4-வது நாளாகத் தொடரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய, மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது.

இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது.

மேரிகோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தது. இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.

பாலியல் தொல்லை தொடர்பான தங்களின் புதிய புகார் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாததை கண்டித்தும், ஏற்கனவே நடைபெற்ற விசாரணை குழுவின் அறிக்கை விவரத்தை கோரியும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பாலியல் குற்றச்சாட்டு புகார் குறித்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது முதல் தகவலறிக்கை பதியப்பட வேண்டும் என கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்றும் அந்த மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடும் படியும் உத்தரவு பிறப்பித்தனர்.

அதோடு மனு தாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத அடிப்படையில் நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

You might also like