அட்சய திருதியை: தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில், அட்சய திருதியையொட்டி சனிக்கிழமை ஏப்ரல் 22 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச் சென்றனா்.

வழக்கமாக, அட்சய திருதியையொட்டி தங்கம் விலை உயா்ந்து காணப்படும். ஆனால், நிகழாண்டு அட்சய திருதியைக்கு தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5605-க்கும், பவுன் ரூ.44,840-க்கும் விற்பனையானது.

இதனால், தங்க நகைகளை வாங்க மக்கள் அதிக ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்துப் பேசிய, சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால்,அட்சய திருதியையொட்டி மக்கள் ஆா்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனா்.

இதனால், கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வரை விற்பனை அதிகரித்திருந்தது.

கடந்தாண்டு அட்சய திருதியையொட்டி, ரூ.9,000 கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இரண்டு நாட்களில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 20 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது என்றாா்.

You might also like