வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது.
விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப் பேசப்படுகிறது.
உண்மையில், அரசுப் பள்ளிகள் மூலம் பல முக்கிய முன்னெடுப்புகளை அரசு செய்துவருவதால், அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க எல்லாத் தரப்புப் பெற்றோர்களும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் – வசதியானவர்கள் உள்பட. ஆனால், அந்த வெற்றியை நோக்கி நகர அரசு இன்னும் பல பணிகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் சிறப்புகள்:
ஐந்து வயது நிறைவடைந்த குழந்தைகள் அனைவரையும் அருகமைப் பள்ளியில் சேர்ப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டுவருகிறது.
இடைநின்ற, இடம்பெயர்ந்த மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளில் மீண்டும் சேர்க்கவும் கவனம் செலுத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. வழக்கமாகத் தனியார் பள்ளிகளில்தான் இது ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்படும்.
அதேவேளையில், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நோக்கமும் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நோக்கமும் ஒன்றல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிப் படிப்பில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குதல், இளநிலைத் தொழிற்கல்விப் பட்டப்படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்குதல், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குதல் எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
காத்திரமான விமர்சனங்கள்:
எனினும், கடந்த 40 ஆண்டுகளாக, தனியார் ஆங்கிலவழிக் கட்டணப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கியதும் அரசுப் பள்ளிகளை ஏழைகளின் பள்ளிகளாக்கியதும் ஆட்சியாளர்கள்தான் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
பள்ளிகள் தேவைப்படாத இடங்களில்கூட தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதும் தொலைவில் உள்ள குழந்தைகளை அழைத்துவர பள்ளி வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய வழிவகுத்தன.
தனியார் பள்ளிகளின் பெருக்கத்தால் ஆங்கிலவழிக் கல்வி குறித்த அதீத நம்பிக்கைகள் நடுத்தர மக்களிடம் விதைக்கப்பட்டன.
தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள், பள்ளி வாகனங்கள் போன்ற வசதிகள் உள்ளன. பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகள் அதிகமான மதிப்பெண் விகிதமும் தேர்ச்சி விகிதமும் பெற்றுவருகின்றன.
இது போன்ற காரணங்களால் ஓரளவு வசதியுள்ள பெற்றோர்கள்கூட தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் சூழல் உருவானது.
கல்விக் கொள்கையில் ஏற்பட்ட வரலாற்றுப் பிழையால், அரசுப் பள்ளிகள் வசதியான பெற்றோர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது.
அரசின் பொறுப்பு:
கல்வியில் சிறந்த நாடுகளில் அரசின் பொறுப்பில்தான் கல்வி உள்ளது. ஆனால், நம் நாட்டிலோ குடும்பத்தில் இரண்டு பேர் பாடுபட்டால்தான் தனியார் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும் என்கிற நிலை உள்ளது.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதில் எக்குறையும் நேர்ந்துவிடக் கூடாது என்று கருதுகிறார்கள்.
இதற்காகவே கல்விச் செலவு எனும் பெரும் பொருளாதாரப் பாரத்தைச் சுமக்கிறார்கள். இந்நிலையில், அனைவருக்கும் தரமான, சமமான கல்வியும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியில் நடந்த வரலாற்றுப் பிழைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளிகளில் படித்த பிள்ளைகள் பலர், அரசுப் பள்ளிகளை நோக்கி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்படி இல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வாய்ப்புள்ளவர்களும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை இயக்கத்தின் வெற்றி என்பது அதுவாகத்தான் இருக்க முடியும்.
ஆங்கில மாயை: ஆங்கிலவழிக் கல்வி மோகமும் பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதற்கான முதன்மையான காரணமாக உள்ளது.
இன்று தனியார் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலவழியில் கற்பிக்கும் அளவுக்கு மொழிப் புலமை வாய்ந்தவர்கள் என்று கூற முடியாது. பெயரளவிலான ஆங்கிலவழிக் கல்வியால் குழந்தைகளுக்கு முழுமையான புரிதல் கிடைப்பதில்லை.
கல்வியில் சிறந்த நாடுகள் தாய்மொழிக் கல்வியால் பெற்ற பயன்களை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் டெல்லி, பிஹார், ஹைதராபாதில் 2016 மற்றும் 2020க்கு இடையில் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி குறித்த ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தியது.
ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பினும் குழந்தைகளிடம் புரிதலை உருவாக்கும் நோக்கில் ஆசிரியர்கள் பல மொழிகளையும் (Language mixing) வகுப்பறைக் கற்பித்தலில் பயன்படுத்துவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது.
தற்போதுகூட ஆங்கிலவழியில் பட்டப்படிப்புகளைப் படிப்பவர்கள் தத்தமது தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
தாய்மொழிக் கல்வி குறித்தான புரிதலை உருவாக்குவதும் அரசுப் பள்ளிகளை நோக்கி வசதியான பெற்றோர்களை வரவைக்கும்.
– சு.மூர்த்தி | ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு;
தொடர்புக்கு: moorthy.teach@gmail.com
நன்றி: தமிழ் இந்து திசை.