டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4
நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி….
பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக பக்குவமாக நடந்துகொள்வது,
அதே நேரத்தில் முடிவுகளில் தன்னை கடுமையாக ஆட்படுத்தி நடைமுறைப்படுத்தி மக்களுக்கு அதன் நல்ல விளைவுகளை காண்பிப்பது, கிராம மேம்பாடு பற்றிய கனவை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்துவது,
அனைவரையும் செயல்பாட்டுக்களத்தில் வைத்திருப்பது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக காசு பார்க்கும் எண்ணம் இல்லாமல் செயல்படுவதுதான் அவரின் தலைமைக்கு மெருகூட்டி உள்ளது.
ஒன்றியக் குழுவில் உறுப்பினராக இருக்கும் திருமதி.பூமதி வரதராஜன் கூறினார், நான் இந்த கிராமப் பஞ்சாயத்துடன் இணைந்து பணி செய்கின்றேன்.
காரணம் இந்த ஊரில் இருந்த பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தியாக உணர்வுடன், அனைவரையும் அரவணைத்து, காசுக்கு ஆசைப்படாது, சேவையில் தோய்ந்து எந்தவித ஆணவமும் இல்லாது கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் சென்று பணி செய்யும் தலைவராக அருள் ராஜேஸ் இருப்பதால், இந்தப் பஞ்சாயத்து என் நிதியை பகிர்ந்து கொடுத்துக் கொண்டுள்ளேன்.
இவர் உயர்வான சிந்தனையைக் கொண்டிருப்பதுதான் என்னைப் போன்றவர்களை இந்தப் பஞ்சாயத்து ஈர்ப்பதற்கான காரணம்.
தன்னை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக நிறுத்திக் கொள்வது அனைவருக்கும் அவருடன் பணி செய்ய பிடிக்கின்றது.
இவ்வளவு சாதிய வன்மம் இருந்த ஊரில் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்றால் பண்பட்ட தலைமைதான் காரணம் என்றார்.
அந்தக் கிராமப் பஞ்சாயத்தில் பஞ்சாயத்து வலுவாக மக்கள் பங்கேற்புடன் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதிலும் ஒரு அறக்கட்டளை உருவாகி பஞ்சாயத்து நிர்வாகத்தில் புதுமை சேர்த்துள்ளது.
பொதுப்பள்ளிகள் சீரடைவது ஏழைகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் பஞ்சாயத்துடன் பணியாற்றுவது, கிராமசபைக்கு வருவது அனைத்தும் வித்தியாசமானது.
அதேபோல் கூட்டுறவு சங்கமும் இங்கு வலுவாக மக்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்தில் மட்டும் 9 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடி ஏழைகளுக்கு நடந்துள்ளது.
பண்டித நேரு இந்தியாவில் முதல் பஞ்சாயத்து ராஜ்யம் அமைக்கும்போது தன் உரையில் கூறினார் “எந்தக் கிராமத்தில் பஞ்சாயத்தும் பள்ளிகளும், கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறதோ அந்த கிராமம் மேம்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை” என்று.
இதை நம்மால் முத்துகாபட்டி பஞ்சாயத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டார், அவருக்கு ஒரு பார்வை, கடப்பாடு தியாக உணர்வு, மக்கள் மேல் நம்பிக்கை இருப்பதால் அனைத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு தலைவன் உருவாகின்றபோது, அந்தத் தலைவன் தனக்கான குணாதிசயங்களை வெளிக்காட்டும்போது மக்கள் தங்கள் தேடிய தலைவர் இவர்தான் என்று கண்டுபிடித்து விடுகின்றனர்.
அந்தத் தலைவரும் மக்கள் தலைவராக, மக்களை ஆளும் தலைவராக இல்லாமல் மக்களுடன் இணைந்து செயலாற்றும் தலைவராக உருவாகிவிட்டால், அந்த இடம் குட்டிக் குடியரசாக மாறிவிடுகிறது. அதைத்தான் நம்மால் முத்துகாபட்டியில் பார்க்க முடிந்தது.