அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி. பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.
ஒபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் இரண்டு நாட்கள் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனோஜ் பாண்டியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ஒபிஎஸ் அணி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, “பொதுச் செயலாளர் நடவடிக்கைகள் பொதுக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என விதி உள்ளது எனவும்
எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது எனவும் ஒட்டுமொத்த அடிப்படை தொண்டர்களின் ஒருமித்த குரலாகத்தான் பொதுகுழுவை கருத வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாதங்கள் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பில்லை எனவும் எனவே, வழக்கை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் தெரிவித்தனர்.