எழுத்து வடிவில் வெளியாகும் வரலாற்றுப் புனைவுகளே அதிகமும் சர்ச்சைகளைச் சந்திக்கும் காலமிது. அப்படியொரு சூழலில் காட்சிமொழியில் அதனைத் தர துணிவும் தெளிவும் வேண்டும். அது நேர்த்தியான படைப்பாகவும் அமைந்தால், மேலும் ஒரு அதிசயம்.
தரணி ராசேந்திரன் இயக்கிய ‘யாத்திசை’ பார்க்கையில், அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்த முற்பட்டதாகவே தோன்றியது. சரி, எப்படியிருக்கிறது அந்த அனுபவம்?
ஏழாம் நூற்றாண்டு கதை!
சேர, சோழர்களை வென்று, பல சிறு குடிகளைத் தனது தலைமையை ஏற்கச் செய்து வெற்றி வேந்தனாக விளங்குகிறார் பாண்டிய அரசைச் சேர்ந்த ரணதீரன் (சக்தி மித்ரன்).
கிரேக்கர்கள், அரேபியர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் காரணத்தால், அவர்களைத் தன் காவலுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.
யாராலும் வெல்ல முடியாத வீரனாக விளங்கும் ரணதீரன் சோழ நாட்டிலுள்ள கோட்டையைக் கைப்பற்றி, அங்கிருந்து ஆட்சியைத் தொடர்கிறார்.
அவரை வீழ்த்திக் கோட்டையைத் தன்வசப்படுத்த எண்ணுகிறார் எயினர் குடியைச் சேர்ந்த கொதி (சேயோன்).
எயின தலைவர் முதல் பலரும் எதிர்க்கருத்து தெரிவித்தபோதும், தன் நிலையில் உறுதியாக இருக்கிறார் கொதி.
ஏனென்றால், தாங்கள் நாடிழந்து பாலை நிலத்தில் அகதிகளாக வாழ்வதற்கு ரணதீரனே காரணம் என்ற கோபம் சிறு வயது முதல் அவரிடம் இருந்து வருகிறது.
வெறும் ரௌத்திரத்தை வீரமென்று நம்பாமல், துரத்தப்பட்ட சோழ நாட்டின் தலைமையைத் தேடிக் கண்டுபிடித்து உதவி கேட்கிறார் கொதி.
கோட்டையைக் கைப்பற்றிய சேதி வந்ததும் 20,000 வீரர்களைத் தந்து உதவ வேண்டும்; ஓராண்டுக்குப் பிறகு, அந்த கோட்டை சோழர் வசம் ஒப்படைக்கப்படும்.
பதிலுக்கு, எயினர்களுக்குத் தனிநாடும் அடிமையல்லாத வாழ்க்கையும் வேண்டும் என்பதே கொதி மேற்கொள்ளும் ஒப்பந்தம்.
அதன்படி, எயினர் குடி போருக்குத் தயாராகிறது. மலைக்கோயிலுக்கு ரணதீரன் செல்லும் வேளையில், நாலாபக்கமும் இருந்து தாக்குதல் நடத்திக் கோட்டையைக் கைப்பற்றுகிறது.
ஆனால், காவலர்களின் உதவியோடு ரணதீரன் தப்பிவிடுகிறார்.
எயினர்களை எதிரியாகக் கருதும் பெரும்பள்ளிப் படைத் தலைவிடம் உதவி கோருகிறார்.
ஆயிரக்கணக்கில் இருக்கும் எயினர் படையைத் தோற்கடிக்க, பல்லாயிரம் பழங்குடி வீரர்களை வழங்குவதாக அத்தலைவியும் உறுதியளிக்கிறார்.
அதேநேரத்தில், உதவி கேட்டு கொதி அனுப்பும் தகவல் சோழர் தலைமையிடம் உரிய நேரத்தில் சென்று சேர்வதில்லை. அதன்பின் என்னவானது? வெற்றி பெற்றது கொதியா, ரணதீரனா என்று சொல்கிறது ‘யாத்திசை’.
தொடக்கம் முதலே படம் பார்ப்பவர்களுக்கு, யார் வெற்றி பெறுவார் என்பது எளிதாகத் தெரிந்துவிடும். ஆனாலும், இயக்குனர் தரணி ராசேந்திரன் கதை சொல்லும் முறை அந்த எண்ணத்தை மழுங்கடித்து விடுகிறது.
கொதியையும் ரணதீரனையும் வீரர்களாகக் காட்டிய இயக்குனர், அவர்களை மிக நல்லவர்களாக ஓரிடத்தில் கூட குறிப்பிடவில்லை.
ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகக் காட்டப்படும் இக்கதை, ஒரு வரலாற்றுப் புனைவு. அதேநேரத்தில், இதுவரை நாம் திரையில் பார்த்த அரச புனைவுகளில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது என்பதுதான் ’யாத்திசை’யின் சிறப்புகளில் தலையாயது.
குறைந்த செலவில் பிரமாண்டம்!
கொதியாக சேயோன், ரணதீரனாக சக்தி மித்ரன், தேவதாசிப் பெண்ணாக ராஜலட்சுமி, எயினர் குடி பூசாரியாக குரு சோமசுந்தரம், பெரும்பள்ளி குடி தலைவியாக சுபத்ரா மற்றும் சந்திரகுமார், செம்மலர் அன்னம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
குரு சோமசுந்தரம், சுபத்ரா இருவர் மட்டுமே நமக்குத் தெரிந்த முகங்களாக உள்ளனர். இவர்களைத் தவிர பெரும்பாலும் புதுமுகங்களே.
வெறுமனே மூர்க்கத்தையும் ஆத்திரத்தையும் காட்டுவது சக்தி மித்ரனின் பணி என்றால், மனம் முழுக்க வன்மத்துடனும் வேட்கையுடனும் திரியும் சேயோன் எளிதாக ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
தேவதாசிப் பெண்ணாக வரும் ராஜலட்சுமி கவர்ச்சி ததும்ப வந்தாலும், முகத்தில் வழியும் மென்சோகத்தின் வழியே தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபிக்கிறார்.
இவர்கள் தவிர்த்து பிராமண குருவாக வருபவரும் ரணதீரனின் பாதுகாவலர்களாக வருபவர்களும் கொதியின் சகாக்கள் சிலரும் கூடுதலாகச் சில நொடிகள் முகம் காட்டும் அவகாசத்தைப் பெற்றிருக்கின்றனர்.
பின்னணியில் நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களை ஆயிரக்கணக்கானவர்களாக விஎஃப்எக்ஸ் கொண்டு பெருக்கியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.
அதையும் தாண்டி, பட்ஜெட் குறைவு என்பதை பல இடங்களில் உணர முடிகிறது. சிறிது காலமும் பெரும்பணமும் விஎஃப்எக்ஸுக்காக செலவழிக்கப்பட்டிருந்தால், பறவைப் பார்வையில் காட்டப்படும் பல பிரேம்கள் அழகுற மிளிர்ந்திருக்கும்.
என்னதான் செலவு குறைவென்றபோதும், முகலாயர் பாணி மற்றும் எகிப்து பாணி ஆடை அணிகலன்கள், கோட்டை கொத்தளங்களைப் பிரதியெடுக்காமல் சங்கத்தமிழ் பாடல்களின் வழியே தமிழ்க் குடிகளின் வாழ்க்கைமுறையைத் திரையில் காட்ட உதவியிருக்கிறார் கலை இயக்குனர் ரஞ்சித் குமார்.
போலவே, மேக்கப் கலைஞர் வினோத் சுகுமாரனும், காஸ்ட்யூம் டிசைனர் சுரேஷ் குமாரும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
தேர்ந்த பிரேம்களின் வழியே காட்சிகளை விரித்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை தந்திருக்கும் சக்ரவர்த்தி, மேற்கத்திய வரலாற்றுப் புனைவு திரைப்படங்களில் இருந்து தாக்கம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
பழமையான இசைக்கருவிகளை அல்லது அது போன்ற ஒலித்தலைக் கலந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன் காட்சிகளைக் கோர்த்திருக்கும் விதம், ஒவ்வொரு காட்சிக்குமான கால அளவையும் சுருக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறது.
அதனால், முன்பாதியில் பல இடங்கள் நாம் என்னவென்று உணர்வதற்கு முன்பாகவே முடிந்துவிடுகின்றன.
இடைவேளைக்கு முன்பாக வரும் மோதல் காட்சி வெகுவாக நீண்டு போர்க்கள யதார்த்தத்தைப் புலப்படுத்தினாலும், யார் எங்கிருக்கின்றனர் என்பது தெளிவுறத் தெரிவிக்கப்படவில்லை.
எயினர் படை ஒற்றர்களைக் கொல்வது யார் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதபோது, படத்தொகுப்பில் அவை விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனைச் சரி செய்திருக்கலாம்.
சண்டைப்பயிற்சியைக் கையாண்டிருக்கும் ஓம் சிவ பிரகாஷ், தொடர்ச்சியாக மோதலைக் காட்சிப்படுத்துவதில் சில இடங்களில் தவித்திருக்கிறார். அதையும் மீறி, அவரது ஆக்கம் புதிய முயற்சிகளுக்கு வழிகாட்டுகிறது.
