தமிழ் ஸ்டுடியோ நடத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘பயிற்சிப் பட்டறை’ உண்மையில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த கொடை என்று தமிழ் ஸ்டுடியோ நடத்திய பயிற்சிப் பட்டறை பற்றி எழுதியிருக்கிறார் அருண்.மோ.
ஒருநாளில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று எப்போதும் எதிர் கேள்வி கேட்பவர்கள் ஒருபோதும் ஒன்றையும் கற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் கற்றல் என்பது ஏதோ ஒருநாளில்தான் தொடங்குகிறது .
தவிர இப்படி கேள்விக்கேட்கும் அனைவருக்கும் நேற்றைய வகுப்பையே பதிலாக மாற்றினார் இயக்குநர் வெற்றி மாறன். அதி அற்புதமான மாஸ்டர் கிளாஸ்.
இந்தியாவில் இப்படி ஒரு ஒருநாள் பயிற்சி பலரது வாழ்க்கையை மாற்றுமேயானால் அது தமிழ் ஸ்டுடியோ நடத்தும் பயிற்சிகளில் மட்டுமே சாத்தியம்.
அதற்கு முக்கிய காரணம் பயிற்சியை நடத்தும் வெற்றி மாறன் போன்ற ஆளுமையும், அதில் பங்கேற்க வரும் பார்வையாளர்களின் ஆத்மார்த்த சினிமா உணர்வும்.
கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல் இரண்டையும் நேசிக்கும் அன்பு நிறைந்த ஆளுமைகள் தமிழ் ஸ்டுடியோவிற்கு அளிக்கும் ஆதரவே இதற்கு காரணம்.
நேற்றைய வகுப்பில் இயக்குநர் வெற்றி மாறன் உண்மையில் கற்பித்தலின் உச்சம் தொட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பங்கேற்ற ஒவ்வொரு பார்வையாளர்களும் பயிற்சி முடிந்ததும் எனக்கு கைக்கொடுத்து அன்பை பகிர்ந்தார்கள். ஓயாமல் நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
எவ்வித பங்களிப்பும் இல்லாமல் வெளியில் இருந்து ஏளனம் பேசுக் யாரையும் கண்டுக்கொள்ளாமல் நாம் நம்முடைய வேலையை தொடரவேண்டும் என்பதையே தமிழ் ஸ்டுடியோ நடத்தும் எல்லா பயிற்சிப்பட்டறை முடிவிலும் பங்கேற்ற நண்பர்கள் எனக்கும் சொல்லும் நன்றி உணர்த்துகிறது.
நிகழ்காலத்தில், அரசியல் சூழலில் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிசம். அவர்போல் அரசியல் சினிமா, அது சார்ந்த விவாதங்களை கிளப்பும் ஆளுமை வெகு குறைவு.
ஒரு அரண் போல நின்று தமிழ் சினிமாவை நல்ல பாதையில் மடைமாற்றும் பேராளுமை வெற்றி மாறன். நேற்றைய வகுப்பில் தான் எப்பேற்பட்ட ஆளுமை என்பதை நிரூபித்தார்.
ஒரு கேள்விக்கும் கூட அஞ்சாமல் மிக துணிச்சலாக நேர்மையாக பதில் அளித்தார். அவர் அடுத்த வகுப்பில் சின்மாவையும் அரசியலையும், இலக்கியத்தில் இருந்து சினிமா என்பதையும் மிக நேர்த்தியாக சொல்லிக்கொடுத்தார்.
இனி ஒருபோதும் ஒருநாளில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்காதீர்கள். என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிடுங்கள்.
நேற்றைய வகுப்பு பலரது வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணும். எல்லாருக்கும் அன்பும் நன்றியும் என்று நெகிழ்ந்து எழுதியுள்ளார் தமிழ் ஸ்டுடியோ அருண் மோ.