ, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரைப் பெற்றவர்.
அவருடைய வருகைக்குப் பிறகும், அந்த நபர் முன்கூட்டியே தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.
என்னதான் தோராயமாகச் சில விவரங்களைத் தெரிவித்தாலும், அந்த மர்ம நபர் தொடர்புகொள்ளும் மொபைல் எண் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார் என்பது போன்ற கேள்விகளுக்குச் சரியான பதில்கள் இல்லை.
இதுவே அந்த மர்மநபர் யார்? அவர் ஏன் இந்த தகவல்களை எல்லாம் காவல் துறைக்கும் ஊடகங்களுக்கும் தருகிறார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
அந்த நபரின் முகம் தெரிய வரும்போது, இக்கதையும் ஒரு முடிவுக்கு வருகிறது.
‘தீர்க்கதரிசி’ எனும் தலைப்புக்கேற்ப, சுமார் 75 சதவீத திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முடிச்சு விடுபடும் இடம் சட்டென்று சொல்லப்பட்டிருப்பது, ஒட்டுமொத்தமாகத் திரண்ட ‘த்ரில்’லை பொசுக்கென்று ஆக்கிவிடுகிறது.
குழப்பும் முகங்கள்!
‘தீர்க்கதரிசி’யின் மாபெரும் பலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான நடிகர்கள். ஆனால், அதுவே அதன் பலவீனமாகவும் உள்ளது. காரணம், திரையில் வரும் எந்த நபரைப் பின்தொடர்ந்து செல்வது என்ற குழப்பம் ரசிகர்களைப் பீடிப்பதுதான்.
தீர்க்கதரிசியாகத் தகவல்களை அள்ளிவிடும் நபர் சத்யராஜ் என்பது அவரது குரலிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால், திரையில் அவர் கடைசி ரீலில் மட்டுமே தலைகாட்டுகிறார்.
துஷ்யந்த், ஜெயவந்த் இருவரும் சேர்ந்தே திரையில் வந்து போனாலும், இடைவேளைக்குப் பிறகு துணை நடிகர்கள் போன்றே அவர்களது இருப்பு உள்ளது.
ஒரே குடும்பத்தினராக ஸ்ரீமன், மோகன்ராம், தேவதர்ஷினியைக் காட்டினாலும், அவர்களது பாத்திரங்களுக்கென்று தனி இடம் தரப்படவில்லை.
அஜ்மல்தான் கதையில் பிரதானம். அதற்கேற்ப, அவர் ஹீரோயிசம் காட்டவும் திரையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்வினையாற்றும் வகையில் அவருக்கான முகபாவனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
நரேன் போன்றவர்கள் ஒரு சில ஷாட்கள் மட்டுமே வந்து போயிருக்கின்றனர். போலவே சத்யராஜ், பூர்ணிமா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக்கும் விரிவானதாக அமையவில்லை.
இவ்வளவு ஏன், சத்யராஜின் குரல் முன்பாதியில் ஒலிப்பது மட்டுமே கிளைமேக்ஸில் அவரது இருப்பை நியாயப்படுத்தும் என்று நினைத்திருக்கிறது ’தீர்க்கதரிசி’ குழு. கண்டிப்பாக அதனைச் சரி செய்திருக்க வேண்டும்.
பி.ஜி.மோகன் கதைக்கு பி.சதீஷ்குமாரின் திரைக்கதை எழுதித் தயாரிக்கவும் செய்திருக்கிறார் பி.சதீஷ்குமார். படத்தை பி.ஜி.மோகன், எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இருவரும் இயக்கியிருக்கின்றனர்.
திரைக்கதை பரபரவென்று நகர்கிறது என்பதைக் காட்ட, ஜெ.லக்ஷ்மணின் கேமிரா குடுகுடுவெனப் பயணிக்கிறது. ‘பாஸ்ட் கட்’ உத்தியில் பல காட்சிகளை செதுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரஞ்சித்.
அவற்றின் ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்தியிருக்கிறது ஜி.பாலசுப்பிரமணியமின் பின்னணி இசை. அவரது இசையில் காவல் துறையின் பெருமை பேசும் பாடலொன்று பின்பாதியில் வருகிறது; பார்வையாளர்களைப் பொறுத்தவரை அது ஒரு வேகத்தடை.
ஒரு கமர்ஷியல் படம் என்ற வகையில், அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்விதமாகவே கதை நகர்கிறது. ஆனால் நிகழ்ந்த மரணங்களின் பின்னணியோ, அவற்றுக்கிடையிலான தொடர்போ ரொம்பவே பலவீனமாகக் கையாளப்பட்டுள்ளது.
மர்ம நபர் ஏன் தன்னைக் குறித்த தகவல்களைத் தெரிவிக்க மறுக்கிறார் என்பது இன்னும் வலுவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். போலவே சத்யராஜ், பூர்ணிமா உள்ளிட்டோரை நடப்புக் கதையிலும் ஆங்காங்கே நடமாட விட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால், திரைக்கதையில் சஸ்பென்ஸுக்கும் சர்ப்ரைஸுக்கும் குறிப்பிட்ட அளவில் வித்தியாசம் உண்டு. அவர்களது ‘திடீர்’ எண்ட்ரி இக்கதைக்கு நியாயம் சேர்க்கவில்லை.
ஒரு மையப்புள்ளி!
‘தீர்க்கதரிசி’ திரைக்கதையில், நடந்த மரணங்கள் அனைத்தும் புள்ளிகளாகவே தெரிகின்றன என்று ஸ்ரீமன் பாத்திரம் சொல்லும்;
அதற்கு, அந்த புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் போட வேண்டியதுதானே என்று மோகன்ராமும் தேவதர்ஷினியும் பதில் சொல்வதாக வசனம் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த கோலத்தின் மையப்புள்ளியாக, ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட ஒரு இளங்காதலனின் கதை சொல்லப்பட்டுள்ளது.
அந்த நபர் வேறு சாதிப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தவர்.
அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதுதான் திரைக்கதையின் மையம். அதனை இன்னும்கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
அது நிகழ்ந்திருந்தால், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பாவெல் நவகீதனின் ‘வி1’ போல ‘தீர்க்கதரிசி’யும் பெரிய வரவேற்பை ஈட்டியிருக்கும். தற்போது ஒரு வித்தியாசமான பழி வாங்கும் கதை என்றளவிலேயே அதன் அடையாளம் நின்று போயிருக்கிறது!
– உதய் பாடகலிங்கம்