இந்த படத்தின் சிறப்புகளில் முதன்மையானது, குறுகிய பட்ஜெட்டில் தயாரித்திருப்பது; இப்படியொரு படத்தைத் தயாரிக்க முன்வந்தது அதைவிடவும் சிறப்பானது.
அந்த வகையில், தயாரிப்பாளர் கே.ஜே.கணேஷையும் இயக்குனர் தரணி ராசேந்திரனையும் பாராட்டியாக வேண்டும்.
சில குறைகள்!
தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்ற முறையில், களப்பிரர் காலத்து தமிழை எயினர்கள் பேசுவதாக அமைந்துள்ளது திரைக்கதை.
அதனால், பழந்தமிழ் ரசிகர்களுக்குப் புரியாமல் போய்விடக்கூடாது என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சப்டைட்டில் இட்டிருக்கின்றனர். இது நல்ல உத்தி.
அதேநேரத்தில், தமிழ் படத்தில் தமிழில் சப்டைட்டிலா என்ற கேலி எழ இது காரணமாகிறது. அதனைச் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு வேற்றுகிரக வஸ்துவாக இப்படத்தைக் கருத வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது.
தங்க வைர அணிகலன்கள், ஜொலிக்கும் பட்டாடைகள், மேற்கத்திய பாணி ஒப்பனை, பிரமாண்ட கோட்டைகள், பெரிய அரங்கங்கள், தமிழர் வாழ்வியலுக்குப் புறம்பான ஒளி விளக்குகள் என்றே இதுவரை தமிழ் திரையில் வரலாற்றுப் புனைவுகள் மிளிர்ந்திருக்கின்றன. அவற்றில் இருந்து பலவிதங்களில் விலகி நிற்கிறது ‘யாத்திசை’.
இப்படத்தில் பெரும்பாலான ஆண்கள் மேலாடை இன்றி கோவணத்துடன் திரிகின்றனர். தேவதாசிப் பெண்கள் அணிகலன்களையே மேலாடையாக அணிந்திருக்கின்றனர்.
பாண்டியப் பேரரசனின் போர்ப்படை முகாம் ஓலைகளால் வேயப்பட்ட குடிசையாக உள்ளது. பழங்குடித் தலைவியின் மகளை மணக்கும்போது, ஓலையால் ஆன தாலியே அணிவிக்கப்படுகிறது.
இவ்வளவு ஏன், பாண்டியப் பேரரசன் இஸ்லாமியரைப் போலவே தரையில் அமர்ந்து வணங்குவதாகவும் ஒரு ஷாட் உண்டு.
தமிழர் வாழ்வில் நரபலி இருந்ததையும் சொல்லிச் செல்கிறது ‘யாத்திசை’.
போருக்குச் செல்லும் முன்பாக மனித பலி கொடுப்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
எயினர்களைப் போலவே பாண்டியர்களின் சார்பாகவும் அது நிகழ்த்தப்படுவதாகக் காட்டப்பட்டிருப்பது, வெற்றிகளை ஈட்ட அரசர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருபபர்கள் என்பதை உணர்த்துகிறது.
மையக்கதைக்குத் தேவையில்லாதபோதும், அப்போதிருந்த வாழ்வு முறை தகவல்களைப் பதிவு செய்யும் உத்வேகம் தென்படுகிறது. போலவே, போர்க்காட்சிகளில் வன்முறை எண்ணம் படர்ந்திருக்கிறது. திரையில் கோரம் காட்டப்படாதபோதும் பார்வையாளர்களால் அதனை உணர முடியும்.
பொழுதுபோக்கு நோக்கில் ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு, இதெல்லாம் அலர்ஜியை ஏற்படுத்தும்.
ஆனால், இப்படத்தில் கொட்டப்பட்ட உழைப்பையும் அதனால் திரையில் கிடைத்திருக்கும் விளைவையும் புறக்கணித்துவிட முடியாது.
முடிந்தவரை, கோர்வையாகக் கதை சொல்லி திரையில் இருந்து கண்களை விலக்காமல் இருப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறார் தரணி ராசேந்திரன்.
இன்னும் பல பாகங்கள் இதே கதையில் வரலாம் என்ற உறுதியையும் தருகிறார்.
நிச்சயம் ‘யாத்திசை’யின் வரவு, தமிழில் வரலாற்றுப் புனைவுகளைச் சொல்வதில் ஒரு திருப்பமாக இருக்கும்.
இதுவரை வெற்றி பெற்றவர்களுக்கே பரணி பாடப்பட்டிருக்கும் நிலையில் ‘யாத்திசை’ பெருந்தோல்வியற்றவனுக்கான பரணியாகவும் அமைந்திருக்கிறது. அந்த எண்ணவோட்டத்திற்கு ஆயிரமாயிரம் வந்தனங்கள்!
– உதய் பாடகலிங்கம்