தி கேரளா ஸ்டோரி – வெறுப்பை விதைக்கும் வசனங்கள்!

மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அழுத்தமாகப் பேசும் எந்தவொரு படைப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதுவும், எளிதாக மக்களைச் சென்றடையும் திரைப்படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அதனாலேயே, இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லர் சர்ச்சைக்குள்ளானது. அதே தொனியில்தான் முழுப்படமும் அமைந்திருக்கிறதா?

சிறையில் இருக்கும் நாயகி!

ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கும் நாயகி தான் கடந்து வந்த பாதையைச் சொல்வதாகத் தொடங்குகிறது ‘தி காஷ்மீர் ஸ்டோரி’ திரைக்கதை.

மனித வெடிகுண்டு என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளாலும், ஆப்கானிஸ்தான் காவல்துறையினராலும் குற்றம்சாட்டப்படுகிறார் பாத்திமா.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் எப்போது சேர்ந்தார் என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, தான் எப்படி அதில் சேர்ந்தேன் என்று சொல்லத் தொடங்குகிறார்.

பாத்திமாவின் இயற்பெயர் ஷாலினி. தாய், பாட்டியோடு திருவனந்தபுரத்தில் வசித்தவர். பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு காசர்க்கோடில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்கிறார்.

விடுதி அறையில் ஆசிபா, கீதாஞ்சலி, நிமா வர்கீஸ் என மூன்று பெண்கள் அறிமுகமாகின்றனர். அவர்களோடு நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார்.

அந்த நாட்களில் இஸ்லாம் பற்றி தன் தோழிகளோடு பேசத் தொடங்கிறார் ஆசிபா.

நிமா அதில் ஆர்வம் காட்டாமல் போக, கீதாஞ்சலியும் ஷாலினியும் அவரது பேச்சால் ஈர்க்கப்படுகின்றனர். ஆசிபா அறிமுகப்படுத்தும் நபர்களோடு நட்பு பாராட்டுகின்றனர். ஒருகட்டத்தில் அது காதலாக மாறுகிறது.

தங்களது காதல் திருமணத்தில் முடிய, ஷாலினி மதம் மாற வேண்டுமென்கிறார் காதலர் ரமீஸ்.

அதற்கு ஷாலினி சம்மதித்தாரா? அதன்பின் அவர் எப்படி ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்ந்தார்? சிறையில் இருந்து அவர் விடுதலையானாரா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘தி காஷ்மீர் ஸ்டோரி’.

வசனங்களின் வழியே..!

ஷாலினியாக அடா சர்மா, கீதாஞ்சலியாக சித்தி இத்னானி, நிமா மேத்யூஸாக யோகிதா பிஹானி, ஆசிபாவாக சோனியா பலானி, ஷாலினியின் தாயாக தேவதர்ஷினி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் தலைகாட்டிய காரணத்தால் அடா சர்மாவும், ‘வெந்து தணிந்தது காடு’ மூலமாக சித்தி இத்னானியும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாம்.

அடாவைச் சுற்றியே மொத்த திரைக்கதையும் நகர்வதால், அவரது நடிப்பு பிரதான இடத்தை வகிக்கிறது.

அதற்கேற்ப, அவரும் திறம்பட அப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். இதர நடிகர், நடிகைகளின் இருப்பும் கச்சிதமாக அமைந்துள்ளது.

பிரசாந்தனு மொகபத்ராவின் ஒளிப்பதிவும், பிஷாக் ஜோதியின் பின்னணி இசையும் காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருக்கின்றன.

முன்பின்னாக நகரும் திரைக்கதை புரியாமல் குழம்புவதைத் தவிர்க்கும் வகையில் சீர்மையைக் கொண்டிருக்கிறது சஞ்சய் சர்மாவின் படத்தொகுப்பு.

விரேஷ் ஸ்ரீவல்சா, பிஷாக் ஜோதியின் இசையில் பாடல்களும் கூட சட்டென்று நம்மைக் கவர்கின்றன.

எல்லாம் சரி, படத்தின் எழுத்தாக்கம் எப்படியிருக்கிறது?

இப்படத்தில் நிறைந்திருக்கும் சிறப்பான நடிப்பையும் தொழில்நுட்ப அம்சங்களையும் நம் மனதில் பதியவிடாமல் செய்வதே திரைக்கதை வசனத்தின் பணியாக உள்ளது.

அந்த அளவுக்கு வசனங்களில் இஸ்லாமிய வெறுப்பு நிறைந்துள்ளது. தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, சூர்யபால் சிங் உடன் இணைந்து எழுத்தாக்கம் செய்திருக்கும் இயக்குனர் சுதீப்தோ சென் மட்டுமே இதற்கான முழுப்பொறுப்பை ஏற்க வேண்டியவர்.

எந்த மதம் உயர்ந்தது என்று நான்கு பேர் அரட்டையடித்தாலே பிரச்சனை முளைக்கும். அப்படியிருக்க, ‘தி கேரளா ஸ்டோரி’யில் அந்த தொனியிலேயே பெரும்பாலான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

அவை எங்குமே ‘ம்யூட்’ செய்யப்படவில்லை. அதுவே, படம் உருவாக்கப்பட்டதன் பின்னிருக்கும் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

’தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லர் வெளியானபோதே, இது ‘காஷ்மீர் பைல்ஸ்’ படம் போல இஸ்லாமிய வெறுப்பைக் கொட்டுவதாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால், காட்சி மொழியின் வாயிலாக அதனை செய்யாமல் முழுக்க வசனங்களின் வழியே அதைச் செயல்படுத்தியுள்ளது இப்படம்.

முழுக்க வெறுப்பு!

‘தி கேரளா ஸ்டோரி’ நாயகிகளில் மூவர் நவநாகரீக ஆடைகள் அணிந்து மால் ஒன்றுக்குச் செல்வதாக ஒரு காட்சி உள்ளது.

அப்போது, அவர்கள் சில நபர்களால் மானபங்கப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு, ஹிஜாப் அணிந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்று சொல்கிறார் அவர்களது தோழி.

இன்னொரு காட்சியில், பொதுவுடைமைச் சித்தாங்களைப் பின்பற்றுபவர்களின் வாரிசுகள் இந்து புராணங்களை, இதிகாசங்களை அறியாமல் வளர்வதாலேயே பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்சொன்ன இரு காட்சிகளே இப்படம் பேசும் அரசியல் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைக்கும்.

அதையும் தாண்டி, கேரளாவிலுள்ள இந்து, கிறித்துவப் பெண்கள் மதம் மாறி தம் கணவரோடு சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதாகச் சொல்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’.

‘லவ் ஜிகாத்’ தொடர்பான செய்திகள் உட்படப் பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார் இயக்குனர் சுதீப்தோ சென்.

அதனை உறுதிப்படுத்த, கிளைமேக்ஸில் இக்கதை உண்மையானது என்று நிறுவவும் முயல்கிறார்.

இக்கருத்தாக்கத்தால், இத்தனை நாள் வரை நிலவி வரும் மத நல்லிணக்கம் கேள்விக்குள்ளாகவே வாய்ப்புகள் அதிகம். அதுவே, இப்படத்தை நாம் பார்க்கிறோமா இல்லையா என்பதையும் தீர்மானிக்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like