மருத்துவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்!

கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்குச் சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்யும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போராட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தினார். அப்போது மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார்

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் காவல்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும், மேலும் இது தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதார துறையினர் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தில் கூடுதல் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மேற்பார்வையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை செய்யப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். 

You might also like