இயற்கையும் அதில் விரவியிருக்கும் பசுமையும் வெறுமனே தோற்றத்தினால் நம் கண்களை வசீகரிப்பதில்லை. மாறாக, அது நம் மனதுக்குள் ஊடுருவி அதில் பாவியிருக்கும் எதிர்மறை யாவற்றையும் விரட்டிவிடும் தன்மை கொண்டது.
அதனாலேயே, இயற்கை எனும் வார்த்தையை இணையத்தில் தேடுவது கூட இனிமை பயக்கிறது. என்ன, இது நம்ப முடியாததாகத் தெரிகிறதா?
இல்லாமை தரும் புரிதல்!
ஒரு சோற்றுப் பருக்கையின், தொண்டையை நனைக்கும் கையளவு நீரின், நுரையீரலை நிரப்பும் மூச்சுக் காற்றின் அருமை, அதாவது கிடைத்துவிடாதா என்று உயிருக்காக ஏங்கும் சூழலில்தான் புரியும்.
கிட்டத்தட்ட அந்த ஏக்கத்தை மனம் அனுபவிக்கும்போது, இயற்கையின் அழகும் செழிப்பும் நம்மில் உருவாக்கும் மாற்றங்கள் பிடுபடும்.
மனம் முழுக்க வெறுமையும் ஆற்றாமையும் நிரம்பியிருக்க, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பும் ராக்கெட் போல இன்னும் சில நொடிகளில் தலைக்குள் இருக்கும் மூளை வெளியே சீறிப்பாய்ந்துவிடுமோ என்ற பயம் தோன்றும்.
ஆத்திரமும் அடங்காவெறியும் எந்த வழியில் செல்லலாம் என்று குழம்பித் தவிக்கும் நிலையில், எதைச் செய்தாலும் மீள முடியாத சரிவுக்குள் புதையும் எண்ணம் ஏற்படும்.
இம்மாதிரியான நேரங்களில் பேரொளி கூட பார்வையைப் பறிக்கும் பாதகம் என்றே படும். இந்த நேரத்தில்தான் இயற்கை இதம் காட்டுகிறது.
ஜன்னல் வழி கசியும் சூரிய ஒளியும் மெல்லத் தலை நீட்டும் சாலையோரச் செடிகொடிகளும் அதிலிருக்கும் பூக்களும் நம்மை ஊடுருவுகின்றன. பசுமையான சூழலும் பரந்த வானமும் பார்க்கப் பார்க்க நம்பிக்கை தருகின்றன.
மெல்லக் கால் பரப்பி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்கையில், நடை பயிலும் குழந்தையின் மனப்பாங்கும் நம்மில் பரவும். அப்போது, உள்ளிருக்கும் எரிச்சலும் ஆற்றாமையும் கோபமும் தாபமும் பொசுங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
நடை பழகு!
உடைந்த மனதை எந்தக் கீறல்களும் இன்றி ஒட்டவைக்க சிறந்த மாமருந்து இயற்கை மட்டுமே! கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு சிறிது ஆசுவாசம் தருவது இயற்கையோடு உறவாடும் நேரம்தான்.
விலையுயர்ந்த வாகனங்களில் வந்திறங்கும் ட்ராக் சூட்டும் டிசர்ட்டும் அணிந்த அங்கிள்களும் ஆண்ட்டிகளும் பூங்காக்களில் உலாவ ஆலாய்ப் பறப்பதற்குக் காரணமும் அதுதான்.
அந்த பொழுதுகளில் அவர்களது முகத்தைப் பார்த்தால் வேட்கையோடு புசிக்கும் விலங்கின் ஆவேசம் தென்படும். அவர்களைப் பொறுத்தவரை, அதுவே பசியாறும் வேளை.
செயற்கையைச் சுவாசிப்பவர்களுக்கு இயற்கையைத் தவிர வேறேது மாற்றம் தர இயலும்?
இதற்கும் நேரமில்லை என்று சோம்பேறித்தனப்படுபவர்கள், வீடுகளிலும் அலுவலகங்களிலும் பசுமையைக் குறுக்கி நறுக்கி ‘போன்சாய்’ ஆக்குவார்கள்.
அருவிகளையும் காடுகளையும் சித்திரங்களாக்கி சுவரை நிறைப்பார்கள்.
இயற்கையோடு சேர்ந்திருப்பவர்களுக்கு இதெல்லாமே ஆறாவது விரல் போன்று அனிச்சையாகப் படும்.
கொரோனாவும் இயற்கையும்!
மைக்ரோ-ஓவனுக்குள் அடைபட்டுக் கிடப்பது போல, ஏதேனும் ஒரு அறைக்குள் அலுவல் ரீதியாகவோ, உறவு ரீதியாகவோ, களிப்பு சார்ந்த காரணங்களுக்காகவோ சிறைபட்டுக் கிடந்தவர்களையும் வெறுப்புறச் செய்த பெருமை கொரோனா தந்த வெறுமைக்கு உண்டு.
வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்ற கட்டுப்பாடு பலரையும் இயற்கையை நோக்கி ஏங்க வைத்தது. மனிதர் தோற்றுவித்த செயற்கையாவும் அர்த்தமிழந்துபோகும் தருணத்தைக் காட்டிக் கொடுத்தது.
கடந்த ஜுன் மாதம் ஜப்பானிலுள்ள டோக்கியோ நகரில் சுமார் 3,000 பேரிடம் இயற்கை தரும் ஆசுவாசம் குறித்து ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஆண்களும் பெண்களும் இதில் சரிபாதி.
கவலை, தனிமை, சுயமரியாதை, அழுத்தம், வாழ்க்கை திருப்தி உட்பட மன ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் இதில் கேட்கப்பட்டன.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘எக்காலஜிகல் அப்ளிகேஷன்ஸ்’ (Ecological Applications) எனும் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், தொடர்ச்சியாக இயற்கையோடு உறவாடுகிறவர்களுக்கு மனநலம் சீராக இருப்பது தெரிய வந்தது. அதோடு, அவர்களது வெறுமையும் கவலையும் ஜன்னல் வழியே இயற்கைக் காட்சிகளை ரசிப்பதால் குறைவதும் கண்டறியப்பட்டது.
கொரோனா காலத்தில் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தாலும், இயற்கைக்கும் மனதுக்குமான நெருக்கமான தொடர்பு இதில் பட்டவர்த்தனமாகத் தெரிய வந்திருக்கிறது.
இயற்கையை எவ்வளவு நேரம், எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை ரசிக்க வேண்டுமென்ற கேள்விகளுக்கு இந்த ஆய்வில் பதில் கிடைக்கவில்லை.
“ஆனால், ஒருவர் 7 முதல் 10 நிமிடங்கள் வரை இயற்கையை ரசிக்கும்போது அவரது மனஅழுத்தம் மறைகிறது” என்கிறார் அமெரிக்காவின் வடக்கு ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் பொதுசுகாதாரத் துறை பேராசிரியர் எரின் லார்கோரைட்.
கடற்கரை அல்லது ஏரி, குளம், ஆற்றங்கரையில் இருந்தவாறு நீர்நிலையை ரசிப்பது, எழில்சூழ் பாதையில் நடப்பது அல்லது பூங்காவைச் சுற்றி வருவது, வீட்டு முற்றத்தில் தோட்டமிடுவது போன்றவற்றினால் இயற்கையோடு உறவாட முடியும் என்பது எரின் தரும் பதில். வீட்டுக்குள் பசுமையான செடி, கொடிகள் வளர்ப்பதும் கூட நல்லது என்கிறார்.
கடந்த ஆண்டு சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) எனும் இதழில் வந்த விமர்சனக் கட்டுரையொன்றில், இயற்கையை ஆனந்தமாக ரசிக்க நேரம் செலவழிப்பதன் மூலமாக நல்ல தூக்கம், வாழ்க்கைச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளல், வாழ்வு நோக்கத்தைத் திட்டமிடல், மன அழுத்தக் குறைவு என்று பல விஷயங்கள் கிடைப்பதாகச் சொல்லப்பட்டது.
மிகச்சமீபத்தில் மேற்கத்திய நாடுகளின் மூலமாக இந்த ஆய்வு முடிவுகள் நம் பார்வைக்கு வந்திருக்கின்றன.
நாம் தான் இயற்கை!
‘நான் கடவுள்’ என்பதுபோல ‘நாம்தான் இயற்கை’ என்ற வாழ்க்கைமுறையே நம் மண் சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. அதிலிருந்து விலகும்போதே மழையும் வெயிலும் குளிரும் நமக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறது.
இயற்கையை ரசிப்பதென்பதை நாம் தனியாக மேற்கொள்ள வேண்டியதில்லை. குழந்தைக்கு நிலாவையும் மரத்தையும் நாயையும் நரியையும் ஊட்டிச் சோறூட்டும் தாய், எதையும் செயற்கையாகச் செய்வதில்லை.
சூரியனையும் நிலவையும் பார்ப்பதற்காகவே வானம் நோக்கியவர்கள் நாம். வனம் செல்வதென்பது நம் வாழ்வின் ஒரு பகுதி. காடுலா, மலையேறுதல் என்று அவையெல்லாம் சாகச ஆசைகளாகிவிட்டன.
வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டதெல்லாம் வேண்டுமென வேண்டும் சுழற்சி தொடங்கியிருக்கிறது. கான்கிரீட் பரப்புக்கு வெளியிலிருக்கும் இயற்கை படைப்புகள் மீது மனிதனின் கவனம் பதித்திருக்கிறது.
மேற்கத்திய உலகுக்கு வேண்டுமானால், இயற்கை என்பது மனித வாழ்வுக்கு வெளியிலிருக்கும் ஒரு அம்சமாக இருக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரை, இயற்கை என்பது நம்மில் ஒரு பகுதிதான். சொல்லப் போனால், நாம் தான் இயற்கை. நம்மை நாமே ரசிக்க ஏன் யோசிக்க வேண்டும்!?
-உதய் பாடகலிங்கம்