ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி!

உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உளவுத் துறையினர் குவிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ ஐ.எஸ்.அமைப்பினர் காத்திருக்கும் தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதும், எந்த நேரத்திலும் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் மறைந்திருப்பதை கண்டுபிடித்த ராணுவத்தினர் அங்கு கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தனர் எனவும் 

பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிவரும் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தவும் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடக்க உள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கில்தான் இந்த ஊடுருவலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காஷ்மீரின் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலை முதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதி வரையிலும் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியிலும் ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

You might also like